பதினொன்றாம்-திருமுறை

017 போற்றித் திருக்கலிவெண்பா

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

திருத்தங்கு மார்பில் 

  திருமால் வரைபோல்

எருத்தத் திலங்கியவெண் 

  கோட்டுப் - பருத்த

குறுத்தாள் நெடுமூக்கிற் 

  குன்றிக்கண் நீல

நிறத்தாற் பொலிந்து 

  நிலமேழ் - உறத்தாழ்ந்து

பன்றித் திருவுருவாய்க் 

  காணாத பாதங்கள்

நின்றவா நின்ற 

  நிலைபோற்றி - அன்றியும்

புண்டரிகத் துள்ளிருந்த 

  புத்தேள் கழுகுருவாய்

அண்டரண்டம் ஊடுருவ 

  ஆங்கோடிப் - பண்டொருநாள்

காணான் இழியக் 

  கனக முடிகவித்துக்

கோணாது நின்ற 

  குறிபோற்றி - நாணாளும் (5)

பேணிக்கா லங்கள் 

  பிரியாமைப் பூசித்த

மாணிக்கா அன்று 

  மதிற்கடவூர்க் - காண

வரத்திற் பெரிய 

  வலிதொலைத்த காலன்

உரத்தில் உதைத்தஉதை 

  போற்றி - கரத்தாமே

வெற்பன் மடப்பாவை 

  கொங்கைமேற் குங்குமத்தின்

கற்பழியும் வண்ணங் 

  கசிவிப்பான் - பொற்புடைய

வாமன் மகனாய் 

  மலர்க்கணையொன் றோட்டியஅக்

காமன் அழகழித்த 

  கண்போற்றி - தூமப்

படமெடுத்த வாளரவம் 

  பார்த்தடரப் பற்றி

விடமெடுத்த வேகத்தால் 

  மிக்குச் - சடலம் (10)

முடங்க வலிக்கும் 

  முயலகன்தன் மொய்ம்பை

அடங்க மிதித்தஅடி 

  போற்றி - நடுங்கத்

திருமால் முதலாய 

  தேவா சுரர்கள்

கருமால் கடல்நாகம் 

  பற்றிக் - குருமாற

நீலமுண்ட நீள்முகில்போல் 

  நெஞ்சழல வந்தெழுந்த

ஆலமுண்ட கண்டம் 

  அதுபோற்றி - சாலமண்டிப்

போருகந்த வானவர்கள் 

  புக்கொடுங்க மிக்கடர்க்கும்

தாருகன்தன் மார்பில் 

  தனிச்சூலம் - வீரம்

கொடுத்தெறியும் மாகாளி 

  கோபந் தவிர

எடுத்த நடத்தியல்பு 

  போற்றி - தடுத்து (15)

வரையெடுத்த வாளரக்கன் 

  வாயா றுதிரம்

நிரையெடுத்து நெக்குடலம் 

  இற்றுப் - புரையெடுத்த

பத்தனைய பொன்முடியும் 

  தோளிருப தும்நெரிய

மெத்தனவே வைத்த 

  விரல்போற்றி - அத்தகைத்த

வானவர்கள் தாங்கூடி 

  மந்திரித்த மந்திரத்தை

மேனவில ஓடி 

  விதிர்விதிர்த்துத் - தானவருக்

கொட்டிக் குறளை 

  உரைத்த அயன்சிரத்தை

வெட்டிச் சிரித்த 

  விறல்போற்றி - மட்டித்து

வாலுகத்தால் நல்லிலிங்க 

  மாவகுத்து மற்றதன்மேல்

பாலுகுப்பக் கண்டு 

  பதைத்தோடி - மேலுதைத்தங் (20)

