சோமவார விரதத்தை பின்பற்றிய உக்கிர பாண்டியனுக்கு வீர பாண்டியன் என்ற ஒரு மகன் பிறந்தான்.
தன் நாட்டு மக்களுக்கு பொன்னையும், பொருளையும் வாரி வழங்கிய பாண்டிய மன்னனின் நாட்டில் மறுமுறை ஒரு பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின் காரணமாக அந்தணர்களும், மக்களும் வேறு நகரத்திற்கு புலம் பெயர ஆரம்பித்தனர்.
மாமன்னர் பஞ்சத்தை தடுப்பதற்கு பரிகாரங்களும், ஹோமங்களும் பண்ணலாம் என்றால் அந்தணர்களும் இல்லை என நினைத்து கொண்டு வெறும்தரையில் படுத்தார்.
அப்போது மன்னரின் கனவில் சோமசுந்தரப் பெருமான் தோன்றி, உன் நாட்டை காக்க வேண்டுமென்றால் நீ மேருமலைக்கு சென்று அதைச் சண்டாயுதத்தால் அடித்து, வேண்டிய பொருளை எடுத்து கொண்டு அதன் மேல் உன் முத்திரையிட்டு வந்துவிடு. ஒரு அந்தணரை அழைத்து வந்து என்னைப் போல தினமும் வணங்கி வா. ஓராண்டில் இந்த வறட்சி நீங்கிவிடும் எனக் கூறி மறைந்துவிட்டார்.
இறைவன் கனவில் கூறிய படி, மன்னன் தன் படைகளை திரட்டிக் கொண்டு மேருமலைக்கு கீழ் தன் படைகளை விட்டுவிட்டு, தனி ஒருவனாக சண்டாயுதத்துடன் சென்று, கிழக்கு நோக்கி நின்று இறைவன் சொன்ன படியே சண்டாயுதத்தால் அடிக்க, பந்துபோல சற்றிய மேரு உருவம் ஒன்று மன்னன் முன் நின்றது. அரசனோ இறைவர் கனவில் கூறியதை கூறினார். அதை கேட்ட மேரு மன்னா, எனக்கு அசையும் உருவமும் உண்டு, அசையா உருவமும் உண்டு. அசையும் உருவத்தில் நான் ஆலயம் சென்று அம்மையப்பனை வழிபட்டு வந்தேன். ஆனால் சில நாட்கள் நான் செல்லாததால் எனக்கு இறைவன் கொடுத்த பாடமே இந்த அடி.
அதுமட்டுமில்லாமல் அது மன்னரிடம், என் தாவர உடலில் மாசுள்ள மற்றும் மாசற்ற இடம் உள்ளது. மாசற்ற பகுதியில் சூரிய ஒளியைப்போல மிக தூய்மையான பகுதி உண்டு. அதை அறிந்து அதன் மேல் மூடியுள்ள பாறையை அகற்றினால் நீங்கள் வேண்டிய பொன்னை எடுத்துக்கொள்ளலாம் என கூறி மறைந்தது.
மேரு சொன்னதைப்போல மன்னர் பாறையை அகற்றி, அதன் கீழ் உள்ள பொன்னை வேண்டிய அளவு வெட்டிக் கொண்டு, வலிமையுள்ள மனிதர்களைச் சுமக்கச் செய்து, அந்த அறையின் வாயிலை அடைத்து, சண்டாயுதம், இரு மீன்கள் கொண்ட முத்திரையை அடையாளமாக வைத்துவிட்டு திரும்பினார்.
அங்கு கிடைத்த பொன்னை எல்லாம் எடுத்து கொண்டு மன்னன் தன் படைகளோடு நாடு திரும்பினான். அதை வைத்துக் கொண்டு ஓராண்டு உணவிற்கான பணத்தையும் கொடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் சோமா சுந்தரமூர்த்தியின் கோவிலுக்கு விமானம், கோபுரங்கள் எல்லாம் கட்டுவித்தார். கிரக நிலை மாறி மழை பெய்து பஞ்சம் தீர்ந்தது.
தன் மகனிடம் ராஜ்யம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, உக்கிர பாண்டியன் தன் தந்தையுடன் ஐக்கியமானார். சண்டாயுதத்தால் பொன்னை வெட்டி எடுக்க வைத்ததே ஈசனின் 15 -ஆம் திருவிளையாடல்.
இறைவனின் 15 -ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் செல்வம் செழித்து வளர்ந்து, எல்லாம் நலமும் பெறுவர்.