அ௫ளியவர் :திருஞானசம்பந்தர்
திருமுறை :மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுயுறவேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.
மண்ணொடுநீர் அனல்காலோடு ஆகாய மதியிரவி
எண்ணில்வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்றடர அஞ்சுவரே.
தண்மதியும் வெய் அரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதல் உமையோர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
சக்கரமாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைத்தானும் அடைந்த ஐராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.
பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டு இசைமுரலும் வெண்காடே.
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்து உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே.
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீரு இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீதிலர் என்று உணருமினே.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச்சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத்து இவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
திருச்சிற்றம்பலம்