தன் வாழ்கை, சமயம், குடும்பம் போன்றவற்றை துறந்து இயற்கையோடு இணைந்து கடவுளை மூச்சாக நினைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் பல. இப்படிப்பட்ட சித்தர்களுக்கு வழிகாட்டியாய் குருவாக இருந்து ஞானத்தை போதிப்பவர்களும் உண்டு. சித்தர்கள் பலருக்கு ஞானத்தை போதிப்பதற்கு முதல் சித்தராக அவதரித்தவரே மதுரையின் சோமசுந்தரக் கடவுள் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
வீட்டை விட்டு காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து பல அரிய செயல்களை செய்து வரும் சித்தர்களுக்கு இவர் முன்னோடியாக உள்ளார். காடுகளிலுள்ள அரிய வகை மூலிகையின் மூலம் மருந்தை எடுத்து பல நோய்களை குணமாக்கியவர்களும் உண்டு. நீர்நிலைகளில் தண்ணீர் இல்லா சமயத்திலும் தண்ணீர் பெருக்கெடுக்க செய்து மக்களின் மனதில் இன்பத்தை ஏற்படுத்தும் சித்தர்களும் உண்டு. இப்படிப்பட்ட சித்தர்களின் சித்து விளையாட்டுகள் எண்ணிலடங்கா கணக்கில் உள்ளன . இப்படிப்பட்ட திருவிளையாடல்களை சோமசுந்தரக் கடவுள் சித்தர் வடிவில் செய்து கொண்டிருக்கிறார்.
சித்தரின் திருவிளையாடலை அறிந்த மதுரை மன்னர் அபிஷேக பாண்டியன் சித்தரை அழைத்து வருமாறு அமைச்சர்களுக்கு கட்டளையிட , அமைச்சர்களும் சித்தர் இடம் நோக்கி சென்றனர் .
மன்னரின் அழைப்பை தெரிந்து கொண்ட சித்தர் உமது மன்னரால் எமக்கு ஆக வேண்டியது என்ன? என கூறி வர மறுத்துவிட்டார். அமைச்சர்கள் சொன்ன தகவலை அறிந்த மன்னர் நான் சென்று போய் அவரை பார்க்காமல், அவரை இங்கு அழைத்து வர சொல்லிவிட்டேனே என தன் தவறை உணர்ந்து கோவிலுக்கு சென்று சோமசுந்தரக் கடவுளை வழிபட்ட சமயம் , பாண்டியனின் உள்ள குறிப்பை அறிந்த சிவயோகியாகிய சித்த மூர்த்திகள் அவனுக்கு முன்பாக இந்திர விமானத்திற்கு வடமேற்கு திசையில் எழுந்தருளினார்.
அரசன் வருவதை கண்டு மரியாதை செலுத்தாத சித்தரை காவலர்கள் துரத்த, சித்தர் சிரித்தார். சித்தரின் சிரிப்பு மன்னரை சிந்திக்க வைத்தது. பாண்டியன் சித்தரை நோக்கி எழுப்பிய வினா...
உமது நாடு எது?... எந்த ஊர்?... என்ன பேர்?... எதற்காக இங்கே இருக்கிறீர்?... சரமாரியாக கேள்விகள் எழுந்தன மன்னரிடமிருந்து.
சித்தர் மன்னரை நோக்கி வழங்கிய பதில் அப்பா! யாம் எந்த நாட்டிலும், எந்த ஊரிலும், திரிவோம். யாம் இப்போது வரை இருக்கும் தலம் காஷ்மீர் நாட்டிலுள்ள காசி மாநகரம். காடுகள் மற்றும் கோவில்களில் வலம் வரும் நான் பல சித்து விளையாட்டுகளையும் செய்து வருகிறேன். மன்னா உம்மிடம் நான் பெறவேண்டியது ஒன்றும் இல்லை என்றார் சித்தர்.
சித்தர் பதிலை கேட்ட மன்னர் சித்தரை சோதிக்க நினைத்த சமயம் ,அங்கு வந்த வேளாளன் ஒருவன் கையில் வைத்திருந்த கரும்பை வாங்கி கொண்டு, சித்தரை நோக்கி மன்னர் பின்வருமாறு கூறுகிறான். தன்னை மிக பெரிய வல்லவராக நினைத்து கொண்டிருக்கும் சித்தர் அவர்களே, உங்கள் வல்லமையை நிரூபிக்க நான் ஒரு சோதனையை வழங்குகிறேன். அச்சோதனையை செய்தால் நீர் விரும்பியதை நான் வழங்குகிறேன் என்றார் மன்னர். மன்னர் கூறியதை ஏற்று கொண்டார் சித்தர்.
