பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

015 ஏனாதிநாத நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

புண்டரிகம் பொன் வரை மேல் 

  ஏற்றிப் புவி அளிக்கும்

தண்டரள வெண்கவிகைத் தார் 

  வளவர் சோணாட்டில்

வண்டறை பூஞ் சோலை வயல் 

  மருதத் தண் பணை சூழ்ந்து

எண் திசையும் ஏறிய சீர் 

  எயின் மூதூர் எயினனூர்.  1 

 

 

வேழக் கரும்பினோடு மென் 

  கரும்பு தண்வயலில்

தாழக் கதிர்ச்சாலி தான் 

  ஓங்கும் தன்மையதாய்

வாழக் குடி தழைத்து மன்னிய 

  அப் பொற் பதியில்

ஈழக் குலச் சான்றார் 

  ஏனாதி நாதனார்.  2 

 

 

தொன்மைத் திரு நீற்றுத் 

  தொண்டின் வழிபாட்டின்

நன்மைக்கண் நின்ற நலம் 

  என்றும் குன்றாதார்

மன்னர்க்கு வென்றி வடிவாட் 

  படை பயிற்றும்

தன்மைத் தொழில் விஞ்சையில் 

  தலைமை சார்ந்து உள்ளார்.  3 

 

 

வாளின் படை பயிற்றி 

  வந்த வளம் எல்லாம்

நாளும் பெரு விருப்பால் 

  நண்ணுங் கடப் பாட்டில்

தாளும் தட முடியும் 

  காணாதார் தம்மையுந் தொண்டு

ஆளும் பெருமான் அடித் 

  தொண்டர்க்கு ஆக்குவார்.  4 

 

 

நள்ளார்களும் போற்றும் நன்மைத் 

  துறையின் கண்

எள்ளாத செய்கை இயல்பின் 

  ஒழுகு நாள்

தள்ளாத தங்கள் தொழில் 

  உரிமைத் தாயத்தின்

உள்ளான் அதிசூரன் என்பான் 

  உளன் ஆனான்.  5 

 

 

மற்ற அவனும் கொற்ற 

  வடிவாட் படைத் தொழில்கள்

கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் 

  இல்லை எனும்

பெற்றிமையான் மா நிலத்து 

  மிக்க பெருமிதம் வந்து

உற்றுலகில் தன்னையே சால 

  மதித்து உள்ளான்.  6 

 

 

தானாள் விருத்தி கெடத் 

  தங்கள் குலத் தாயத்தின்

ஆனாத செய் தொழிலாம் 

  ஆசிரியத் தன்மை வளம்

மேனாளுந் தான் குறைந்து மற்றவர்க்கே 

  மேம்படலால்

ஏனாதி நாதர் திறத்து ஏலா 

  இகல் புரிந்தான்.  7 

 

 

கதிரோன் எழ மழுங்கிக் 

  கால்சாயுங்காலை

மதி போல் அழிந்து பொறா 

  மற்றவனுஞ் சுற்றப்

பதியோர் உடன் கூடப் பண்ணி 

  அமர் மேல் சென்று

எதிர் போர் விளைப்பதற்கே 

  எண்ணித் துணிந்து எழுந்தான்.  8 

 

 

தோள் கொண்ட வல் 

  ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம்

கோள் கொண்ட போர் 

  மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று

வாள் கொண்ட தாயம் 

  வலியாரே கொள்வது என

மூள்கின்ற செற்றத்தான் முன் 

  கடையில் நின்று அழைத்தான்.  9 

 

 

வெங்கட் புலி கிடந்த வெம் 

  முழையில் சென்று அழைக்கும்

பைங்கண் குறுநரியே போல்வான் 

  படை கொண்டு

பொங்கிப் புறம் சூழ்ந்து போர்  

  குறித்து நேர் நின்றே

அங்கட் கடை நின்று அழைத்தான் 

  ஒலி கேளா.  10 

 

 

