புலி(விலங்கு) என்ற தமிழ்ச் சொல்லும் பாணி(தண்ணீர்) என்ற இந்துஸ்தானி சொல்லும் சேர்ந்து புலிப்பாணி என்ற பெயர் உண்டானது.
இச்சித்தர் புலி ஒன்றை தன் வசியப்படுத்தி அதன் மேல் அமர்ந்து காட்டில் உள்ள மூலிகையை பறிப்பது வழக்கம்.ஒரு முறை போகர் குடிப்பதற்கு புலிப்பாணியிடம் தண்ணீர் கேட்க அவர் புலியின் மேல் அமர்ந்து வெறும் கையிலே தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து கொடுத்தார். புலி மேல் சென்று தண்ணீர் கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார்.
ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே
அப்பனே வேங்கை தனில் ஏறிக் கொண்டு
தாழ்த்திடவே ஜாலம் திரட்டிப் புனிதவானும்
சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன்.
(போகர் பன்னிரெண்டாயிரம்)
போகர் சீனாவில் இருந்த காலத்தில் சீனமக்களுக்கு தாம் கண்ட அதிசயங்களைக் கூறியதால், சீனத்துப் புலிப்பாணி இவரது சீடரானார்.
பிறகு பழனிமலை முருகன் கட்டளைக்கிணங்க தண்டாயுதபாணி சிலையை போகர் செய்வதற்கு தனது புலியின் மேல் ஏறி சென்று நவபாஷண மூலிகையை பறித்து வந்து கொடுத்து போகருக்கு கடைசிவரை மிக உறுதுணையாக இருந்தார் புலிப்பாணி.
முருகன் சிலையை உருவாக்கிய போகர், தன் சமாதி நிலையை அடைவதற்கு முன் பழனி தண்டாயுதபாணி பூஜையை கவனிக்க போகர் புலிப்பாணியை நியமித்து, பிற்காலத்தில் அந்த பெருமை புலிப்பாணியிடம் இருந்து பறிக்கப்பட்டு போகர் சமாதிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டார்.
சிலையை உருவாக்கிய பின் சீனா சென்ற போகர் தன் தவவலிமையை இழந்ததால், புலிப்பாணிச் சித்தர் அவரைத் தன் முதுகில் சுமந்து பழநியிலே அவருக்கு தவவலிமையை அளித்தார்.
போகரை விட புலிப்பாணிச் சித்தர் வைத்தியத்தில் சிறந்தவராகவே கருதப்படுகிறார்.
புலிப்பாணியின் நூல்கள்:
புலிப்பாணி சூத்திர நியானம் 12 , புலிப்பாணி பூஜா விதி 50 , புலிப்பாணி வைத்தியம் 500 , புலிப்பாணி சூத்திரம் 9 , புலிப்பாணி ஜோதிடம் 300 , புலிப்பாணி சண்முக பூஜை 30 , புலிப்பாணி ஜாலம் 325 , புலிப்பாணி சிமிழ் வித்தை 25 ,புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200 .