பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 11. சத்திய ஞானானந்தம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி

முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே

இப்பாழும் இன்னாவாறு என்பதிலா இன்பத்துத்

தற்பரஞா னானந்தம் தானது வாகுமே.  1 

 

 

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்

நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்

அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.  2 

 

 

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோபை 

அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது

இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்

பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.  3 

 

 

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்

உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்

வைத்த சொருபத்த சத்தி வருகுரு

உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.  4 

 

 

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை

தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்

மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்

சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.  5 

 

 

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்

புனையில் அவனைப் பொதியலும் ஆகும்

எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி

நினையும் அளவில் நினைப்பித் தனனே.  6 

 

 

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்

வாலிய பேரமு தாகும் மதுரமும்

போலும் துரியம் பொடிபடி உள்புகச்

சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.  7 

 

 

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து

தமரத்து நின்ற தனிமையன் ஈசன்

பவளத்து முத்தும் பனிமொழி மாதர்

துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.  8 

 

 

மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்

சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்

பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச் 

சத்தியஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே.  9 

 

 

சிவமாய் அவமான மும்மலம் தீரப்

பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்

தவமான சத்திய ஞானானந் தத்தே

துவமார் துரியம் சொரூபம தாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

யாக்கோபு சித்தர் (இராம தேவர்)
View Details
சாக்கிய நாயனார்
View Details
குலச்சிறை நாயனார்
View Details