ஆர் கொல் பொர அழைத்தார் 

  என்றரி ஏற்றின் கிளர்ந்து

சேர்வு பெறக் கச்சில் செறிந்த 

  உடை மேல் வீக்கி

வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு

போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்.  11 

 

 

புறப்பட்ட போதின் கட் 

  போர்த் தொழில்கள் கற்கும்

விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் 

  வேறு இடத்து நின்றார்

மறப் படை வாள் சுற்றத்தார் 

  கேட்டு ஓடி வந்து

செறற்கரும் போர் வீரர்க்கு 

  இரு மருங்கும் சேர்ந்தார்கள்.  12 

 

 

வந்தழைத்த மாற்றான் வயப் புலிப் 

  போத்து அன்னார் முன்

நம் தமது வாள் பயிற்று 

  நற்றாயம் கொள்ளுங்கால்

இந்த வெளி மேற்கை வகுத்து 

  இருவேம் பொரு படையும்

சந்தித்து அமர் விளைத்தால் 

  சாயாதார் கொள்வதென.  13 

 

 

என்று பகைத்தோன் உரைப்ப 

  ஏனாதி நாதர் அது

நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் 

  என்று உள் மகிழ்ந்து

சென்றவன் முன் சொன்ன செருக் 

  களத்துப் போர் குறிப்பக்

கன்றி இரு படையும் கை 

  வகுத்து நேர் மலைவார்.  14 

 

 

மேக ஒழுங்குகள் முன் கொடு 

  மின்னிரை தம்மிடையே கொடு

மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு 

  மேல் எதிர் செல்வன

வாக நெடும் பல கைக்குல மாள் 

  வினை வாளுடை ஆடவர்

காக மிடைந்த களத்திரு 

  கைகளின் வந்து கலந்தனர்.  15 

 

 

கால் கழல் கட்டிய மள்ளர்கள் 

  கைகளின் மெய்கள் அடக்கிய

வாளொளி வட்ட முனைத்திட வந்து 

  இரு கைகளின் முந்தினர்

வேலொடு வேல் எதிர் நீள்வன 

  மேவிய பாதலம் விட்டுயர்

ஞாலமுறும் பணி வீரர்கள் நா 

  நிமிர்கின்றன ஒத்தன.  16 

 

 

வெங்கண் விறற் சிலை வீரர்கள் 

  வேறு இரு கையிலும் நேர்பவர்

தங்கள் சிலைக்குலம் உந்தின 

  தாவில் சரங்கள் நெருங்குவ

பொங்கு சினத்து எரியிற் புகை 

  போகு கொடிக்கள் வளைத்து எதிர்

செங்கண் விழிக் கனல் சிந்திய 

  சீறு பொறிச் செலவு ஒத்தன.  17 

 

 

வாளொடு நீள் கை துடித்தன 

  மார்பொடு வேல்கள் குளித்தன

தோளொடு வாளி நிலத்தன 

  தோலொடு தோல்கள் தகைத்தன

தாளொடு வார் கழல் இற்றன 

  தாரொடு சூழ் சிரம் அற்றன

நாளொடு சீறி மலைப்பவர் நாடிய 

  போர் செய் களத்தினில்.  18 

 

 

குருதியின் நதிகள் பரந்தன குறை 

  உடல் ஓடி அலைந்தன

பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி 

  குடர் உடல் பம்பின

வெருவர எருவை நெருங்கின 

  விசியறு துடிகள் புரண்டன

இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் 

  எதிர் அமர் செய் பறந்தலை.  19 

 

 

நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் 

  இருவரில் ஒரு வன்றொடர்

தாளிரு தொடை அற முன் பெயர் 

  சாரிகை முறைமை தடிந்தனன்

வாளொடு விழுமுடல் வென்றவன் 

  மார்பிடை அறமுன் எறிந்திட

ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் 

  பலர் உளர் எங்கணும்.  20 

 

 

