காலாங்கி நாதரே திருமூலச் சித்தரின் சீடர்களுள் முதன்மையானவர் ஆவார். இவர் சீன நாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
போகர் தம் சத்த காண்டம் 7000 என்ற நூலில் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்த இவரை பற்றிய பல அரிய செய்திகளை கூறியுள்ளார்.
இவரை திருமூலர் தவம் செய்யும்போது ஆடாமல் அசையாமல் தறிபோல் இருந்ததால் "கந்துருங் காலாங்கி" என்று அழைத்தார்.
காலாங்கி நாதரின் பல பெயர்கள் - காற்றையே உடலாக கொண்டவர், காலனை போன்று நெருப்பானவர், காலனால் நெருங்க முடியாதவர்.
இவர் காலத்தை ஆடையாய் அணிந்து கால கால விதானத்தையே தாண்டி நிற்பவர்.அனைத்து ஜீவன்களுடைய கர்ம வினைகளை எல்லாம் அங்கியாகத் தம் உடலிலே ஏற்று கொண்டு ஜீவன்களை கர்ம தளையிலிருந்து விடுப்பவர்.
கஞ்சமலையில் கலியுக மக்களை உணவின் நச்சுத் தன்மையிலிருந்தும், தீவினைச் சுழல்களிலிருந்தும் காக்க வேண்டி ஜீவாலயம் பூண்டுள்ளார். இவர் அன்னமய கோசத்தின் பரிபாலனத்தை கொண்டுள்ள சித்புருஷர்களுள் தலைமையானவராக விளங்குபவர்.
காய கல்ப வித்தைகள் பல கண்டவர் இவர். இவருக்கு கோபமே வராதாம்.இவருக்கு செல்வத்தின் மேல் ஆர்வமே இல்லை. இவர் கூடு விட்டு கூடு பாய்வதில் வல்லவர். அடுத்தவர்கள் கண்களில் கண்ணீர் வருவதை பொறுக்காத இவர் அவ்வப்போது சமாதியில் ஆழ்ந்துவிடுவார்.
இப்படி ஒரு சமயம் தன்னிலை மறந்து சமாதியில் ஆழ்ந்த இவரின், காலங்கள் பல கடந்தன. இவற்றை கண்டதிருமூலர் தன் மாணவனை அன்போடு, "காலாங்கி! நம்மரபு வழிவழியாக வளர வேண்டுமா? என்னிடம் உரிமையோடு நீ பெற்ற உபதேசத்தை நல்லவர்களுக்கு உணர்த்து, உன் கடமையைச் செய்" என கட்டளையிட்டார்.
குருவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவரை வணங்கி விட்டு கிளம்பினார். ககன குளிகையின் மூலம் நல்லவர்களுக்கு உலகெங்கும் ஞான உபதேசம் செய்தார்.
பூவுலகின் ஒரு பகுதியில் பிரளயம் (கடல் கொந்தளிப்பு) ஏற்பட்டது. மரம், செடி, கொடிகள் முதலிய அனைத்தும் பூவுலகில் மூழ்கிக்கொண்டிருந்தது. இதை உணர்ந்த இவர் ஆகாயத்தை தொடும்படியாக வளர்ந்திருந்த பெரிய மலையின் மேல் ஏறினார். இவருக்கு முன் அங்கு பல உத்தமமான சித்தர்கள் இருந்தார்கள்.
மகிழ்ச்சியில் காலாங்கி நாதர் தனக்கு தெரிந்த காய கல்ப பயிற்சியை கற்று கொடுத்து விட்டு, பின் அவர்களிடம் பலவற்றை கற்றுக் கொண்டார்.
மலைக்கு செல்லும் வழியில் ஒரு குலத்தின் கரையில் புலி ஒன்றை பார்த்தவுடன் அதன் அருகில் சென்றார். பின், அது புலியல்ல ஒரு சித்தர் புலி உருவத்தில் படுத்துள்ளார் என்பது இவருக்கு தெரிந்தது.
அச்சித்தரை வணங்கிய இவருக்கு உபதேசம் செய்து விட்டு உடனே மறைந்தார்.
