பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

008 திருநீலகண்ட நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வேதியர் தில்லை மூதூர் வேட் 

  கோவர் குலத்து வந்தார்

மாதொரு பாகம் நோக்கி 

  மன்னு சிற்றம்பலத்தே

ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் 

  தனிக் கூத்து ஆடும்

நாதனார் கழல்கள் வாழ்த்தி 

  வழிபடும் நலத்தின் மிக்கார்.  1 

 

 

பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் 

  புனற் சடை முடியார்க்கு அன்பர்

மெய் அடியார் கட்கு ஆன 

  பணி செயும் விருப்பில் நின்றார்

வையகம் போற்றும் செய்கை மனை 

  அறம் புரிந்து வாழ்வார்

சைவ மெய்த் திருவின் சார்வே 

  பொருள் எனச் சாரு நீரார்.  2 

 

 

அளவிலா மரபின் வாழ்க்கை மண் 

  கலம் அமுதுக்கு ஆக்கி

வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் 

  அடியார்க்கு என்றும்

உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு 

  அளித்து ஒழுகும் நாளில்

இளமை மீது ஊர இன்பத் 

  துறையினில் எளியர் ஆனார்.  3 

 

 

அவர் தம் கண் மனைவியாரும் 

  அருந்ததிக் கற்பின் மிக்கார்

புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு 

  நஞ்சு உண்ண யாம் செய்

தவ நின்று தடுத்தது என்னத் 

  தகைந்து தான் தரித்தது என்று

சிவன் எந்தை கண்டம் தன்னைத் 

  திரு நீல கண்டம் என்பார்.  4 

 

 

ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை 

  பால் அணைந்து நண்ண

மானமுன் பொறாது வந்த 

  ஊடலால் மனையின் வாழ்க்கை

ஏனைய எல்லாஞ் செய்தே உடன் 

  உறைவு இசையார் ஆனார்

தேனலர் கமலப் போதில் 

  திருவினும் உருவம் மிக்கார்.  5 

 

 

மூண்ட அப் புலவி தீர்க்க 

  அன்பனார் முன்பு சென்று

பூண்டயங்கு இளமென் சாயல் பொன் 

  கொடி அனையார் தம்மை

வேண்டுவ இரந்து கூறி 

  மெய்யுற அணையும் போதில்

தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு 

  நீல கண்டம் என்றார்.  6 

 

 

ஆதியார் நீல கண்டத்து அளவு 

  தாம் கொண்ட ஆர்வம்

பேதியா ஆணை கேட்ட 

  பெரியவர் பெயர்ந்து நீங்கி

ஏதிலார் போல நோக்கி 

  எம்மை என்றதனால் மற்றை

மாதரார் தமையும் என் தன் 

  மனத்தினும் தீண்டேன் என்றார்.  7 

 

 

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு 

  ஆன எல்லாம்

பொற்புற மெய் உறாமல் 

  பொருந்துவ போற்றிச் செய்ய

இல் புறம்பு ஒழியாது அங் 

  கண் இருவரும் வேறு வைகி

அன்புறு புணர்ச்சி இன்மை 

  அயலறியாமை வாழ்ந்தார்.  8 

 

 

இளமையின் மிக்குளார்கள் இருவரும் 

  அறிய நின்ற

அளவில் சீர் ஆணை போற்றி 

  ஆண்டுகள் பலவும் செல்ல

வள மலி இளமை நீங்கி 

  வடிவுறு மூப்பு வந்து

தளர்வொடு சாய்ந்தும் அன்பு 

  தம்பிரான் திறத்துச் சாயார்.  9 

 

 

இந் நெறி ஒழுகும் நாளில் 

  எரி தளர்ந்தது என்ன நீண்ட

மின்னொளிர் சடையோன் தானுந் 

  தொண்டரை விளக்கங் காண

நன்னெறி இதுவாம் என்று 

  ஞாலத்தார் விரும்பி உய்யும்

அந் நெறி காட்டும் ஆற்றல் 

  அருள் சிவ யோகி ஆகி.  10 

 

 

கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா

வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல்

தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்

நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்.  11 

 

 

நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்

விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட

இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்

நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்.  12 

 