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி 

  முன் உருவிய தட்டுடன்

நேருரம் உருவ உரப்புடன் நேர்பட 

  எதிர் எதிர் குத்தினர்

ஆருயிர் கழியவும் நிற்பவர் 

  ஆண்மையில் இருவரும் ஒத்தமை

போரடு படைகொடு அளப்பவர் 

  போல்பவர் அளவிலர் பட்டனர்.  21 

 

 

பொற்சிலை வளைய எதிர்ந்தவர் 

  புற்றரவு அனைய சரம்பட

விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி 

  கொள் சுரிகை வழங்கினர்

முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு 

  கொடை நிலை நின்றிட

உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் 

  உளர் சில கண்டர்கள்.  22 

 

 

அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் 

  முகம் உயிருள வென்றுறு

படர் சிறை சுலவு கருங்கொடி 

  படர்வன சுழல்வன துன்றலில்

விடு சுடர் விழிகள் இரும்பு செய் 

  வினைஞர் தம் உலையின் முகம் பொதி

புடை மிடை கரியிடை தங்கிய 

  புகை விடு தழலை நிகர்த்தன.  23 

 

 

திண் படை வயவர் பிணம்படு 

  செங்களம் அதனிடை முன் சிலர்

புண்படு வழி சொரியும் குடர் 

  பொங்கிய கழுகு பருந்தொடு

கொண்டெழு பொழுதினும் முன் செயல் 

  குன்றுதல் இலர் தலை நின்றனர்

விண்படர் கொடி விடு பண் 

  பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்.  24 

 

 

இம் முனைய வெம் போரில் 

  இரு படையின் வாள் வீரர்

வெம் முனையில் வீடியபின் 

  வீடாது மிக்கு ஒழிந்த

தம்முடைய பல் படைஞர் 

  பின்னாகத் தாம் முன்பு

தெம்முனையில் ஏனாதி நாதர் 

  செயிர்த்து எழுந்தார்.  25 

 

 

வெஞ்சினவாள் தீ உமிழ 

  வீரக் கழல் கலிப்ப

நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் 

  எதிர்ந்த ஞாட்பின் கண்

எஞ்சி எதிர் நின்ற 

  இகல் முனையில் வேலுழவர்

தஞ்சிரமும் தோளுரமும் தாளும் 

  விழத் துணித்தார்.  26 

 

 

தலைப்பட்டார் எல்லாரும் தனி 

  வீரர் வாளில்

கொலைப் பட்டார் முட்டாதார் 

  கொல் களத்தை விட்டு

நிலைப்பட்ட மெய் உணர்வு 

  நேர் பட்ட போதில்

அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் 

  போல் ஆயினார்.  27 

 

 

இந் நிலைய வெங்களத்தில் 

  ஏற்றழிந்த மானத்தால்

தன்னுடைய பல் படைஞர் 

  மீண்டார் தமைக் கொண்டு

மின்னொளி வாள் வீசி விறல் 

  வீரர் வெம் புலி யேறு

அன்னவர் தம் முன் சென்று .

  அதி சூரன் நேர் அடர்ந்தான்.  28 

 

 

மற்றவர் தம் செய்கை வடி 

  வாள் ஒளி காணச்

சுற்றி வரும் வட்ட அணையில் 

  தோன்றா வகை கலந்து

பற்றி அடர்க்கும் பொழுதில் 

  தானும் படை பிழைத்துப்

பொற்றடந் தோள் வீரர்க்கு 

  உடைந்து புறகிட்டான்.  29 

 

 

போன அதிசூரன் போரில் 

  அவர்க் கழிந்த

மான மிக மீதூர மண் 

  படுவான் கண் படான்

ஆன செயல் ஓர் 

  இரவும் சிந்தித்து அலமருவான் 

ஈன மிகு வஞ்சனையால் 

  வெல்வன் என எண்ணினான்.  30 

 

 

சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்

நாட்டாரைக் கொல்லாதே நாம் 

  இருவேம் வேறு இடத்து

வாட்டாயங் கொள் போர் 

  மலைக்க வருக எனத்

தோட்டார் பூந்தாரார்க்குச் 

  சொல்லிச் செலவிட்டான்.  31 

 

