நலம் தரும் பதிகங்கள்

வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ பாடவேண்டிய பதிகம்.

வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ பாடவேண்டிய பதிகம்

(or)

உலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற பாட வேண்டிய பதிகம்

அ௫ளியவர் :திருஞானசம்பந்தர்

திருமுறை : மூன்றாம் திருமுறை

 

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூற்

றஞ்சவுதைத்தன அஞ்செழுத்துமே. 

 

மந்திர நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்

கந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே. 

 

ஊனிலுயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞான விளக்கினை யேற்றி நன்புலத்

தேனை வழிதிறந் தேத்துவார்க் கிடர்

ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே. 

 

நல்லவர் தீயரெ னாது நச்சினர்

செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ

கொல்ல நமன் தமர் கொண்டு போமிடத்

தல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே. 

 

கொங் கலர் வன்மதன் வாளி யைந்தகத்

தங்குள பூதமும் அஞ்சவைம் பொழில்

தங்கரவின் படம் அஞ்சுந் தம்முடை

அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே. 

 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்

அம்மை யினுந்துணை அஞ்செழுத்துமே. 

 

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாடொறும்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி யுகப்பன அஞ்செழுத்துமே. 

 

வண்டம ரோதி மடந்தை பேணின

பண்டையிராவணன் பாடி யுய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்

கண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே. 

 

கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச்

சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்

கார்வண மாவன அஞ்செழுத்துமே.

 

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்

சித்தத் தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணி வார் வினைப்பகைக்

கத்திரமாவன அஞ்செழுத்துமே. 

 

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்

துற்றன வல்லவர் உம்பராவரே.