திருவாதவூரில் சுந்தரநாதர் என்ற ஒரு உத்தமர் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மேல் பக்திக் கொண்டவர். அவருக்கு திருவாதவூரர் என்ற ஒரு மகன் பிறந்தான்.
திருவாதவூரர் தன்னுடைய பதினாறு வயதினிலே அனைத்து கலைகளையும் கற்று சிறந்திருந்தார். அவரின் திறமையை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் அவனை தன் முதல் அமைச்சராக ஏற்றுக் கொண்டார். வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதியை கவனித்துக் கொண்டு வந்த அவனுக்கு அரசன் வீடு, ஆடை, ஆபரணங்கள் என அனைத்தையும் கொடுத்து சிறப்பாக கவனித்து வந்தான். மேலும் அவன் யானை மற்றும் குதிரைகளை கவனித்தும் வந்தான். திருவாதவூராரும் அனைத்தையும் பெற்று அறவழியில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தான். தனக்கு வரும் பணத்தை வைத்து இறைவனுக்கு திருப்பணி பல செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.
ஒரு நாள் குதிரை படை தலைவர் மன்னரிடம் வந்து குதிரைகள் சில உடல் மெலிந்து காணப்படுகின்றன. சில குதிரைகள் நடக்க கூட சிரமப்படும் வகையில் உள்ளன. எனவே நம் குதிரை படைகளை பலப்படுத்துவதற்காக மேலும் சில குதிரைகளை வாங்கும் நிலைமை உருவாகிவுள்ளது எனக் கூறினான். இதை அறிந்த மன்னன் திருவாதவூரரை அழைத்து பொக்கிஷத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு குதிரைகளை வாங்கி வருமாறுக் கூறினார்.
மன்னனின் ஆணைப்படி திருவாதவூராரும் ஏவலர்கள் சிலருடன் குதிரை வாங்க தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
வந்தவர்கள் திருப்பெரும்துறையை அடைந்தனர். அப்போது அவர் ஏவலர்களை நோக்கி ஆடிமாதம் குதிரைகள் இந்த இடத்திற்கு வரும். நான் ஆவணி மாதத்தில் குதிரைகளை வாங்கிக் கொண்டு வருகிறேன் எனக் கூறி அவர்களை திரும்பி அனுப்பி வைத்தார். இச்சமயம் அவருக்கு திருப்பணி செய்வதற்கான வழி கிடைத்துவிட்டது. உடன் வந்தவர்கள் அனைவரும் சென்றுவிட, திருவாதவூரர் திருப்பெரும்துறை ஆலயத்திற்கு சென்று, குளத்தில் நீராடினர். அப்போது அங்கு இருந்த குருந்தமர நிழலில் சிவபெருமான் குரு வேடத்தில் அமர்ந்திருந்தார். அவர் சில மாணவர்களுக்கு வேதத்தின் பொருளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். சிவபெருமானைக் கண்ட அவர் பிரமித்து நின்றார். அவர் சிவபெருமானின் அருகில் வந்ததும், திருவாதவூராரை அமரும்படிக் கூறினார். அவர் வந்ததும் சிவபெருமான் ஸ்தூல பஞ்சாட்சரத்தையும், சூட்சும பஞ்சாட்சரத்தையும், வேதத்தின் பொருளையும் தெளிவாக விளக்கினார். இதைக் கேட்டதும் திருவாதவூரருக்கு மகிழ்ச்சி உண்டானது. ஏதோ புது அனுபவம் கிடைத்தது போல இருந்தது அவருக்கு. அப்போது அவர் மனமோ இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களையும் படைப்பதும் இறைவனே எடுப்பதும் இறைவனே; எந்த உயிர்களையும் துன்புறுத்துவது பாவம். நமக்கு கிட்டும் பொருளைக் கொண்டு பல நன்மைகளை செய்ய வேண்டும். பொருளை பிறகும் குழந்தைக்கும் கொண்டுவருவதில்லை இறக்கும் மனிதனும் எடுத்துக் கொண்டு செல்வதில்லை. எனவே பொருளை கொண்டு கோவிலை சீர் செய்யலாம் என நினைத்தது.
