குருபூஜை : மாசி மாதம் வரக்கூடிய பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும்.
திருக்கடவூர் என்னும் அருள்நிறைந்த பூமியில் பல மகான்கள் அவதரித்துள்ளனர், அது போலவே திருக்கடவூரில் இறைவனின் ஆசியோடு பிறந்தவர் காரி நாயனார். இவருக்கு எல்லாமே சிவனும் சிவனடியார்களும் தான். தமிழில் சிறந்த கவிபாடும் திறனை பெற்றிருந்தார். அதிலும் சிவபெருமானை மனம் உருகி பாடும் வல்லமையை பெற்றிருந்தார். தூய வெண்ணீற்றின் அருமையை புரிந்து வைத்திருந்த இவர் ஆலயப் பணிகளிலும் அடியார் சேவைகளிலும் தன்னை முழுமையாக அர்பணித்தவர். அவர் தனது பெயரிலே காரிக்கோவை என்னும் நூலை தந்தருளினார், மிகவும் சிறப்பான ஆழமான கருத்துகளை உடைய நூல். அதை மூவேந்தர்களிடமும் அந்நூலை பற்றிய தெளிந்த கருத்துக்களை திறம்பட எடுத்து கூறி அவர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனால் மனம் மகிழ்ந்த மன்னர்கள் பொன்னும் பொருளும் அள்ளி வழங்கினர், அந்த பொன்னிலும் பொருளிலும் மயக்கம் கொள்ளாமல் அவை அனைத்தையும் சிவாலயங்களை புனரமைப்பதற்கும், புதிய சிவாலயம் கட்டுவதற்கும், சிவனடியார்களுக்கு சேவை செய்வதற்கும் பயன் படுத்தினார் என்பது சிறப்பு. அடியார்கள் மகிழ்ச்சியை மேலானதாக கருதி அவர்களுக்கு வாரி வழங்கியவர். தமிழ் புலமை பெற்ற இவர் நூல்கள் இயற்றுவதன் மூலம் கிடைக்கின்ற அனைத்து செல்வத்தையும் திருப்பணிகலுக்கே செலவிட்டு பல கும்பாபிசேகம் செய்தார். எப்போதுமே இறைநாமம் சொல்லிகொண்டே இருந்த இவர் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர், அபிராம வல்லியையும் பூக்களாலும் பாமாலையாலும் பூஜை செய்து, தனது புகழ் உடம்போடு கயிலாயம் அடைந்தார்.