திருவிளையாடல் புராணம்

வட ஆலவாய் தோன்றல்

செண்பகப் பாண்டியனுக்கு பிறகு பிரதாப சூரியன், வமிசத்துவஜன், ரிபு மருத்தனன், சோழ வமி சாந்தகன், சேரவம்சாந்தகன், வம்சசிரோமணி, பாண்டியேச்வரன், குலத்வஜன், வம்ச விபூசணன், சோம sudamani, குல சூடாமணி, ராஜ சூடாமணி, பூப சூடாமணி என்ற பதின்மூன்று அரசர்களும் அரசாண்டு வந்தனர்.

கபிலர், நக்கீரர் போன்றோர்களின் காலம் முடிவடைந்த நேரத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு உண்டாகி வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் தணிந்து நாடு பழைய நிலைக்கு திரும்பியதும் பாண்டிய மன்னனாக குலேசன் பொறுப்பேற்றான். குலேசன் இலக்கணங்களை கற்று கைதேர்த்திருந்தான். வெள்ளம் வந்தாலும் புலவர்கள் இயற்றிய நூல்கள் அனைத்தும் அழியாமல் இருந்தது. மன்னன் பாணர், கபிலர் போன்றோர் எழுதிய நூல்களையும் கற்றறிந்து வந்தான். மன்னரது காலத்தில் இடைக்காடர் பெரும் புலவராக சிறப்புக் பெற்றிருந்தார். அவர் பாடல்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. அவர் ஒரு முறை பாண்டியனின் அவைக்கு வந்து தான் கற்றிருந்த இலக்கணங்களை உபயோகித்து சிறந்த பாடல்களை இயற்றி அவையில் பாடினார். அவரின் பாட்டில் மயங்கி போன மன்னன் தன்னை விட சிறந்து விளங்கிகிறார் என நினைத்து பொறாமையினால் அவரின் பாட்டு திறமையை இகழ்ந்து பேசி அவரை அவையை விட்டு வெளியேற்றிவிட்டார்.

மன்னனின் இச்செயலால் மனம் நொந்த புலவர் ஆலயத்திற்கு சென்று இறைவனை வேண்டி சோமசுந்தரநாதனே! விறகு விற்கும் கிழவனாக சென்று பாடல் பாடி ஏமநாதனை பயத்தில் ஆழ்த்தியவனே! தற்போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நீயே அறிவாய். என்னுடைய பாட்டு திறமையை கண்டு பாண்டிய மன்னன் தன்னுடைய பொறாமையின் காரணமாக என்னை இகழ்ந்து வெளியே அனுப்பிவிட்டான் எனக் கூறி முறையிட்டான். இடைக்காடரின் புலம்பலைக் கேட்ட சுந்தரர் உடனே வைகையின் தென்கரையில் திருக்கோவிலை உண்டாக்கி அங்கு எழுந்தருளினார். தான்

ஏற்கனவே இருந்த கோவிலை விட்டு வேறு இடத்தில் எழுந்தருளி உள்ளதை சோமசுந்தர மூர்த்தி சங்கப்புலவர்களின் கனவில் சென்று கூறி விட்டார். இதை அறியாத பட்டர்கள் காலையில் கோவிலை திறந்த போது அங்கு லிங்கத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்து விஷயத்தை மன்னனிடம் சென்று முறையிட்டனர். அனைவரும் இதை நினைத்து வருந்திக் கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் அவைக்கு ஓடி வந்து மன்னா, என்றும் இல்லாத அதிசயமாக வைகையின் தென்கரையில் ஒரு கோவில் தோன்றி இருக்கிறது என்றும், இதை முன்னரே அறிந்த புலவர்கள் அனைவரும் அந்த புதிய கோவிலின் முன் கூடி இருக்கின்றனர் எனக் கூறினான். இதை அறிந்த மன்னர், பட்டர்கள், ஊர் ஜனங்கள் அனைவரும் இறைவனை காணும் ஆவலில் வைகை கரை நோக்கி செல்ல தொடங்கினர். வந்தவர்கள் ஈசனை குறித்த பதிகங்கள் பாடி வணங்கி, மலைகளை புஜங்களாக உடையவரே! குமரக்கடவுளின் தந்தையே! பொற்றாமரைக் கரையில் விமானத்தின் அடியிலிருந்து இப்போது இங்கே வர காரணம் என்ன? நாங்கள் செய்த தவறை எங்களுக்கு சுட்டிக்காட்டுவாயாக. இரவோடு இரவாக தாங்கள் இங்கே வர காரணம் என்ன? நாங்கள் செய்த தவறை எடுத்துக் கூறாவிட்டால் நான் இப்போதே என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என கூறிய பாண்டிய மன்னன் உடனே தன் வாளை உருவினான். 

வாளை எடுத்த பாண்டிய மன்னனை ஈசன் தடுத்தார். தடுத்தவர் பாண்டியனிடம் பாண்டியனே! இடைக்காடரின் பாட்டு திறமையினால் மயங்கி போன நீயே உன்  கர்வத்தினால் அவரை இகழ்ந்து அவையை விட்டு வெளியே அனுப்பி அவமதித்தது என்னை அவமதித்ததற்கு சமம். இதனாலே நான் அங்கிருந்து இங்கு வந்தேன். உன் கண்களுக்குத்தான் நான் புலப்படாமல் இருக்கிறேனே தவிர அதே இடத்தில் தான் இருக்கிறேன். அங்கு மட்டுமல்லாமல் நான் வடக்கில் வைகை கரையில் குபேரலிங்கமாகவும், மேற்கில் வருணேசுஸ்வர லிங்கமாகவும், வடமேற்கில் வாயுவீசுவர லிங்கமாகவும், தென்கிழக்கில் அக்கினீஸ்வர லிங்கமாகவும், வடகிழக்கில் ஈசான லிங்கமாகவும் இருந்து அனைவரையும் காத்து வருகின்றேன்.

இப்போது இந்திரனால் பூஜிக்கபட்டு உங்கள் அனைவரின் கண்களிலிருந்து மறைந்தது இந்திரலிங்கம். இப்போது இன்று தோன்றியிருக்கின்றது சுயம்பு லிங்கம் எனவே இந்த இடம் இன்று முதல் வட ஆலவாய் என்ற பெயரால் அழைக்கப்படும். மேலும் சுயம்பாக தோன்றிய லிங்கத்தை தினமும் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் எனக் கூறி மறைந்தார். இறைவன் கூறியதை ஏற்ற மன்னன் தான் செய்த தவறை நினைத்து வருந்தினான். பின் அவைக்கு வந்து இடைக்காடரை தான் காவலர்களை விட்டு வரழைத்து வரும்படி கட்டளையிட்டான். அவைக்கு வந்த இடைக்காடரின் பாட்டு  திறமைக்கு தகுந்த பரிசைக் கொடுத்த மன்னன் தன் தவறை நினைத்து அவரிடம் மன்னிப்பும் கேட்டார். இடைக்காடரும் மன்னரின் அறியாமையை போக்கி அவருக்கு ஆசி வழங்கினார். பின் மன்னனுக்கு சோமசுந்தர மூர்த்தியின் அருளால் அரிமர்த்தனன் என்ற மகன் பிறந்தான்.

இடைக்காடருக்காக இறைவன் கோவில் கொண்டதே ஈசனின் 56 - ஆம் திருவிளையாடல். இறைவனின் 56 - ஆம் திருவிளையாடலைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கல்வி, செல்வம், நல்ல மனைவி போன்ற அனைத்தையும் பெற்று மகிழ்வர்.