கோட்டியவன் தாதை 

  இருதாள் எறிந்துயிரை

வீட்டிய சண்டிக்கு 

  வேறாக - நாட்டின்கண்

பொற்கோயில் உள்ளிருத்திப் 

  பூமாலை போனகமும்

நற்கோலம் ஈந்த 

  நலம்போற்றி - நிற்க

வலந்தருமால் நான்முகனும் 

  வானவரும் கூடி

அலந்தருமால் கொள்ள 

  அடர்க்கும் - சலந்தரனைச்

சக்கரத்தால் ஈர்ந்தரிதன் 

  தாமரைக்கண் சாத்துதலும்

மிக்கஅஃதீந்த 

  விறல்போற்றி - அக்கணமே

நக்கிருந்த நாமகளை 

  மூக்கரிந்து நால்வேதம்

தொக்கிருந்த வண்ணம் 

  துதிசெய்ய - மிக்கிருந்த (25)

அங்கைத் தலத்தே 

  அணிமானை ஆங்கணிந்த

செங்கைத் திறத்த 

  திறல்போற்றி - திங்களைத்

தேய்த்ததுவே செம்பொற் 

  செழுஞ்சடைமேல் சேர்வித்து

வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் 

  வான்சிறையில் - பாய்த்திப்

பிரமன் குறையிரப்பப் 

  பின்னும் அவர்க்கு

வரமன் றளித்தவலி 

  போற்றி - புரமெரித்த

அன்றுய்ந்த மூவர்க் 

  கமர்ந்து வரமளித்து

நின்றுய்ந்த வண்ணம் 

  நிகழ்வித்து - நன்று

நடைகாவல் மிக்க 

  அருள்கொடுத்துக் கோயில்

கடைகாவல் கொண்டவா 

  போற்றி - விடைகாவல் (30)

தானவர்கட் காற்றாது 

  தன்னடைந்த நன்மைவிறல்

வானவர்கள் வேண்ட 

  மயிலூரும் - கோனவனைக்

சேனா பதியாகச் 

  செம்பொன் முடிகவித்து

வானாள வைத்த 

  வரம்போற்றி - மேனாள்

அதிர்த்தெழுந்த அந்தகனை 

  அண்டரண்டம் உய்யக்

கொதித்தெழுந்த சூலத்தாற் 

  கோத்துத் -துதித்தங்

கவனிருக்கும் வண்ணம் 

  அருள்கொடுத்தங் கேழேழ்

பவமறுத்த பாவனைகள் 

  போற்றி - கவைமுகத்த

பொற்பா கரைப்பிளந்து 

  கூறிரண்டாப் போகட்டும்

எற்பா சறைப்போக 

  மேல்விலகி- நிற்பால (35)

மும்மதத்து வெண்கோட்டுக் 

  கார்நிறத்துப் பைந்தறுகண்

வெம்மதத்த வேகத்தால் 

  மிக்கோடி - விம்மி

அடர்த்திரைத்துப் பாயும் 

  அடுகளிற்றைப் போக

எடுத்துரித்துப் போர்த்த 

  இறைபோற்றி - தொடுத்தமைத்த

நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க் 

  கன் றால்நிழற்கீழ்

வாண்மாலை ஆகும் 

  வகையருளித் - தோள்மாலை

விட்டிலங்கத் தக்கிணமே 

  நோக்கி வியந்தகுணம்

எட்டிலங்க வைத்த 

  இறைபோற்றி - ஒட்டி

விசையன் விசையளப்பான் 

  வேடுருவம் ஆகி

அசைய உடல்திரியா 

  நின்று - வசையினால் (40)

பேசு பதப்பாற் 

  பிழைபொறுத்து மற்றவற்குப்

பாசுபதம் ஈந்த 

  பதம்போற்றி - நேசத்தால்

வாயில்நீர் கொண்டு 

  மகுடத் துமிழ்ந்திறைச்சி

ஆயசீர் போனகமா 

  அங்கமைத்துத் - தூயசீர்க்

கண்ணிடந்த கண்ணப்பர் 

  தம்மைமிகக் காதலித்து

விண்ணுலகம் ஈந்த 

  விறல்போற்றி - மண்ணின்மேல்

காளத்தி போற்றி 

  கயிலைமலை போற்றிஎன

நீளத்தி னால்நினைந்து 

  நிற்பார்கள் - தாளத்தோ

டெத்திசையும் பன்முரசம் 

  ஆர்த்திமையோர் போற்றிசைப்ப

அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.  1 

 

திருச்சிற்றம்பலம்