நலம் தரும் பதிகங்கள்

கல்வியில் தலைசிறந்து விளங்க ஓத வேண்டிய திருப்பதிகம்

அ௫ளியவர் :திருஞானசம்பந்தர்

திருமுறை :இரண்டாம் திருமுறை

 

சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக்

குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலே

கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்

விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்

கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 

 

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்

போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற

நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும்

காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 

 

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்

உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்

தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்

கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 

 

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய

நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய

விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும்

கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன்

பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்

எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும்

கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 

 

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே. 

 

வாய்ந்தபுகழ் விண்ணவரு மண்ணவரு மஞ்சப்

பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்

கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள்

காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை

கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து

நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்

கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 

 

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்

சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்

குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்

கற்றென விருப்பது கருப்பறிய லூரே. 

 

நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன்

கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்

பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று

வலந்தரு மவர்க்குவினை வாடலௌ தாமே. 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பாம்பாட்டிச் சித்தர்
View Details
சோழனுக்குக் கதவு திறந்து விடுதல்
View Details
குலச்சிறை நாயனார்
View Details