மன்னர் சித்தரை நோக்கி இதோ இங்கே உள்ள கல்யானைக்கு இந்த கரும்பை நீர் ஊட்ட அக்கல்யானை இதை உண்ண வேண்டும் அப்படி நீர் இதை செய்துவிட்டால் நீர் மிக பெரிய சித்தர் என்பதையும், இம்மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளுக்கு நீர் ஒப்பானவர் என்பதையும் நான் ஒப்புகொள்கிறேன் என்றார் மன்னர்.
சித்தர் தன் சித்து விளையாட்டை ஆரம்பிக்க வேண்டி அக்கோவிலின் மண்டபத்தில் கம்பீரமாக செதுக்கப்பட்டிருந்த கல்யானையை சித்தர் தன் பார்வையை பொழிய அக்கல்யானை கண் திறந்து தன் தும்பிக்கையால் மன்னரின் கையில் இருந்த கரும்பை வாங்கி, மென்று உண்ண ஆரம்பித்தது. மீண்டும் சித்தர் கல்யானையை பார்க்க யானை மன்னரின் கழுத்திலிருந்த முத்து மாலையை பறிக்க, அச்செயலை சற்றும் எதிர்பார்க்காத மெய்க்காவலர்கள் யானையை அடிக்க கோலினை ஓங்க, சித்தர் பார்வை மீண்டும் யானை மீது விழுந்தது. அவ்வளவுதான் உடனே கல்யானை அம்முத்து மாலையை விழுங்கிவிட்டது. அனைத்தையும் கவனித்த மன்னருக்கு சித்தர் மேல் கடுங்கோவம் ஏற்பட, மெய்க்காவலர்கள் சித்தரை அடிக்க வந்தனர். சித்தர் புன்னகையுடன் தன் கையமர்த்தி நில் என கூற மெய்க்காவலர்கள் அனைவரும் கற்சிலையாய் மாறினார்.
இதை கண்டமன்னர் சித்தரின் திருவடிகளில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினர். மன்னரின் அன்பை கண்ட சித்தர், வேண்டும் வரங்களை கேள் என்றார் அவனிடம். மன்னரோ தனக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என கேட்க சித்தரோ அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்து தன் கையை யானையின் மேல் வைக்க யானை முத்து மாலையை மன்னரிடம் கொடுத்தது. முத்து மாலையை பெற்றுக்கொண்ட மன்னரின் பார்வையில் இருந்து கண்சிமிட்டும் நேரத்தில் சித்தர் மறைய யானை மீண்டும் கற்சிலையாய் மாறியது. அனைத்தும் கடவுளின் திருவிளையாடல் என நினைத்து சோமசுந்தர கடவுளை வணங்கி தன் அரண்மனை நோக்கி திரும்பினார் மன்னர்.
பாண்டியன் கேட்டுக்கொண்டதன் பேரில் இறைவன் சித்தர் உருவில் வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த நிகழ்வு திருவிளையாடல் புராணத்தில் கல்யானைக்குக் கரும்பருத்தியப் படலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு சித்தரின் அருளால் அபிஷேக பாண்டியனுக்கு ஆட்சி செய்யும் வகையில் விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். பாண்டிய நாட்டில் திருப்பூவனம் என்னும் சிவத்தலத்திலே பொன்னனையாள் என்னும் கணிகை ஒருவள் இறைபணி செய்து வந்தாள். அவள் பரதம், ஏழிசை யாழை இசைப்பதில் மட்டுமல்லாமல் அழகிலும், ஒழுக்கத்திலும் மிக சிறந்தவளாக வலம் வந்தாள்.
தினமும் அதிகாலையில் எழுந்து தன் தோழிகளுடன் நீராடி சிவபூசையை முடித்து திருக்கோவிலுக்கு சென்று திருப்பூவன நாதரை வணங்கி சுத்த நிருத்தம் ஆடிவிட்டு, பிறகு தன் மனம் குளிர சிவனடியார்களுக்கு திருவமுது படைத்து பிறகு அதில் எஞ்சிய உணவை தானும் உட்கொண்டு வந்தாள். பொன்னனையாள் மனதில் நீண்ட நாள் ஏக்கம் ஒன்று இருந்தது . சிவபெருமானின் உற்சவ சிலை ஒன்றை செய்து அதை திருப்பூவனம் கோவிலுக்கு அளிக்க வேண்டும் என்பதே அவள் ஏக்கம். தன்னுடைய ஆடல் பாடல் மூலம் வரும் பொருள்கள் அனைத்தும் சிவபெருமான் பூசைக்கு செலவழித்துவிட்டதால், உற்சவர் சிலையை உருவாக்க அவளிடம் போதிய பொருட்கள் இல்லாததை நினைத்து மனம் வருந்தினாள்.
