நலம் தரும் பதிகங்கள்

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், சிறை வாசத்தைத் தவிர்க்கவும் ஓத வேண்டிய பதிகம்.

அ௫ளியவர் :திருஞானசம்பந்தர்

திருமுறை :மூன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

செய்ய னேதிரு வாலவாய் மேவிய

ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்

பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்

பைய வேசென்று பாண்டியற் காகவே.

 

சித்த னேதிரு வாலவாய் மேவிய

அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை

எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர்

பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

 

தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச்

சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை

எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர்

பக்க மேசென்று பாண்டியற் காகவே.

 

சிட்ட னேதிரு வாலவாய் மேவிய

அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள்

துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்

பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே.

 

நண்ண லார்புர மூன்றெரி யாலவாய்

அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை

எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்

பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே.

 

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்

அஞ்ச லென்றரு ளாலவா யண்ணலே

வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்

பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.

 

செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய்

அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்

கங்கு லாரமண் கைய ரிடுங்கனல்

பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே.

 

தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய்

ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை

ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர்

பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.

 

தாவி னானயன் றானறி யாவகை

மேவி னாய்திரு வாலவா யாயருள்

தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர்

பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.

 

எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய

அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்

குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்

பண்டிமன் தென்னன் பாண்டியற் காகவே.

 

அப்ப னாலவா யாதி யருளினால்

வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்

கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும்

செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

 

திருச்சிற்றம்பலம்