சகலன் என்றவன் தன் மனைவி சுகலையுடன் குரு தீர்த்தம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். திருமணமாகி வெகு காலம் ஆகியும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. சில வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு பன்னிரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். பல வருடங்களுக்கு பிறகு பிறந்ததால் கணவன் மனைவி இருவரும் குழந்தைகளை கண்டிக்காமல் அவர்கள் போக்கிலே வளர்த்துவந்தனர். பின் பெற்றோர் இறந்துவிட, பன்னிருவரும் தங்கள் போக்கில் சென்று தீய செயல்களில் ஈடுபட தொடங்கினர்.
ஒரு நாள் வேட்டையாடுவதற்கு காட்டிற்கு சென்றபோது அங்கு ஒரு முனிவரை பார்த்தனர். அவர்கள் முனிவரை சுற்றி நின்று கொண்டு கேலி செய்ததுமட்டுமல்லாமல், கையில் கிடைத்த பொருள்கள், கல், என எல்லாவற்றையும் அவரின் மேல் எறிந்தனர். இதனால் கோபமுற்ற முனிவர் தவத்திலிருந்து எழுந்தார்.
தன் தவத்தை கலைக்கும் விதமாக கீழ்த்தனமான செயல்களை செய்த அவர்களை நோக்கி முனிவர் மண்ணை தோன்றும் பன்றிகளாக பிறந்து, பிறகும் போதே உன் பெற்றோரையிழந்து பசியால் வாடுவாயாக என சாபமிட்டார். தங்கள் தவறை உணர்ந்த அவர்கள் முனிவரை வேண்டி, சாபவிமோசனம் தருமாறு கேட்டுக்கொண்டனர்.இளைஞர்களை மன்னிக்கும் விதமாக முனிவர் அவர்களிடம் நீங்கள் பசியால் வாடும் சமயம் சிவபெருமானே உங்களுக்கு வந்து பால் கொடுப்பார். உங்களின் முகம் மட்டும் பன்றியை போல இருந்து நீங்கள் பிறகு மனித பிறவியை எடுப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பாண்டியனின் மந்திரிகளாகவும் வலம் வருவீராக எனக் கூறி அவர்களை ஆசிர்வதிர்த்து தியானத்திற்கு சென்றார்.
முனிவரின் சாபத்தினால் பன்னிருவரும் பன்றிகளாக பிறந்தனர். கொம்பன் என்ற பன்றியே குட்டிகளை ஈன்றது. அந்த பன்றிக்கே பன்னிருவரும் பிறந்தனர். ஒரு நாள் பாண்டியன் வனத்திற்கு வேட்டையாட வந்த சமயம், இந்த கொம்பன் பன்றியையும், அதன் துணை பன்றியையும் தன் வலிமை பலத்தினால் போரிட்டு வேட்டையாடினான். அந்த இடமே அன்றிலிருந்து பன்றி மலை என பெயர்பெற்றது. அந்த மலைக்கு தேவர்களும், முனிவர்களும் சென்று தவத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
பெற்றோரை இழந்த பன்றி குட்டிகள் பால் இல்லாமல் பசியால் வாடிக் கொண்டிருப்பதைக் கண்ட சிவபெருமான், தாய் பன்றியை போல உருவெடுத்து பன்னிரண்டு குட்டிகளுக்கும் பால் ஊட்டி பசியாற்றினார். சிவபெருமானின் அருளால் பன்னிருவரும் மனித உருவெடுத்து, பன்றி முகத்துடன் மாறினர். தாயை இழந்த குட்டிகளுக்கு பால் கொடுத்து பசி ஆற்றியதே ஈசனின் 45 - ஆம் திருவிளையாடல்.
இறைவனின் 45 - ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் பாவங்கள் தொலையும். மகப்பேறு உண்டாகும். வீட்டில் பாலிற்கு பஞ்சமிராது.