அவளின் மனவருத்தத்தை அறிந்த சிவபெருமான் சித்தர் ரூபத்தில் பொன்னனையாள் வீட்டை அடைந்தார். மற்ற அடியார்களோடு சேர்ந்து திருவமுது செய்யாமல் நின்று கொண்டிருந்தார். புன்னகை பூத்த சித்தரின் முகத்தை கண்ட பொன்னனையாளின் தாதியர், ஐயனே திருவமுது செய்ய உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்ட, உங்கள் தலைவியை இங்கே அழையுங்கள் என கூறினார் சித்தர் வடிவில் வந்த இறைவர். ஓர் அடியார் சித்தமூர்த்தியாய் திருவமுது செய்யாமல் நின்று கொண்டிருக்கிறார் அவரை திருவமுது செய்ய அழைத்த சமயம் அவர் தங்களை அழைத்து வர சொன்னார் என தாதியர் பொன்னனையாளிடம் கூற, அவள் விரைந்து வந்து சித்தரின் திருவடியை வணங்கினாள்.
பொன்னனையாள் முக வாட்டத்தை அறிந்த சித்தர் உன் வாட்டத்திற்கு காரணம் என்ன? என வினவினார். அதற்கு பொன்னனையாள், சிவபெருமானின் உற்சவ சிலையை செய்து அதை திருப்பூவனம் கோவிலில் வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் ஆடல் பாடல் மூலம் வந்த பொருட்களை வைத்து என்னால் சிவபெருமானின் உற்சவ சிலையை செய்ய முடியவில்லை. என் விருப்பம் நிறைவேறுமா என்ற குழப்பம் என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது என்றால் வருத்தத்துடன். இதை கேட்ட சித்தர் உள்ளம் மகிழ்ந்து சிவதருமத்தைப் போற்றிப் பாராட்டி, உன் வீட்டில் உள்ள அனைத்து ஈய,பித்தளைப் பாத்திரங்களை இங்கே கொண்டு வா என்றார். உடனே பொன்னனையாள் தன் வீட்டில் உள்ள அனைத்து வெள்ளி, செம்பு,பித்தளை, ஈயம், இரும்பு, வெண்கலம், தகரம் போன்ற உலோகத்தை எல்லாம் எடுத்து வந்து சித்தரின் கண் முன் வைக்க தொடங்கினாள்.
சித்தர் தன் மனதில் தியானித்து அனைத்து பாத்திரங்களின் மீது திருநீறை தூவி அவளிடம் இந்த பாத்திரம் அனைத்தையும் இன்றிரவு தீயிலிட்டு எடுத்தவுடனே எல்லாம் பொன்னாகிவிடும் என கூற, பொன்னனையாள் சித்தரை வணங்கி பிறகு என்பெருமானே இன்று இரவு இங்கே இருந்து திருவமுது செய்து செல்லுமாறு கூறினாள்.அதற்கு சித்தரோ, சன்னியாசி இராத் தங்க இயலாது என்றார். சித்தரின் பதிலை கேட்ட அவள், தாங்கள் யாரென்று கூறுங்கள் என வினவ அவரோ, நான் மதுரையில் வசிக்கும் சித்தர் என கூறி மறைந்துவிட்டார்.
அங்கு சித்தரை போல் வந்தது மதுரை வெள்ளியபலத்திலே திருக்கூத்து ஆடியருளும் சோமசுந்தரக் கடவுளே என அறிந்து உள்ளம் மகிழ்ந்தாள் பொன்னனையாள். பின்னர் சித்தர் சொன்னபடியே அனைத்து உலோகங்களையும் அன்றிரவு தீயிலிட அனைத்து உலோகங்களும் பொன்னாயின. அந்த பொன்னை கொண்டு இறைவனுக்கு திருவடிவம் செய்து சிவபெருமானின் சிலையை கண்டு மகிழ்ந்தாள். தன் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு திருவுருவத்தை திருப்பூவனம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து திருவிழா நடத்தினாள்.
அழகிய பொற்சிலையில் பொன்னனையாள் கிள்ளி முத்தமிட்ட நகக்குறியை இன்றும் ஆலயத்திற்கு சென்றால் காணலாம்.சித்தராய் வந்து பல திருவிளையாடல்களை செய்த சிவபெருமானே சித்தர்களுக்கு முதல் சித்தராய் இருப்பது மட்டுமல்லாமல், அவரின் சித்து விளையாட்டுகள் அனைத்தும் திருவிளையாடல் புராணத்தில் இடம்பெறுவதையும் காணலாம்.
சிவன் என்ற சித்த குருவிடம் உபதேசம் பெற்ற எண்மர் பின்வருமாறு:
~ நந்திகள் நால்வர் ( சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் )
~ சிவயோக மாமுனி (அகத்தியர்)
~ பதஞ்சலி (பாம்பாட்டி சித்தர்)
~ வியாக்ரமர் ( புலிப் பாணி சித்தர்)
~ திருமூலர்.
சிவபெருமானின் சித்து விளையாட்டுகள் தொடரும்....