 

நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்

கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்

புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து

எண்ணிய வகையினால் 

  எதிர் கொண்டு ஏத்தினார்.  13 

 

 

பிறை வளர் சடை முடிப் 

  பிரானைத் தொண்டர் என்று

உறை உளில் அணைந்து 

  பேர் உவகை கூர்ந்திட

முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்

நிறை பெரு விருப்பொடு 

  செய்து நின்ற பின்.  14 

 

 

எம்பிரான் யான் செயும் 

  பணி எது என்றனர்

வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்

உம்பர் நாயகனும் இவ்வோடு 

  நின்பால் வைத்து

நம்பி நீ தருக நாம் 

  வேண்டும் போது என்று.  15 

 

 

தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்

துன்னிய யாவையும் தூய்மை செய்வது

பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது

இன்ன தன்மையது இது வாங்கு நீ என.  16 

 

 

தொல்லை வேட்கோவர் தம் 

  குலத்துள் தோன்றிய

மல்கு சீர்த் தொண்டனார் 

  வணங்கி வாங்கிக் கொண்டு

ஒல்லையின் மனையில் ஓர் 

  மருங்கு காப்புறும்

எல்லையில் வைத்து வந்து 

  இறையை எய்தினார்.  17 

 

 

வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்

நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்

உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்

அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்.  18 

 

 

சால நாள் கழிந்த பின்பு 

  தலைவனார் தாம் முன் வைத்த

கோலமார் ஓடு தன்னைக் குறி 

  இடத்து அகலப் போக்கிச்

சீலமார் கொள்கை என்றும் 

  திருந்து வேட்கோவர் தம்பால்

வாலி தாம் நிலைமை காட்ட 

  முன்பு போல் மனையில் வந்தார்.  19 

 

 

வந்த பின் தொண்டனாரும் எதிர் 

  வழி பாடு செய்து

சிந்தை செய்து அருளிற்று எங்கள் 

  செய்தவம் என்று நிற்ப

முந்தை நாள் உன்பால் வைத்த 

  மெய்யொளி விளங்கும் ஓடு

தந்து நில் என்றான் எல்லாம் தான் 

  வைத்து வாங்க வல்லான்.  20 

 

 

என்றவர் விரைந்து கூற 

  இருந்தவர் ஈந்த ஓடு

சென்று முன் கொணர்வான் புக்கார் 

  கண்டிலர் திகைத்து நோக்கி

நின்றவர் தம்மைக் கேட்டார் 

  தேடியும் காணார் மாயை

ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் 

  உரைப்பது ஒன்று இன்றி நின்றார்.  21 

 

 

மறையவன் ஆகி நின்ற 

  மலைமகள் கேள்வன் தானும்

உறை உளில் புக்கு நின்ற 

  ஒரு பெருந் தொண்டர் கேட்ப 

இறையில் இங்கு எய்தப் புக்காய் 

  தாழ்த்தது என் என்ன வந்து

கறை மறை மிடற்றினானைக் கை 

  தொழுது உரைக்கல் உற்றார்.  22 

 

 

இழையணி முந்நூல் மார்பின் எந்தை 

  நீர் தந்து போன

விழை தகும் ஓடு வைத்த வேறு 

  இடம் தேடிக் காணேன்

பழைய மற்று அதனில் நல்ல 

  பாத்திரம் தருவன் கொண்டு இப்

பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும 

  என்று இறைஞ்சி நின்றார்.  23 

 

 

சென்னியால் வணங்கி நின்ற 

  தொண்டரைச் செயிர்த்து நோக்கி

என்னிது மொழிந்தவா நீ யான் 

  வைத்த மண் ஓடு அன்றிப்

பொன்னினால் அமைத்துத் தந்தாய் 

  ஆயினுங் கொள்ளேன் போற்ற

முன்னை நான் வைத்த ஓடே 

  கொண்டு வா என்றான் முன்னோன்.  24 

 

 

கேடு இலாப் பெரியோய் 

  என்பால் வைத்தது கெடுதலாலே

நாடியும் காணேன் வேறு நல்லது 

  ஓர் ஓடு சால

நீடு செல்வது தான் ஒன்று 

  தருகின்றேன் எனவும் கொள்ளாது

ஊடி நின்று உரைத்தது என் தன் 

  உணர்வு எலாம் ஒழித்தது என்ன.  25 

 