மலையில் சுனை ஒன்றை பார்த்தபோது அதன் அருகில் மீனின் உடலும், மனித முகமுடைய ஒரு ரிஷி தவத்தில் இருப்பதை கண்ட இவருக்கு அந்த உருவம் மச்சரிஷி என்பது தெரிந்தது. பின் அவரை வணங்கி தவத்தை தொடங்கினார்.
ஒரு நாள் தவநிலையில் இருக்கையில் மனிதமுகமும் ஆமை உடலுமாய் இருந்த ரிஷியை கண்டு வணங்கும்போது அவர் தன் கருணை மிகு கண்களை காலாங்கி நாதர் மீது செலுத்தி பிரளய வெள்ளத்தில் இறங்கி மறைந்தார்.
இதேபோல் வராக வடிவில் இருந்த சித்தரை வணங்கினார். அச்சித்தர் "அப்பா காலாங்கி! காலம் பல கண்டவன் நான் ஆனால் இதுவரை என்னை யாரும் அறிந்தது கிடையாது. புனிதமான உன்னுடைய கண்களுக்கு மட்டுந்தான் நான் தெரிந்திருக்கிறேன். சோர்வில்லாமல் தவம் செய்யும் உனக்கு ஆதிமனோன்மணி அருள்புரிவாள், பரமனும் அருள்புரிவான் " என கூறி ஞான உபதேசம் செய்து சமாதி நிலையில் ஆழ்ந்தார்.
இதே போலவே, சதுரகிரி மலையின் பல பகுதிகளுக்கு சென்று, அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் சிங்கச்சித்தர், வாமன சித்தர், பரசுராம சித்தர்,ராம சித்தர், கிருஷ்ண சித்தர், கல்கி முகச்சித்தர், வேதவியாசர், மிருகண்டேயர், பதஞ்சலி, நாதரிஷி, அத்திரி, குதும்ப சித்தர், பாம்பாட்டிச் சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்ற பல முனிவர்களையும், சித்தர்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.
தனது ஞான விந்த ரகசியம் 30 என்னும் நூலில் சதுரகிரி மலையில் மேற்கொண்ட தவத்தை பற்றியும், அவர் பெற்ற சித்திகளை பற்றியும் கூறியுள்ளார்.
"குன்றந்தச் சாய்வோராம் செல்லும்பாதை
கூடினால் நவசித்தர் குகை ஒன்றுண்டு,
நின்றந்த சித்தர்களை மனத்துள் எண்ணி
நிதானமாய் அவ்வழியே போக வேண்டும்
ஒன்றந்த வழிவடக்கே கொஞ்சந்தூரம்
உயர்ந்திருக்கும் மலையருகே குகையைப் பாரே.
பாரப்பா அக்குகையின் உள்ளே செல்லப்
பாம்பாட்டி சித்தரும் அங்கிருப்பார்
தேரப்பா நீ வணங்கி அதன் மேற்காகத்
திரும்பவே அத்திரியின் குகை தானுண்டு."
பாதை வழி நேராய் நாதாந்த சித்தர்
பதியான குகை தெரியும் பார்த்துக் கொண்டு
வேதை நீ அடையாமல் உள்ளே சென்றால்
வேதாந்தச்சித்தருடன் குதம்பைச் சித்தர்
போதையுள்ள ஞானச்சித்தர் அடி வணங்கி
போற்றி விடைபெற்றுவர மிருகண்டேயர்
வாதையில்லா வழியில் மகாதவமே செய்து
மகப்பேறு பெறுவதற்குத் தவம் செய்தாரே"
சதுரகிரியில் இவர் தவம் செய்த்தபோது வணிகர் ஒருவர் இவரை தரிசித்து, தான் ஒரு சிவாலயம் கட்டி கொண்டிருப்பதாகவும், தன்னுடைய அனைத்து சொத்துக்களை விற்றும் சிவாலயம் முடிவு பெறாமல் உள்ளதாகவும், அதற்கு தாங்கள் அருள வேண்டும் என கேட்டு கொண்டார்.
மௌனம் காத்த இவரை விட்டு வணிகன் நகரவேயில்லை. அவருக்கு பணிவிடைகள் அங்கேயே இருந்து செய்தான். சதா எந்த நேரமும் கோவில் கட்டுவது பற்றியே நினைத்து கொண்டிருந்த அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கேயே இருந்தான்.
