போகரே சித்தர்களில் முதன்மையானவர். இவர் காலங்கியின் சீடர். சீனாவை சேர்ந்த இவர் புலிப்பாணியின் குரு, இவரின் பெற்றோர் பெண்களுக்கு துணிகள் வெளுத்து கொடுத்து பிழைத்தனர் என்பதை அகஸ்தியர் 12000 நூல் கூறுகிறது.
"சிந்தனா சித்து முனி போகநாதன்
சிறந்த பதினெண் பேரின் உயர்ந்த சீலன்
கத்த னென்னும் காலங்கி நாதர் சீடன்
கனமான சீன பதிக் குகந்த பாலன்
முத்தான அதிசயங்கள் யாவற்றுந்தான்
மூதுலகில் கண்டறிந்த முதல்வன் சித்தன்
நித்தமும் மாசிலாக் கடவுள் தன்னை
நீணிலத்தில் மறவாத போகர் தானே"
(அகஸ்தியர் பன்னிரெண்டாயிரம்)
இவர் மரபை சேர்ந்தவர்கள்- சீனா நாட்டிலுள்ள வெள்ளை நிற மக்களே.
தமிழ்நாட்ட்டில் இருந்து சீனாவிற்கு சென்று,அங்கு வாழ்ந்த காலத்தில் பல நூல்களை இயற்றி மீண்டும் தமிழகத்திற்கு திரும்பி, பழனி தண்டாயுதபாணி நவபாஷாண சிலையை உருவாக்கினார் என்று வரலாறு கூறுகிறது.
"போகர் சத்த காண்டம்" என்ற நூலில் போ - யாங் என்ற பெயரும், வா - ஓ - சியூ (தலை சிறந்த ஞானி) என்னும் சிறப்பிற்குரியவர் இவரே. இவரை புலிப்பாணி சித்தரே தமிழகத்திற்கு அழைத்து வந்ததாகவும், அதற்கு முன் சீனாவில் போ - யாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கருத்து நிலவுகிறது.
கொங்கணவர், கருவூரார், இடைக்காடர், சட்டை முனி முதலான சீடர்கள் சீனா செல்வதற்கு முன் இருந்ததாகவும், புலிப்பாணி மட்டுமே அவருடன் திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. போகரின் சீடர்கள் 63 பேர்கள். அவர்களுக்கு அஷ்டாங்க யோகங்களை கற்று கொடுத்து இவற்றை வெளியில் சென்று பரீட்சித்து பாருங்கள் என அனுப்பி வைத்தார். பின் அவர்கள் உலகம் முழுவதும் சுற்றி திரிந்து, பின் பூவுலகில் மேரு மலையை அடைந்து வணங்கி பின் போகரை வணங்கி நின்றனர். அவர்களின் வருகையில் மகிழ்ந்த அவர் சிறிது காலம் சமாதியில் இருங்கள் என்று கூறி, பின்
அவரும் சுகணங்க மரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார்.
தவத்தால் பெற்ற சக்திகளை மக்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தினார். இமயமலை, மேருமலை போன்ற மலைகளுக்கு சென்று அங்குள்ள சித்தர்களிடமிருந்து காய கல்ப இரகசியங்களை தம் சித்த சக்திகளை பெருக்க கற்றுகொண்டார்.மக்களின் அறியாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்து திருத்த வேண்டும் என எண்ணினார். நோய் கொண்டவர்களை நோய் தீர்த்து மீண்டும் பாதிக்காமல் இருக்க வழியை சொன்னார். தங்கம் செய்யும் முறையை தவம் செய்தவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
சுகபோகத்தின் நன்மை, தீமைகளை எடுத்துரைத்தார். குளிகை செய்யும் முறைகளையும், காய கல்ப ரகசியங்களையும் தன் சீடர்களுக்கு கற்று கொடுத்தார். போகர் ஆகாயத்தில் உள்ள சித்த புருஷர்களை கண்டு தரிசித்தபோது "உலக மக்களுக்கு என்னதான் நல்வழி காட்டினாலும், அவர்கள் தலைவிதி போல் தான் நடக்கும், உன் வழிக்கு வரமாட்டார்கள், உன்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் நீ கவலைப்படாதே" என்று கூறி வழியனுப்பினார்.