அவர் மனதிற்குள் நினைத்த சமயத்திலே சிவபெருமான் திருவாதவூரரிடம் நீ இங்கேயே சில காலங்கள் இரு எனக் கூறி தன் மற்ற மாணவர்களுடன் மறைந்துவிட்டார். இதை பார்த்த அவர் உள்ளம் மகிழ்ந்து பதிகங்கள் பாடி இறைவனை புகழ்ந்தார்.
உள்ளம் மகிழ்ந்திருந்த அவர் மனதிற்குள் அடுத்த வினாடியில் திருப்பெரும்துறை கோவிலை பற்றிய கவலை ஏற்பட்டுவிட்டது. கோவிலின் சுவர்கள் அனைத்திலும் விரிசல் உண்டாகி, கோவிலை சுற்றி செடி, கொடி என படர்ந்து காடு போல காட்சி அளித்தது. இதனால் கோவிலில் பூஜையும் நடப்பதில்லை. கோவிலில் இருந்த அனைத்து சிலைகளும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஆலயத்தின் வேலைகள் அனைத்தினையும் விரைவில் முடித்து பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரின் மனதில் தோன்றியது.
விரைந்து செயல்பட ஆரம்பித்தார். கோவிலுக்கு சென்று அங்குள்ள கோவில் நிர்வாகத்திடம் தன் ஆசையை கூறினார். அவர்கள் அனுமதி அளித்ததும் வேலையை ஆரம்பித்தார். அனைத்து சிலைகளுக்கும் வண்ணம் தீட்டி புதுமை ஊட்டினார். கோவிலை சுற்றி இருந்த செடி, கொடிகள் அனைத்தையும் அகற்றி, நந்தவனமாக மாற்றினார். இறைவனுக்கு தேவையான ஆபரணங்களை செய்துக் கொண்டு வந்தார்.
பல மாதங்களாக எரியாமல் இருந்த விளக்குகளை சுத்தம் செய்து, அவற்றில் எண்ணெய் ஊற்றி ஆலயத்திற்கே வெளிச்சத்தை உண்டாக்கினார். பின் அபிஷேகத்திற்கு தேவையான பாத்திரங்களையும் வாங்கி அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளையும் செய்தார். கோவிலில் ஒளியை உண்டாக்க மேலும் பல விளக்குகளை ஒளிர செய்து கோவிலை புதுப்பித்துவிட்டார். பிறகு பௌர்ணமி, மாதப்பிறப்பு போன்ற விசேஷ நாட்களில் அனைவர்க்கும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார். பூஜை செய்வதற்காக சில குருக்களையும் நியமித்தார். அனைத்து வேலைப்பாடுகளும் முடிந்த பிறகு திருவிழாவையும் சிறப்பாக நடத்தி முடித்தார்.
இப்படி தான் குதிரை வாங்க வைத்திருந்த அனைத்து பணத்தையும் கோவில் திருப்பணிக்காகவே செலவழித்துவிட்டார். நடந்த அனைத்து விஷயங்களும் மன்னனின் காதுகளை சென்று அடைந்தது. மன்னன் கோவத்தில் விரைவில் குதிரைகளுடன் நீ இங்கே வர வேண்டும் என ஒரு மடலை எழுதி அனுப்பி வைத்தார். மடல் திருவாதவூரை கைகளை வந்து அடைந்தது. மடலைக் கண்ட திருவாதவூரர் மனம் வருந்தி, ஆலயத்திற்கு சென்று இறைவனை வேண்டினார்.
திருவாதவூரர் வேண்டுதலை அறிந்த இறைவன் அசரீரி வடிவில் வந்து நீ எதற்கும் அஞ்சாதே;நீ மன்னருக்கு பதில் மடல் எழுது;மதுரைக்கு செல்; நீ சென்றதும் குதிரைகள் உன்னை வந்து அடையும் எனக் கூறி மறைந்தது.
