அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்
திருமுறை : பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உலகம் உவப்ப
வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு
கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்குஞ்
சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய
மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த
செல்உறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின்
வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த
கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில்
வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய
தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய
பராஅரை மராஅத்து (10)
உருள்பூந் தண்டார்
புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த
சேணுயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய
ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய
நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன
தோயாப் பூந்துகில் (15)
பல்காசு நிரைத்த
சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக்
கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய
பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்குஞ்
செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த
இணையீர் ஓதிச் (20)
செங்கால் வெட்சிச்
சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத்
தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு
வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய
தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய்
தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த
துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம்
செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின்
ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு
கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல்
வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த
பிண்டி ஒண்தளிர்
நுண்புண் ஆகந்
திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய
பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர்
கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக்
கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்தா
தப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி
கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய
வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்
றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம்
சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர்
ஆடும் சோலை
மந்தியும் அறியா
மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச்
சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி
மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல்
கலங்கஉள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த
சுடர்இலை நெடுவேல்
உலறிய கதுப்பிற்
பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண்
சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு
கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும்
காதின் பிணர்மோட்டு (50)
உருகெழு செலவின்
அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய
கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட
கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின்
ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம்
பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள்
துணங்கை தூங்க
இருபேர் உருவின்
ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின்
அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம்
அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த
மறுவில் கொற்றத்து (60)
எய்யா நல்லிசைச்
செவ்வேல் சேஎய்
சேவடி படரும்
செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப்
புலம்பிரிந் துறையும்
செலவுநீ நயந்தனை
ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து
இன்நசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ
முன்னிய வினையே
செருப் புகன் றெடுத்த
சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு
பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த
போர்அரு வாயில்
திருவீற் றிருந்த
தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகில்
கூடல் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல்
விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத்
துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல்
ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த
காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின்
அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்,
அதா அன்று 1
வைந்நுதி பொருத
வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை
ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும்
மருங்கின் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன
மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன
வேழமேல் கொண்டு
ஐவேறு உருவின்
செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய
முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின்
சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரூஉம்
வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை
வாண்மதி கவைஇ
அகலா மீனின்
அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத்
தந்தொழில் முடிமார்
மனன்நேர் பெழுதரு
வாள்நிற முகனே (90)
மாயிருள் ஞாலம்
மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்
றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த
அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத்
தன்றே ஒருமுகம்
மந்திர விதியின்
மரபுளி வழாஅ (95)
அந்தணர் வேள்வியோர்க்
கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை
ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக்
கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச்
செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட்டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள்
கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்
தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும்
முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த
அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய
மொய்ம்பின் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து
வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின்
ஐயர்க் கேந்தியது
ஒருகை உக்கம்
சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை
அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ
ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலம்
திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்
கொட்ப ஒருகை
பாடின் படுமணி
இரட்ட ஒருகை (115)
நீல்நிற விசும்பின் மலிதுளி
பொழிய ஒருகை
வான்அர மகளிர்க்கு வதுவை
சூட்ட ஆங்குஅப்
பன்னிரு கையும்
பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம்
கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப
வால்வளை நரல (120)
உரம்தலைக் கொண்ட
உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை
வெல்கொடி அகவ
விசும் பாறாக
விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த
ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே,
அதா அன்று (120) 2
சீரை தைஇய
உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும்
வால்நரை முடியினர்
மாசற இமைக்கும்
உருவினர் மானின்
உரிவை தைஇய
ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கும்
யாக்கையர் நன்பகல் (130)
பலவுடன் கழிந்த
உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய
மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா
அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய
தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த
காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா
இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி
முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன
மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த
தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த
செய்வுறு திவவின் (140)
நல்லியாழ் நவின்ற
நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர்
இன்னரம் புளர
நோயின் றியன்ற
யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும்
மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும்
திதலையர் இன்னகைப் (145)
பருமம் தாங்கிய
பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு
மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய
தூம்புடை வாலெயிற்று
அழலென உயிர்க்கும்
அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும்
பல்வரிக் கொடுஞ்சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச்
செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய
பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும்
இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய
முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய
நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய
வென்றடு கொற்றத்து
ஈரிரண் டேந்திய
மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை
உயர்த்த யானை
எருத்தம் ஏறிய
திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து
நன்னகர் நிலைஇய (160)
உலகங் காக்கும்
ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந்
தலைவர் ஆக
ஏமுறு ஞாலந்
தன்னில் தோன்றித்
தாமரை பயந்த
தாவில் ஊழி
நான்முக ஒருவற்
சுட்டிக் காண்வரப் (165)
பகலில் தோன்றும்
இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப்
பதினொரு மூவரொடு
ஒன்பதிற் றிரட்டி
உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன
தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன
செலவினர் வளியிடைத் (170)
தீயெழுந் தன்ன
திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன
குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம்
பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர்
வந்துடன் காணத்
தாவில் கொள்கை
மடந்தையொடு சில்நாள் (175)
ஆவினன்குடி அசைதலும் உரியன்,
அதா அன்று 3
இருமூன்று எய்திய
இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய
பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி
இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய
அறன்நவில் கொள்கை (180)
மூன்றுவகைக் குறித்த
முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர்
பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட
மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம்
புலர உடீஇ
உச்சிக் கூப்பிய
கையினர் தற்புகழ்ந்து (185)
ஆறெழுத் தடக்கிய
அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின்
நவிலப் பாடி,
விரையுறு நறுமலர்
ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலும் உரியன்,
அதா அன்று 4
பைங்கொடி நறைக்காய்
இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில்
விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந்
தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த
கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில்
கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த
தேக்கள் தேறல் (195)
குன்றகச் சிறுகுடிக்
கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக்
குரவை அயர
விரலுளர்ப்ப அவிழ்ந்த
வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த
வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை
அணைத்த கூந்தல் (200)
முடித்த குல்லை
இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த
வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த
பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல்
திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன
மடநடை மகளிரொடு (205)
செய்யன் சிவந்த
ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர்
துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன்
செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன்
குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன்
புகரில் சேவல்அம் (210)
கொடியன் நெடியன்
தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன
இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட
நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய
நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின்
இயல ஏந்தி (215)
மென்தோள் பல்பிணை
தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன்
பண்பே, அதாஅன்று 5
சிறுதினை மலரொடு
விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு
வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட
சீர்கெழு விழவினும் (220)
ஆர்வலர் ஏத்த
மேவரு நிலையினும்
வேலன் தைஇய
வெறிஅயர் களனும்
காடும் காவும்
கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும்
வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும்
புதுப்பூங் கடம்பும் (225)
மன்றமும் பொதியிலுங்
கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு
மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி
அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக்
கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின்
இரண்டுடன் உடீஇச் (230)
செந்நூல் யாத்து
வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய
மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய
தூவெள் அரிசி
சில்பலிச் செய்து
பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு
நறுவிரை தெளித்துப் (235)
பெருந்தண் கணவீரம்
நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத்
தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின்
நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக்
குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோடு
இன்னியம் கறங்க (240)
உருவப் பல்பூத்
தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை
பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து
முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த
உருகெழு வியன்நகர்
ஆடுகளம் சிலம்பப்
பாடிப் பலவுடன் (245)
கோடுவாய் வைத்துக்
கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப்
பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு
எய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும்
அறிந்த வாறே
யாண்டாண் டாயினும்
ஆகக் காண்தக (250)
முந்துநீ கண்டுழி
முகனமர்ந் தேத்திக்
கைதொழுஉப் பரவிக்
கால்உற வணங்கி
நெடும்பெரும் சிமயத்து
நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன்
அங்கை ஏற்ப
அறுவர் பயந்த
ஆறமர் செல்வ (255)
ஆல்கெழு கடவுட்
புதல்வ மால்வரை
மலைமகள் மகனே
மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க்
கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற்
பழையோள் குழவி
வானோர் வணங்குவில்
தானைத் தலைவ (260)
மாலை மார்ப
நூலறி புலவ
செருவில் ஒருவ
பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை
அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ
மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச்
சால்பெருஞ் செல்வ (265)
குன்றங் கொன்ற
குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக்
குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப்
புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற்
பெரும்பெயர் முருக
நசையுநர்க் கார்த்தும்
இசைபே ராள (270)
அலர்ந்தோர்க் களிக்கும்
பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின்
வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும்
உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும்
பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கறுத்த
மொய்ம்பின் மதவலி (275)
போர்மிகு பொருந
குரிசில் எனப்பல
யான்அறி அளவையின்
ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல்
மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி
வந்தனன் நின்னொடு
புரையுநர் இல்லாப்
புலமையோய் எனக் (280)
குறித்தது மொழியா
அளவையில் குறித்துடன்
வேறுபல் உருவில்
குறும்பல் கூளியர்
சாறயர் களத்து
வீறுபெறத் தோன்றி
அளியன் தானே
முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின்
வண்புகழ் நயந்தென (285)
இனியவும் நல்லவும்
நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற
திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின்
தான்வந்து எய்தி
அணங்குசால் உயர்நிலை
தழீஇப் பண்டைத்தன்
மணம்கமழ் தெய்வத்து
இளநலம் காட்டி (290)
அஞ்சல் ஓம்புமதி
அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி
அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர்
வளைஇய உலகத்து
ஒருநீ ஆகத்
தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில்
நல்குமதி பலவுடன் (295)
வேறுபல் துகிலின்
நுடங்கி அகில்சுமந்து
ஆரம் முழுமுதல்
உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை
புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப்
பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால்
சிதைய நன்பல (300)
ஆசினி முதுசுளை
கலாவ மீமிசை
நாக நறுமலர்
உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை
பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப
வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு
தழீஇத் தத்துற்று (305)
நன்பொன் மணிநிறம்
கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல்
துமியத் தாழை
இளநீர் விழுக்குலை
உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர்
சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை
பலவுடன் வெரீஇக் (310)
கோழி வயப்பெடை
இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின்
புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக்
குடாஅடி உளியம்
பெருங்கல் விடர்அளைச்
செறியக் கருங்கோட்டு
ஆமா நல்லேறு
சிலைப்பச் சேண்நின்று (315)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை
மலைகிழ வோனே. 6
குன்றம் எறிந்தாய்
குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப்
பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய்
ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 7
குன்றம் எறிந்ததுவும்
குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர்
தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும்
கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 8
வீரவேல் தாரைவேல்
விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள்
திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல்
சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 9
இன்னம் ஒருகால்
எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த
கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம்
பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 10
உன்னை ஒழிய
ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான்
பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர்
கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 11
அஞ்சு முகந்தோன்றில்
ஆறு முகந்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என
வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின்
இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 12
முருகனே செந்தில்
முதல்வனே மாயோன்
மருகனே ஈசன்
மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய
தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 13
காக்கக் கடவியநீ
காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம்
அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா
கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 14
பரங்குன்றிற் பன்னிருகைக்
கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக்
கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே
அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 15
நக்கீரர் தாமுரைத்த
நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும்
சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து
மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 16
திருச்சிற்றம்பலம்