பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

018 மானக்கஞ்சாற நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மேலாறு செஞ்சடை மேல் 

  வைத்தவர் தாம் விரும்பியது

நூலாறு நன்கு உணர்வார் 

  தாம் பாடு நோன்மையது

கோலாறு தேன் பொழியக் கொழுங் 

  கனியின் சாறு ஒழுகும்

காலாறு வயல் கரும்பின் 

  கமழ் சாறூர் கஞ்சாறூர்.  1 

 

 

கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் 

  பிழைத்து ஒதுங்கி

உண்ணீர்மைப் புணர்ச்சிக் கண் 

  உறைத்து மலர்க்கண் சிவக்கும்

தண்ணீர் மென் கழுநீர்க்குத் 

  தடஞ்சாலி தலை வணங்கும்

மண்ணீர்மை நலஞ்சிறந்த வள 

  வயல்கள் உள அயல்கள்.  2 

 

 

புயல் காட்டுங் கூந்தல் சிறு 

  புறங்காட்டப் புன மயிலின்

இயல் காட்டி இடை 

  ஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்

முயல் காட்டும் மதி தோற்கும் 

  முகம் காட்டக் கண் மூரிக்

கயல் காட்டுந் தடங்கள் பல 

  கதிர்காட்டுந் தடம் பணைகள்.  3 

 

 

சேறணி தண் பழன வயல் 

  செழுநெல்லின் கொழுங் கதிர் போய்

வேறருகு மிடை வேலிப் 

  பைங்கமுகின் மிடறுரிஞ்சி

மாறெழுதிண் குலை வளைப்ப 

  வண்டலை தண்டலை உழவர்

தாறரியும் நெடுங்கொடுவாள் அனையயுள 

  தனி இடங்கள்.  4 

 

 

பாங்கு மணிப்பல வெயிலும் 

  சுலவெயிலும் உள மாடம்

ஞாங்கரணி துகிற் கொடியும் நகிற் 

  கொடியும் உள அரங்கம்

ஓங்கு நிலைத் தோரணமும் 

  பூரண கும்பமும் உளவால்

பூம் கணை வீதியில் 

  அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு.  5 

 

 

மனை சாலும் நிலை அறத்தின் 

  வழிவந்த வளம் பெருகும்

வினை சாலும் உழவு தொழில் 

  மிக்க பெரும் குடி துவன்றிப்

புனை சாயல் மயில் அனையார் 

  நடம் புரியப் புகல் முழவம்

கனை சாறு மிடை 

  வீதிக் கஞ்சாறு விளங்கியதால்.  6 

 

 

அப் பதியில் குலப் பதியாய் 

  அரசர் சேனா பதியாம்

செப்பவருங் குடி விளங்க 

  திரு அவதாரம் செய்தார்

மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார் 

  விழுமிய வேளாண் குடிமை

வைப்பனைய மேன்மையினார் 

  மானக்கஞ் சாறனார்.  7 

 

 

பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் 

  பனி மதியின்

அணிவுடைய சடை முடியார்க்கு 

  ஆளாகும் பதம் பெற்ற

தணிவில் பெரும் பேறுடையார் தம் 

  பெருமான் கழல் சார்ந்த

துணிவுடைய தொண்டர்க்கே ஏவல் 

  செயும் தொழில் பூண்டார்.  8 

 

 

மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் 

  பெருக மற்றதெலாம்

ஆறுலவுஞ் சடைக் கற்றை 

  அந்தணர் தம் அடியாராம்

ஈறில் பெருந் திருவுடையார் 

  உடையார் என்றியாவையுநேர்

கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு 

  அறிந்து கொடுத்துள்ளார்.  9 

 

 

விரிகடல் சூழ் மண்ணுலகை 

  விளக்கிய இத் தன்மையராம்

பெரியவர்க்கு முன் சில நாள் 

  பிள்ளைப் பேறு இன்மையினால்

அரியறியா மலர்க் கழல்கள் 

  அறியாமை அரியாதார்

வரு மகவு பெறல் 

  பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்.  10 

 

 

குழைக் கலையும் வடி 

  காதில் கூத்தனார் அருளாலே

மழைக்கு உதவும் பெருங்கற்பின் 

  மனைக் கிழத்தியார் தம்பால்

இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த 

  இப் பிறவிக் கொடுஞ்சூழல்

பிழைக்கும் நெறி தமக்கு உதவப் 

  பெண் கொடியைப் பெற்று எடுத்தார்.  11 

 

 

