பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 18. பூரணக் குகை நெறிச் சமாதி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி

உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்

தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்

உளதுறும் யோகி உடல்விட்டால் தானே.  1 

 

 

தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது

போன வியோகி புகலிடம் போந்துபின்

ஆனவை தீர நிரந்தர மாயோகம்

ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.  2 

 

 

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி

ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து

தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்

ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.  3 

 

 

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்

தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்

சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்

புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.  4 

 

 

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்

தானற மோனச் சமாதியுள் தங்கியே

தானவன் ஆகும் பரகாயம் சாராதே

ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.  5 

 

 

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்

செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்

செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்

செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.  6 

 

 

உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்

பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்

என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி

தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.  7 

 

 

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்

தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்

அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்

இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.  8   

 

திருச்சிற்றம்பலம்