தமிழ்நாட்டிற்கு வந்து, தாம்கற்றவற்றை பயன்படுத்த முயன்றபோது அவரை யாரும் மதிக்கவில்லை. ஆனால் மனம் தளராமல், மந்திர ஜால வித்தைகளை தொடர்ந்தார். இயந்திர நூல்களை வெகுதொலைவில் நடப்பதை தெரிந்து கொள்ள
இயற்றினார். இளம் வயதில் கணவனை இழந்த பெண்ணிற்கு, இறந்தவர்களை மீண்டும் உயிர்பெறும் வித்தைகளை மேருமலையை கற்க சென்றபோது, 9 சித்தர்களின் தரிசனத்தால் "சஞ்சீவினி மந்திர வித்தையை" கற்று தருமாறு கேட்டபோது அவர்கள் மறுத்தனர். இவரின் பிடிவாதத்தினால் அவர்கள் "நீ கற்றதனைத்தும் உனக்கு மறந்து போகும்.....போ!" என சாபமிட்டனர்.
போகர், மக்களின் நன்மைக்காக பாடுபடும் எனக்கு இதுதான் முறையா! நான் இங்கேயே இறந்துவிடுகிறேன் என கூற, சித்தர்கள் உன்னுடைய இறப்பு இவ்வுலகிற்கு பேரிழப்பாகிவிடும் என கூறி காய கல்ப பயிற்சியின் இன்னும் சில முறைகளை கற்று கொடுத்தனர். அங்கேயே சிறிது காலம் போகர் தங்கி பின், பாதரசத்தை காட்டும் முறைகளை கற்று பின் சீனாவிற்கு சென்றார். மேலும் தெரிந்து கொள்ள போகர் மேருமலைக்கு சென்று காலங்கி நாதரின் சமாதியை கண்டு, ஒரே மாணவன் நான் என்ற கர்வத்துடன் வணங்கினார்."பிறவியின் மர்மத்தை அறிந்து எல்லோரும் இன்பமாக இருக்க
வேண்டும்" அவ்வாறு நடந்தால் தங்களுக்கு தானே பெருமை என்றார்.
அப்போது நாற்திசையிலும் சிரிப்பொலி கேட்டது. யாருமில்ல இடத்தில் பல சித்தர்கள் தம் கண்ணிற்கு தெரிந்தனர். அவர்களை வளம் வந்து வணங்கினார். போகர் அவர்களை பார்த்து "தாங்கள் எங்கே இருந்தீர்கள்?" போகா! குருநாதர், காலங்கிநாதரின் மாணவர்கள் நாங்கள். அவர்கள் சமாதியை விட்டு எப்போதும் நகரமாட்டோம் என்றனர் அனைவரும்.
இதுவரை நான் ஒருவன் மட்டுமே காலங்கியின் மாணவன் என்ற கருவத்துடன் இருந்தேன். நீங்கள் கூறியதை கேட்டு அந்த கர்வம் போய்விட்டது. என்னை மன்னியுங்கள். இங்கே எத்தனை காலம் இருக்கிறீர்கள் என வினவினார்.
அரிச்சந்திரன், இராவணன், இராமன், விராடன், பாஞ்சாலன், பாண்டவர்கள் முதலானோர் இங்கு அவர்களின் குருநாதர் சொல்லி கொடுத்ததை பரிசோதித்த காலத்திலிருந்தே நாங்கள் இருக்கிறோம். போகரை அழைத்து ":அங்கு பார்! இங்கு பார்! இப்படி பார்! என்று இடங்களை சித்தர்கள் சுட்டிக்காட்ட, போகர் பார்த்தபோது செந்தூரம், பஸ்பம், தங்கம், நவரத்தினம் முதலியன குவிந்து கிடந்தன.