 

இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்

அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து

கை வாள் அமர் விளைக்கத் தான் 

  கருதும் அக் களத்தில்

வெவ்வாள் உரவோன் வருக 

  என மேற் கொள்வார்.  32 

 

 

சுற்றத்தார் யாரும் அறியா 

  வகை சுடர் வாள்

பொற் பலகையும் தாமே 

  கொண்டு புறம் போந்து

மற்றவன் முன் சொல்லி 

  வரக்குறித்த அக் களத்தே

பற்றலனை முன் வரவு 

  பார்த்துத் தனி நின்றார்.  33 

 

 

தீங்கு குறித்து அழைத்த 

  தீயோன் திரு நீறு 

தாங்கிய நெற்றியினார் 

  தங்களையே எவ்விடத்தும் 

ஆங்கு அவரும் தீங்கு 

  இழையார் என்பது அறிந்தானாய்ப்

பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்.  34 

 

 

வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி

உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு

வண்ணச் சுடர் வாள் மணிப் 

  பலகை கைக் கொண்டு

புண்ணியப் போர் வீரர்க்குச் 

  சொன்ன இடம் புகுந்தான்.  35 

 

 

வென்றி மடங்கல் விடக்கு 

  வர முன் பார்த்து

நின்றாற் போல் நின்ற நிலை 

  கண்டு தன் நெற்றி

சென்று கிடப்பளவுந் திண் 

  பலகையான் மறைத்தே

முன் தன் வீரர்க்கு எதிரே 

  மூண்டான் மறம் பூண்டான்.  36 

 

 

அடல் விடையேறு என்ன 

  அடர்த்தவனைக் கொல்லும்

இடை தெரிந்து தாள் 

  பெயர்க்கும் ஏனாதி நாதர்

புடை பெயர்ந்த மாற்றான் 

  பலகை புறம் போக்கக்

கடையவன் தன் நெற்றியின் மேல் 

  வெண்ணீறு தாம் கண்டார்.  37 

 

 

கண்ட பொழுதே கெட்டேன் முன்பு 

  இவர் மேல் காணாத

வெண் திரு நீற்றின் பொலிவு 

  மேற்கண்டேன் வேறு இனி என்

அண்டர் பிரான் சீர் அடியார் 

  ஆயினார் என்று மனம்

கொண்டு இவர் தம் கொள்கைக் 

  குறி வழி நிற்பேன் என்று.  38 

 

 

கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது

செய்யார் நிராயுதரைக் கொன்றார் 

  எனும் தீமை

எய்தாமை வேண்டும் இவர்க்கு 

  என்று இரும் பலகை

நெய் வாளுடன் அடர்த்து 

  நேர்வார் போல் நின்றார்.  39 

 

 

அந்நின்ற தொண்டர் திரு 

  உள்ளம் ஆர் அறிவார்

முன் நின்ற பாதகனும் தன் 

  கருத்தே முற்று வித்தான்

இந் நின்ற தன்மை அறிவார் 

  அவர்க்கு அருள

மின்னின்ற செஞ்சடையார் தாமே 

  வெளி நின்றார்.  40 

 

 

மற்றினி நாம் போற்றுவது என் 

  வானோர் பிரான் அருளைப்

பற்றலர் தம் கை வாளால் 

  பாசம் அறுத்து அருளி

உற்றவரை என்றும் உடன் 

  பிரியா அன்பு அருளிப்

பொற்றொடியாள் பாகனார் 

  பொன்னம்பலம் அணைந்தார்.  41 

 

 

தம் பெருமான் சாத்தும் 

  திரு நீற்றுச் சார்புடைய

எம் பெருமான் ஏனாதி 

  நாதர் கழல் இறைஞ்சி

உம்பர் பிரான் காளத்தி 

  உத்தமர்க்குக் கண்ணப்பும்

நம் பெருமான் செய்த பணி 

  நாம் தெரிந்தவாறு உரைப்பாம்.  42

 

திருச்சிற்றம்பலம்