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு 

  மூதூர் களி சிறப்பச்

சிறந்த நிறை மங்கல தூரியம் 

  முழங்கத் தேவர் பிரான்

அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் 

  வளத்து அருள் பெருக்கிப்

புறந்தருவார் போற்றி இசைப்பப் 

  பொற்கொடியை வளர்க்கின்றார்.  12 

 

 

காப்பணியும் இளங்குழவிப் பதநீங்கிக் 

  கமழ் சுரும்பின்

பூப்பயிலுஞ் சுருள் குழலும் 

  பொலங்குழையும் உடன் தாழ

யாப்புறு மென் சிறுமணிமேகலை 

  அணி சிற்றாடையுடன்

கோப்பமை கிண்கிணி அசையக் 

  குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி.  13 

 

 

புனை மலர்மென் கரங்களினால் 

  போற்றிய தாதியர் நடுவண்

மனையகத்து மணிமுன்றில் மணல் 

  சிற்றில் இழைத்து மணிக்

கனை குரல் நூபுரம் அலையக் 

  கழன்முதலாய் பயின்று முலை

நனை முகஞ்செய் முதல் பருவம் 

  நண்ணினள் அப்பெண் அமுதம்.  14 

 

 

உறுகவின் மெய்ப் புறம் பொலிய 

  ஒளி நுசுப்பை முலை வருத்த

முறுவல் புற மலராத 

  முகிண்முத்த நகை என்னும்

நறுமுகை மென் கொடி மருங்குல் 

  நளிர்ச் சுருள் அந்தளிர்ச் செங்கை

மறுவில் குலக்கொழுந்தினுக்கு மணப் 

  பருவம் வந்தணைய.  15 

 

 

திருமகட்கு மேல் விளங்கும் 

  செம்மணியின் தீபம் எனும்

ஒரு மகளை மண் உலகில் 

  ஓங்கு குல மரபினராய்க்

கரு மிடற்று மறையவனார் தமர் 

  ஆய கழல் ஏயர்

பெரு மகற்கு மகள் பேச 

  வந்து அணைந்தார் பெரு முதியோர்.  16 

 

 

வந்த மூதறிவோரை 

  மானக்கஞ் சாறனார்

முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த 

  மணத் திறம் கேட்டே

எந்தமது மரபினுக்குத் தகும் 

  பரிசால் ஏயும் எனச்

சிந்தை மகிழ்வுற உரைத்து 

  மணநேர்ந்து செலவிட்டார்.  17 

 

 

சென்றவரும் கஞ்சாறர் மணம் 

  இசைந்தபடி செப்பக்

குன்றனைய புயத்தேயர் கோனாரும் 

  மிக விரும்பி

நின்ற நிலைமையின் இரண்டு 

  திறத்தார்க்கும் நேர்வாய

மன்றல் வினை மங்கல நாள்  

  மதிநூல் வல்லவர் வகுத்தார்.  18 

 

 

மங்கலமாஞ் செயல் விரும்பி 

  மகள் பயந்த வள்ளலார்

தங்குல நீள் சுற்றம் எலாம் 

  தயங்கு பெருங்களி சிறப்பப்

பொங்கிய வெண் முளைப் பெய்து 

  பொலங் கலங்களிடை நெருங்கக்

கொங்கலர் தண் பொழில் மூதூர் 

  வதுவை முகங் கோடித்தார்.  19 

 

 

கஞ்சாறர் மகள் கொடுப்பக் 

  கைப் பிடிக்க வருகின்ற

எஞ்சாத புகழ்ப் பெருமை 

  ஏயர் குலப் பெருமானும்

தஞ்சால்பு நிறை சுற்றம் தலை 

  நிறைய முரசு இயம்ப

மஞ்சாலும் மலர்ச் சோலைக் 

  கஞ்சாற்றின் மருங்கணைய.  20 

 

 

வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு 

  அணையா முன் மலர்க்கண்

ஒள்ளிழையைப் பயந்தார் தந் 

  திருமனையில் ஒரு வழியே

தெள்ளுதிரை நீர் உலகம் 

  உய்வதற்கு மற்றவர்தம்

உள்ள நிலைப் பொருளாய உம்பர் 

  பிரான் தாம் அணைவார்.  21 

 

 

முண்டநிறை நெற்றியின் 

  மேல் முண்டித்த திருமுடியில்

கொண்டசிகை முச்சியின் கண் 

  கோத்தணிந்த எற்பு மணி

பண்டொருவன் உடல் அங்கம் பரித்த 

  நாள் அது கடைந்த

வெண்டரளம் எனக் காதின் 

  மிசை அசையும் குண்டலமும்.  22 

 

 