இவைகள் யாருக்கும் பயன்படாமல் கிடக்கிறதே என்றார் போகர். சித்தர்கள் மக்கள் அறியாமை மயக்கத்தில் மூழ்கி கிடக்கிறார்கள். நல்லதை பெறுவதில் அக்கறை இல்லாத அவர்களிடம் இவை போக வேண்டுமா? என்று கூறி மறைந்தார்கள். சித்தர்களிடம் பேசி காலத்தை வீணடித்துவிட்டோம் என வருந்தினார்.
தன் போக்கில் நடந்தபோது, புற்றின் ஒளிக்கற்றையை கண்டு, அப்புற்றின் அருகில் அமர்ந்து தியானத்தால் ஆழ்ந்தார். போகரின் தியானத்தால், புற்றிலிருந்து சித்தரின் தியானம் பாதிக்கப்பட்டது. புற்றிலிருந்த சித்தர் வெளிவந்து " நீ தான் கலங்கி நாதரின் சீடனா? உனக்கு என்ன வேண்டும்? என் தவத்தை ஏன் கலைத்தாய் என்றார்.
நான் தான் போகர். தியானத்தை கலைத்ததற்கு என்னை மன்னியுங்கள், என் வாழ்வில் பெரும் பயனை அடைந்துவிட்டேன். தாங்கள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறீர்கள் சிறிது காலமாகத்தான்....என்றார். கலியுகம் என்றார்.அதற்கு சித்தர் கலியுகம் பிறந்துவிட்டதா? துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் தியானம் செய்ய அமர்ந்தேன் என்று சொல்லி சிரித்தார். போகா! ஒரு மரத்தை கட்டி, கீழே விழுந்த பழம் உனக்குத்தான் போ! அதை சாப்பிடு என்றார் சித்தர்.
போகர் அப்பழத்தை உண்ட சுவையில் தன்னை மறந்தார்.
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றை கொடுத்தபோது, பதுமை ஒன்று தோன்றியது. உனக்கு தேவையானவைகளை இப்பதுமை சொல்லும் என கூறி சித்தர் தியானத்தில் மூழ்கினார்.
பதுமை போகருக்கு, கருவில் உயிர் உண்டானது முதல் எல்லா நிலைகளையும் விளக்கி மறைந்தது.
போகர், அங்கிருந்து மேருமலைக்கு பயணித்தார். இதற்கு மேல் போகாதே! நில்! நில்! என்றது ஒரு பதுமையின் குரல்.
நீ போகுமிடமெல்லாம் சித்தர்கள் தவம் செய்து கொண்டுள்ளார்கள். கழைத்தால் சாபத்திற்காளாவாய். உனக்கு வேண்டியதை கேள் என்றது பதுமை.
மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கும் "சஞ்சீவி மூலிகைகள்" இருக்குமிடம் வேண்டும் என்றார். அதை கூற மறுத்த பதுமை, வேறுபல மூலிகைகளின் வகைகளையும், சாதனைகளையும் கூறி அனுப்பிவிட்டது.
நினைத்தது நிறைவேறாததால் சித்தர் கொடுத்த புலித்தோளின் மேல் தவத்தில் இறங்கினார்.
சித்தர்கள் தாங்கள் வித்தையை மேருமலையில் செய்து பார்த்ததால் மேருமலை தங்கமலை என இதிகாச புராணங்கள் கூறுகின்றன.
மேருமலை அடைந்த போகர், அங்கு வீசிய ஒளியால் மயங்கி விழுந்த அவரை சித்தர் ஒருவர் போகரை வாழ்த்தி வஜ்ரகண்டி மாலையை கழுத்தில் போட்டார்.
சித்தர்கள் பலர் அங்கு இருப்பதை போகருக்கு காட்டி மறைந்தார். பல சித்தர்கள் போகரை ஒரு குகைக்குள் கூட்டி சென்று உயிரை அழிக்கும் மூலிகைகளின் விவரங்களை கூறினார்.
பலகாலமாக அளைந்ததற்கு பலன் கிடைத்த மகிழ்ச்சியில் போகர் அவர்களை வணங்கி விடைபெற்று மலையிலிருந்து இறங்கினார்.