அதை கண்ட காலாங்கி நாதர், மலையின் உச்சிக்கு சென்று பல அறிய மூலிகைகளை கொண்டு ஒரு தைலம் உருவாக்கி பின் அதன் மூலம் பொன்னை உருவாக்கினார். உனக்கு எவ்வளவு பொன் வேண்டுமோ எடுத்துக்கொள் என கூற அவர் தேவையானவற்றை எடுத்து சென்று சிவாலயம் கட்டி முடித்தார். மேலும் மேலும் பொங்கியதை கண்டு தங்கம் உருவாக்கும் தைலத்தை கிணற்றில் தேங்க செய்து, அது தீயவர்களிடம் கிடைக்கப் பெறாமல் இருக்க 4 திசைகளிலும் வராகி,காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் முதலிய தெய்வங்களை காவலுக்கு வைத்து விட்டு வேறு இடத்திற்கு தவம் செய்ய புறப்பட்டார். இது பற்றி சதுரகிரித்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இவர் இயற்றிய நூல்கள் - காலாங்கி வைத்திய காவியம் 1000 , காலாங்கி ஞான சாராம்சம் 500 , காலாங்கி வராகத் திரவியம் 200 , காலாங்கி ஞானம் 180 ,காலாங்கி கற்பவிதி 84 , காலாங்கி ஞான பூஜாவிதி 80 , காலாங்கி தண்டகம் 80 ,காலாங்கி பகரணி 51 , காலாங்கி இந்திரஜால ஞானம் 46 , காலாங்கி சூத்திரம் 33 ,காலாங்கி ஞான விந்த ரகசியம் 30 , காலாங்கி ஞான சூத்திரம் 29 .
போகர் காலாங்கி நாதர் சீனாவிற்கு அடிக்கடி சென்றதாகவும், அங்கேயே சமாதி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
காலாங்கி நாதரிடம் அருள் பெற்றவர்களும் போகரும் கமலமுனியும் முக்கியமானவர்கள். போகர் தனது குருநாதராக காலாங்கி நாதரின் சமாதியை தரிசிக்கவே அடிக்கடி சீனாவிற்கு சென்றதாக அவர் பாடங்களின் மூலம் அறியலாம்.
சீனாவில் முக்காத கோட்டையின் மேற்கு புற வாசலில் உள்ள காலாங்கி நாதரின் சமாதி முன் கை கூப்பி வணங்கியவுடன் கதவு திறக்கிறது, வாத்தியங்கள் முழங்குகின்றன, ஒளிமயமாக தோன்றி போகருக்கு தரிசனம் தருகிறார்.
போகர் தனது"போகர் ஜனனஸாகரம்" என்னும் நூலில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அவர் முக்தி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அகஸ்திய விஜயம் என்ற நூலில் காலாங்கி நாதரின் ஜீவாலயம் சேலம் அருகில் கஞ்சமலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரம்ம மூர்த்தியின் சிருஷ்டி தத்துவத்திற்கு பல தெய்வீக தூண்களை சிவஜோதியாய் விளங்கும் ஸ்ரீ காலாங்கி நாதர் அமைத்து தந்துள்ளார். திருவீழிமலையில் இறைவனின் திருமண வைபவப் பந்தக்கால் உள்ளது போல பிரம்மலோகத்திலும் "காலாங்கி நாதக்கால்" என்ற வில்வமரத்த்தூண் இருக்கிறது.
ஜோதிமயமாக உள்ள ஸ்ரீ காலாங்கி நாதர் தான் பூலோகம் முழுவதிலும் சகல கோடி அண்டங்களிலும் வளம் வந்து மீண்டும் இதில் தினமும் உறைந்து கொள்கிறார் என்ற ஒரு ஆன்மீக இரகசியம் கூறப்படுகிறது.
தனது ஞான விந்த ரகசியம் 30 என்னும் நூலில் சதுரகிரி மலையில் மேற்கொண்ட தவத்தை பற்றியும், அவர் பெற்ற சித்திகளை பற்றியும் கூறியுள்ளார்.