பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 41. பக்தியுடைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்

அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்

சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்

பத்தர் பரசும் பசுபதி தானென்றே.  1 

 

 

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்

கடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன்

அடியார் அருளால் அவனடி கூட

அடியா னிவனென் றடிமைகொண் டானே.  2 

 

 

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்

ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்

பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்

ஊரில் உமாபதி யாகிநின் றானே.  3 

 

 

ஒத்துல கேழும் அறியா ஒருவனென்

றத்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்

பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது

முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.  4 

 

 

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்

நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை

வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்

ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.  5 

 

 

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்

முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்

அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்

பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே.  6 

 

 

பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்

குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி

நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்

இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.  7 

 

 

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை

பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்

செறிதுணை செய்து சிவனடி சிந்தித்

துறுதுணை யாயங்கி யாகிநின் றானே.  8 

 

 

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற

தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்

கானவன் என்றுங் கருவரை யானென்றும்

ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே.  9 

 

 

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த

தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்

மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்

உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பொற்கிழி அளித்தல்
View Details
இந்திரன் முடி தகர்த்தல்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details