மகிழ்ச்சியால், மலையிலிருந்து கீழே வந்த போகரின் நடையில் நிலம் அதிர்ந்தது. அதனால் அங்கு தவம் செய்த சித்தரின் தவம் கலைந்தது. கோபத்தில் அவர் இந்த இடத்தின் அமைதியை கெடுத்த நீ! மரணமடைந்தவர்களுக்கு உயிரை கொடுக்கும் வித்தை பளிக்காமல் போகும் என்று சாபமிட்டார்.
போகரின் மகிழ்ச்சி, ஆரவாரம் நொடி பொழுதில் மறைந்ததால் அவமானத்துடன் தள்ளாடிய போகர் மயங்கி விழுந்தார்.
பறவை ஒன்று சஞ்சீவி மூலிகையை கொண்டு போகரின் மயக்கத்தை தெளிய வைத்து, இங்கு கண்களுக்கு தெரியாமல் கோடிக்கணக்கான சித்தர்கள் தவம் செய்கிறார்கள் தவத்தை கெடுக்காதே! சித்தர்களின் மூல இரகசியங்களை கூறி இப்படி போ! என்று வழிக்காட்டி விட்டு பறந்துவிட்டது.
மீண்டும் பயணத்தை தொடர்ந்து திருமூலர் பாட்டனாரின் சமாதியில் தவமிருந்து வணங்கினார்.
போகா! திருந்தாத மக்களிடம் எங்களை அறிமுகம் செய்யாதே, நீயும் இவர்களிடமிருந்து விலகி இரு, என்று கூறி மறைந்தார்.
பொதிகை மலைக்கு ஆகாயமார்க்கமாக சென்று கூர்ம நாடி வென்று தன்னிலையில் தியானத்தில் இருந்து எழுந்தவர் முன் உமாதேவி காட்சி தந்து, முருகன் உனக்கு அருள்புரிவார் என்று கூறி மறைந்தார்.
அதன்படி, பழனிமலைக்கு சென்று கடுந்தவம் புரிந்தார். முருகன் தண்டாயுதபாணியாக காட்சி தந்து உபதேசித்தார்.
போகரே! நீ என்னை தரிசனம் செய்தது போல் அனைவரும் என்னை தரிசிக்க வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்? என்று கூறி மூல விக்ரகத்தையம், காயசித்தி உபாயத்தையும் கூறி மறைந்தார்.
முருகர் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் 9 விதமான கற்களை கொண்டு முருகன் விக்ரகத்தை செய்து பிரதிஷ்டையும் செய்து வழிபாட்டு முறைகளை வகுத்தார்.
முருகருக்கு அபிஷேகம் செய்த விபூதியை தான் உடம்பில் பூசி கொண்டார். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதையே தான் உணவாக கொண்டார். நவபாஷாணத்தில் ஊறிய பஞ்சாமிர்தமும், விபூதியும் போகருக்கு உள் ஒளியை பெருக்கியது.
இதே போன்று நவபாசானா மூர்த்தியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் இவரால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
கோவிலின் அருகிலேயே தவம் செய்து, தவத்தில் சந்தேகம் வரும்போது, தண்டபாணியிடமே கேட்டு கொண்டார்.
கோவிலுக்கும். தான் இருப்பிடத்திற்கும் சுரங்கப்பாதை அமைத்து, கடைசி காலத்தை பழனியில் கழித்த போகர், தன் அனுபவங்களை பலருக்கு உபதேசித்தார்.
இரசகுளிகையின் மகத்துவம் அறிந்தவர் போகர்! அதன் ஆற்றல் கண்டு அதிசயித்தவர். பல எண்ணற்ற வைத்திய வாகடங்களை எழுதியிருக்கிறார்.
தமது லகிமாசித்தியால் கனமான உடலை பஞ்சு போலாக்கி ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிகிறது.
போகர் ஆகாய கசினப்பயிற்சி வித்தையில் வல்லவர்.
ஒரு நூலில் வெள்ளையர்கள் வாழும் நாடுகளுக்கு போய் உபதேசம் செய்ததாக கூறுகிறது.
