மகாபாரதம்
பீமன் அதிக பசி கொண்டவன். அளவு கடந்து உண்பவன். கிடைத்த போதெல்லாம் உண்ணும் பழக்கம் கொண்ட பீமனால் ஏகாதசி நாளில் ஒரு பொழுதுகூட விரதம் இருக்க முடியாமல் போயிற்று. இதனால் பாவம் தன்னை வந்து சேருமோ என்று அஞ்சிய அவன் வியாசரைப் பணிந்து “ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய எல்லா எகாதசியிலும் என்னால் உபவாசம் இருக்க முடியாது. வருடத்தில் ஒரு ஏகாதசியில் சுத்த உபவாசம் இருக்கிறேன். அதன் மூலம் வருடத்தின் எல்லா எகாதசியிலும் உபவாசம் இருந்த பலன் என்னை வந்தடைய வேண்டும். அதற்குரிய வழியைக் கூறுங்கள்” என்றான். அதற்கு வியாசரோ ஒவ்வொரு தை மாதத்து வளர்பிறை ஏகாதசி அன்றேனும் சுத்த உபவாசமிரு. உனக்கு எல்லா எகாதசியிலும் உபவாசமிருந்த பலன் கிட்டும் என்றார். சுத்த உபவாசம் என்பது இரண்டு வேளை சாப்பிடாமல் உபவாசம் இருப்பதாகும். வியாசரின் அறிவுரைப்படி ஒவ்வொரு தை மாத அமாவாசையிலிருந்து பதினோராவது நாளில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதியில் பீமன் சுத்த உபவாசம் இருந்து வந்தான். இதைத்தான் பீம ஏகாதசி என்பர். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் தேக ஆரோக்கியம், சந்தோஷம் உண்டாகும். செவ்வாய்கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களை தடுக்கும் சக்தி ஹனுமனுக்கு உண்டு என்பது பலரும் அறிந்திராத ஒரு செய்தி செவ்வாய் கிரகத்தால் கெடு பலன் அனுபவிப்போர் ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைதோறும் ஹனுமனை வழிபடுதல் நல்லது. ஒவ்வொரு ஏகாதசி திதி தோறும் ஹனுமன் உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. ஆகவே சில ஹனுமன் கோயில்களில் அன்றைய தினம் ஹனுமனுக்கு புஷ்பங்கள் சாத்துவதில்லை. நைவேத்தியம் கிடையாது. தீர்த்தம் மட்டுமே உண்டு, ஏகாதசியன்று ஹனுமான் அதிக சக்தி கொண்டு விளங்குவதால் அன்றைய தினம் வழிபடுவது சிறப்பானதாகும்.