 

ஆவதென் உன்பால் வைத்த 

  அடைக்கலப் பொருளை வௌவிப்

பாவகம் பலவும் செய்து பழிக்கு 

  நீ ஒன்றும் நாணாய்

யாவரும் காண உன்னை வளைத்து 

  நான் கொண்டே அன்றிப்

போவதும் செய்யேன் என்றான் 

  புண்ணியப் பொருளாய் நின்றான்.  26 

 

 

வளத்தினால் மிக்க ஓடு 

  வௌவினேன் அல்லேன் ஒல்லை

உளத்தினும் களவிலாமைக்கு என் 

  செய்கேன் உரையும் என்ன

களத்து நஞ்சு ஒளித்து நின்றான் 

  காதல் உன் மகனைப் பற்றிக்

குளத்தினில் மூழ்கிப் போ என்று 

  அருளினான் கொடுமை இல்லான்.  27 

 

 

ஐயர் நீர் அருளிச் செய்த 

  வண்ணம் யான் செய்வதற்குப்

பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை 

  என் செய்கேன் புகலும் என்ன

மையறு சிறப்பின் மிக்க 

  மனையவள் தன்னைப் பற்றி

மொய் அலர் வாவி புக்கு 

  மூழ்குவாய் என மொழிந்தார்.  28 

 

 

கங்கை நதி கரந்த சடை 

  கரந்து அருளி எதிர் நின்ற

வெங் கண் விடையவர் 

  அருள வேட்கோவர் உரைசெய்வார்

எங்களில் ஓர் சபதத்தால் உடன் 

  மூழ்க இசைவு இல்லை

பொங்கு புனல் யான்மூழ்கித் 

  தருகின்றேன் போதும் என.  29 

 

 

தந்தது முன் தாராதே 

  கொள்ளாமைக்கு உன் மனைவி

அந் தளிர்ச் செங் கைப்பற்றி 

  அலை புனலில் மூழ்காதே

சிந்தை வலித்து இருக்கின்றாய் 

  தில்லை வாழ் அந்தணர்கள்

வந்து இருந்த பேர் அவையில் 

  மன்னுவன் யான் எனச் சென்றார்.  30 

 

 

நல் ஒழுக்கம் தலை நின்றார் 

  நான் மறையின் துறை போனார்

தில்லை வாழ் அந்தணர்கள் 

  வந்து இருந்த திருந்தவையில்

எல்லை இலான் முன் செல்ல 

  இருந்தொண்டர் அவர் தாமும்

மல்கு பெரும் காதலினால் 

  வழக்கு மேலிட்டு அணைந்தார்.  31 

 

 

அந்தணன் ஆம் எந்தை பிரான் 

  அரு மறையோர் முன் பகர்வான்

இந்த வேட்கோவன்பால் யான் 

  வைத்த பாத்திரத்தைத்

தந்து ஒழியான் கெடுத்தானேல் 

  தன் மனைவி கைப்பற்றி

வந்து மூழ்கியும் தாரான் 

  வலி செய்கின்றான் என்றார்.  32 

 

 

நறை கமழும் சடை முடியும் 

  நாற்றோளும் முக் கண்ணும்

கறை மருவும் திரு மிடரும் 

  கரந்து அருளி எழுந்து அருளும்

மறையவன் இத்திறம் மொழிய மா 

  மறையோர் உரை செய்வார்

நிறையுடைய வேட்கோவர் நீர் 

  மொழியும் புகுந்தது என.  33 

 

 

நீணிதியாம் இது என்று நின்ற 

  இவர் தரும் ஓடு

பேணி நான் வைத்த இடம் 

  பெயர்ந்து கரந்தது காணேன்

பூண் அணி நூல் மணி மார்பீர் 

  புகுந்த பரிசு இது என்று

சேணிடையும் தீங்கு அடையாத் 

  திருத்தொண்டர் உரைசெய்தார்.  34 

 

 