போகர் பழனியிலிருந்த தன் சீடன் புலிப்பாணியிடம் மூலிகை சேகரிக்க போவதாக கூறி, நீ பூஜையை கவனித்து கொள் என்றார்.
ஆகாய மார்க்கமாக செல்லும்போது, சீன நாட்டில் பெண்களுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். பல வருடங்கள் ஆகியும் தன் குருநாதர் திரும்பாததை கண்டு, மைசூர் உடையார் என்பாரிடம் முருகனுக்கு பூஜை செய்யும் முறையை செய்ய சொல்லிவிட்டு சீனாவிற்கு சென்றார்.
அங்கே போகர் மகாசீனாஸாரம் என்னும் வஜ்ரொளி முத்திரையை பழகும்போது தன் தவசக்தியை முழுவதையும் இழந்துவிட்டார், என்பதை அறிந்தவுடன் நான் மீண்டும் உங்களுக்கு சக்தி கிடைக்க உதவி புரிகிறேன் என கூறி பழனிக்கு அழைத்து வந்தார்.
தவ வலிமையை திரும்ப பெற தனக்கு உபதேசம் செய்ய சீடரையே கோரினார். புலிப்பாணி இது முறையல்ல என மறுத்துவிட்டார்.
புலிப்பாணி, போகர் தண்டத்திற்கு உபதேசித்து, பின்பு அத்தண்டத்திலிருந்து போகர் உபதேசம் பெற்றார். பலகாலம் தவமிருந்து பழைய நிலையை பரிபூரணமாக பெற்றார். இவரின் பெருமையறிந்த சித்தர் பலர் இவரிடம் வந்து குளிகை பெற்று சென்றனர்.
சதுரகிரி, சிவகிரி முதலிய இடங்களில் இருந்திருக்கிறார். சிங்கம், புலி, பசு முதலியவைகளுக்கு ஞானம் அளித்திருக்கிறார்.
கொங்கணர், கருவூரார், கமலமுனி, சட்டைமுனி, நந்தீசர், மச்சமுனி, இடைக்காடர், சுந்தரரானந்தர்- போகரின் மாணவர்கள். ஆனால் போகரோ அகத்தியரின் மாணவர் என்ற குறிப்பு அபித்தான சிந்தாமணியில் உள்ளது.
போகர் சீனாவில் வாழ்ந்த காலத்தில் நீராவி கப்பல், பறக்கும் இயந்திரம் உருவாக்கி தந்திருக்கிறார். சித்துகள் மூலம் பல நன்மைகள் செய்துள்ளார்.
பழனியில் சில காலம் வாழ்ந்த போகர், ஜீவ சமாதி பழநியிலேயே அடைந்தார். அவரின் சமாதி ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
போகர் பூஜித்த புவனேஸ்வரி அன்னையின் திருஉருவம் இன்றும் உள்ளது. சமாதி உள்ள இடத்திற்கும், புவனேஸ்வரி சன்னதிக்கும் சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது.
போகருக்கு பின் புலிப்பாணி அவர்களது மரபில் வந்தோர் திருமலை நாயக்கர் காலம் வரை பூஜித்து வந்தனர்.
போகர் இயற்றிய நூல்கள் அகத்தியரின் சௌமிய சாகரத்தில் காணப்படுகின்றன. போகர் 12000 , போகர் சப்த கண்டம் 7000 , போகர் நிகண்டு 1700 , போகர் வைத்தியம் 1000 , போகர் வைத்தியம் 700 , போகர் சரக்கு வாய்ப்பு 800 , போகர் ஜனன சாகரம் 550 , போகர் கர்ப்பம் 360 , போகர் உபதேசம் 150 , போகர் ரணவாகடம் 100 , போகர் ஞான சாராம்சம் 100 , போகர் கற்ப சூத்திரம் 54 ,போகர் ஞான சூத்திரம் 37 , போகர் அட்டாங்க யோகம் 24 , போகர் பூஜா விதி 20 .
இந்த நூல்களில் போகர் 12,000 மற்றும் ரண வாகடம் 100 இவ்விரு நூல்கள் மட்டும் கிடைக்கவில்லை.