அசரீரி கூறியபடியே அவரும் மன்னனுக்கு பதில் மடல் எழுதினார். மன்னா என் மேல் உள்ள கோவத்தில் சிலர் உங்களை தூண்டும் வகையில் உங்களிடம் சில மாற்றான தகவல்களை கூறுகிறார்கள். அவர்கள் கூறும் எதையும் நம்ப வேண்டாம், நான் இன்னும் சில நாட்களில் குதிரைகளுடன் உங்களை வந்து சந்திக்கிறேன். வருகின்ற குதிரைகளால் நம் படையும் வலிமை பெரும். விரைவில் வந்து சந்திக்கிறேன் என எழுதி மன்னருக்கு அனுப்பி வைத்தார்.
திருவாதவூரர் அனுப்பிய மடலை படித்த மன்னர் ஆவலுடன் அவரின் வருகைக்காக காத்திருந்தார். நாட்கள் சென்றன. திருவாதவூரர் மதுரை வந்தார். குதிரைகளை பற்றி வினவினார் மன்னர். அப்போது அவர் இறைவனை நினைத்துக் கொண்டு நான் வாங்கி வந்த குதிரைகளை போல நீங்கள் எங்கும் பார்த்திருக்க முடியாது எனக் கூற மன்னர் உள்ளம் மகிழ்ந்தார். திருவாதவூரர் கூறியதைக் கேட்டதும் மன்னனுக்கு குதிரைகளை காண ஆவல் உண்டானது.
பின் திருவாதவூரர் சுந்தரமூர்த்தியின் ஆலயத்திற்கு சென்று இறைவனை வேண்ட ஒரு அசரீரி விரைவில் குதிரைகளுடன் மதுரை வருகிறேன்; நீ எதற்கும் அஞ்சாதே எனக் கூறி மறைந்தது. இதைக் கேட்ட திருவாதவூரர் மகிழ்ந்து அவர் வீடு திரும்பிய சமயத்தில் அவர் வீட்டிற்கு வந்த ஒருவர், அவரிடம் நீ வைத்திருந்த பொருள்களை எல்லாம் ஆலயப்பணிக்காக செலவழித்துவிட்டாய் என்ற உண்மை மன்னர் அறிந்தால் எங்களை சிறையில் அடைத்து உனக்கு எவ்வளவு தந்தான்? உன் பங்கு எத்தனை? எனக் கேட்டு எங்களுக்கு தண்டனைகளை தர போகிறான். அரசனிடம் வேலை செய்வது கம்பி மேல் நடப்பதற்கு சமம். முன் சுந்தர சாமந்தனனுக்காக குல பூஷண பாண்டியனுக்கு சோமசுந்தரப்பெருமான் படைகளை திரட்டிக் கொண்டு வந்தார். இப்போது உனக்காக குதிரைகளை கொண்டு வருவது யார்? எனக் கேட்டான். இப்படி வந்தவர்கள் சிலர் அவரை கேலி செய்யும் விதமாக பேச ஆரம்பித்தனர்.
இதனால் மனம் நொந்த திருவாதவூரர் அரசனின் கடனை தீர்க்கவே நான் வந்துள்ளேன். மற்றவர்கள் பேசும் கேலிக்கு நான் அஞ்ச போவதும் இல்லை. கடனை திருப்பி அடைக்காமல் செல்வதாகவும் இல்லை என்றார். மேலும் வேதத்தின் பொருளை உணர்த்திய இறைவனுக்கு செய்த பணி தவறென்றால் அந்த தவறுக்கான தண்டனையை அந்த சரீரம் அனுபவித்துக் கொள்ளட்டும் எனக் கூறியதும் அனைவரும் தலை குனிந்து அங்கிருந்து சென்றனர். திருவாதவூராருக்கு உபதேசம் செய்ததே ஈசனின் 58 - ஆம் திருவிளையாடல்.
இறைவனின் 58 - ஆம் திருவிளையாடலைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் எல்லா நன்மைகளையும் பெற்று சிறந்து வாழ்வர்.