திருவுடை அந்தணாளர் செப்புவார் 

  திகழ்ந்த நீற்றின்

உருவுடை இவர் தாம் வைத்த 

  ஓட்டினைக் கெடுத்தீர் ஆனால்

தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக 

  என்று உரைத்தார் ஆகில்

மருவிய மனைவியொடு மூழ்குதல் 

  வழக்கே என்றார்.  35 

 

 

அருந் தவத் தொண்டர் தாமும் 

  அந்தணர் மொழியக் கேட்டுத்

திருந்திய மனைவியாரைத் தீண்டாமை 

  செப்ப மாட்டார்

பொருந்திய வகையால் மூழ்கித் 

  தருகின்றேன் போதும் என்று

பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து 

  தம் மனையைச் சார்ந்தார்.  36 

 

 

மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் 

  சிவ யோகியார் முன்

சினவிடைப் பாகர் மேவும் 

  திருப்புலீச் சுரத்து முன்னர்

நனை மலர்ச் சோலை வாவி 

  நண்ணித் தம் உண்மை காப்பார்

புனை மணி வேணுத் தண்டின் 

  இரு தலை பிடித்துப் புக்கார்.  37 

 

 

தண்டிரு தலையும் பற்றிப் புகும் 

  அவர் தம்மை நோக்கி

வெண் திரு நீற்று முண்ட 

  வேதியர் மாதைத் தீண்டிக்

கொண்டு உடன் மூழ்கீர் என்னக் 

  கூடாமை பாரோர் கேட்கப்

பண்டு தம் செய்கை சொல்லி 

  மூழ்கினார் பழுது இலாதார்.  38 

 

 

வாவியின் மூழ்கி ஏறும் 

  கணவரும் மனைவி யாரும்

மேவிய மூப்பு நீங்கி 

  விருப்புறும் இளமை பெற்றுத்

தேவரும் முனிவர் தாமும் 

  சிறப்பொடு பொழியுந் தெய்வப்

பூவின் மா மழையின் மீள 

  மூழ்குவார் போன்று தோன்ற.  39 

 

 

அந்நிலை அவரைக் காணும் 

  அதிசயம் கண்டார் எல்லாம்

முன்நிலை நின்ற வேத முதல் 

  வரைக் கண்டார் இல்லை

இந்நிலை இருந்த வண்ணம் என் 

  என மருண்டு நின்றார்

துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் 

  விடை மேல் கண்டார்.  40 

 

 

கண்டனர் கைகளாரத் தொழுதனர் 

  கலந்த காதல்

அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் 

  பெருமை நோக்கி

விண்டரும் பொலிவு காட்டி விடையின் 

  மேல் வருவார் தம்மைத்

தொண்டரும் மனைவியாரும் தொழுது 

  உடன் போற்றி நின்றார்.  41 

 

 

மன்றுளே திருக் கூத்து ஆடி 

  அடியவர் மனைகள் தோறும்

சென்றவர் நிலைமை காட்டும் 

  தேவர்கள் தேவர் தாமும்

வென்ற ஐம் புலனால் மிக்கீர் 

  விருப்புடன் இருக்க நம்பால்

என்றும் இவ் இளமை நீங்காது 

  என்று எழுந்து அருளினாரே.  42 

 

 

விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் 

  செவ்வாய் மென் தோள்

அறல் இயல் கூந்தல் ஆளாம் 

  மனைவியும் அருளின் ஆர்ந்த

திறலுடைச் செய்கை செய்து 

  சிவலோகம் அதனை எய்திப்

பெறல் அரும் இளமை பெற்றுப் 

  பேர் இன்பம் உற்றார் அன்றே.  43 

 

 

அயல் அறியாத வண்ணம் 

  அண்ணலார் ஆணை உய்த்த

மயலில் சீர்த் தொண்டனாரை 

  யான் அறிவகையால் வாழ்த்திப்

புயல் வளர் மாடம் நீடும் 

  பூம்புகார் வணிகர் பொய்யில்

செயல் இயற் பகையார் செய்த 

  திருத் தொண்டு செப்பல் உற்றேன்.  44

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
திருநீலகண்ட நாயனார்
View Details
சோழனுக்குக் கதவு திறந்து விடுதல்
View Details