அவ்வென்பின் ஒளிமணி கோத்து 

  அணிந்த திருத் தாழ்வடமும்

பைவன்பேர் அரவு ஒழியத் 

  தோளில் இடும் பட்டிகையும்

மைவந்த நிறக் கேச வடப் 

  பூணு நூலும் மனச்

செவ்வன்பர் பவமாற்றுந் திரு 

  நீற்றுப் பொக்கணமும்.  23 

 

 

ஒரு முன் கைத்தனி மணிகோத்து 

  அணிந்த ஒளிர் சூத்திரமும்

அருமறை நூல் கோவணத்தின் 

  மிசை அசையும் திருவுடையும்

இரு நிலத்தின் மிசை தோய்ந்த 

  எழுதரிய திருவடியும்

திருவடியில் திருப் பஞ்ச 

  முத்திரையும் திகழ்ந்து இலங்க.  24 

 

 

பொடி மூடு தழல் என்னத் 

  திரு மேனி தனிற்பொலிந்த

படி நீடு திருநீற்றின் 

  பரப்பணிந்த பான்மையராய்க்

கொடி நீடு மறுகு அணைந்து 

  தம்முடைய குளிர் கமலத்து

அடி நீடும் மனத்து அன்பர் 

  தம் மனையின் அகம் புகுந்தார்.  25 

 

 

வந்து அணைந்த மா விரத 

  முனிவரைக் கண்டு எதிர் எழுந்து

சிந்தை களி கூர்ந்து மகிழ் 

  சிறந்த பெருந் தொண்டனார்

எந்தை பிரான் புரி தவத்தோர் 

  இவ் இடத்தே எழுந்து அருள

உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று 

  உருகிய அன்பொடு பணிந்தார்.  26 

 

 

நற்றவராம் பெருமானார் நலமிகும் 

  அன்பரை நோக்கி

உற்ற செயல் மங்கலம் இங்கு 

  ஒழுகுவது என் என அடியேன்

பெற்றது ஒரு பெண்கொடி தன் 

  வதுவை எனப் பெருந்தவரும் 

மற்று உமக்குச் சோபனம் ஆகுவது 

  என்று வாய் மொழிந்தார்.  27 

 

 

ஞானம் செய்தவர் அடி மேல் 

  பணிந்து மனை அகம் நண்ணி

மானக்கஞ் சாறனார் மணக் 

  கோலம் புனைந்து இருந்த

தேனக்க மலர்க் கூந்தல் திரு 

  மகளைக் கொண்டு அணைந்து

பானற்கந் தர மறைத்து 

  வரும் அவரைப் பணிவித்தார்.  28 

 

 

தம் சரணத்து இடைப் பணிந்து 

  தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்

மஞ்சு தழைத்து என வளர்ந்த 

  மலர்க் கூந்தல் புறம் நோக்கி

அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு 

  இவள் தன் மயிர் நமக்குப்

பஞ்ச வடிக்காம் என்றார் 

  பரவ அடித் தலங்கொடுப்பார்.  29 

 

 

அருள் செய்த மொழி கேளா 

  அடல் சுரிகைதனை உருவிப்

பொருள் செய்தாம் எனப் பெற்றேன் 

  எனக் கொண்டு பூங்கொடி தன்

இருள் செய்த கருங்கூந்தல் அடியில் 

  அரிந்து எதிர் நின்ற

மருள் செய்த பிறப்பு அறுப்பார் 

  மலர்க் கரத்தினிடை நீட்ட.  30 

 

 

வாங்குவார் போல் நின்ற மறைப் 

  பொருளாம் அவர் மறைந்து

பாங்கின் மலை வல்லியுடன் 

  பழைய மழவிடை யேறி

ஓங்கிய விண் மிசை வந்தார் 

  ஒளி விசும்பின் நிலன் நெருங்கத்

தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர் 

  தொழுது எதிர் விழுந்தார்.  31 

 

 

விழுந்து எழுந்து மெய்ம் மறந்த 

  மெய் அன்பர் தமக்கு மதிக்

கொழுந்து அலைய விழுங் கங்கை 

  குதித்த சடைக் கூத்தனார்

எழும் பரிவு நம் பக்கல் 

  உனக்கு இருந்த பரிசிந்தச்

செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் 

  என்று அருள் செய்தார்.  32 

 

 

மருங்கு பெருங்கண நாதர் 

  போற்றிசைப்ப வானவர்கள்

நெருங்க விடை மேல் கொண்டு 

  நின்றவர் முன் நின்றவர்தாம்

ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் 

  உச்சியின் மேல் குவித்தையர்

பெருங் கருணைத் திறம் போற்றும் 

  பெரும் பேறு நேர் பெற்றார்.  33 

 

 

தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து 

  இமையோர் துதி செய்ய

இண்டை வார் சடை முடியார் 

  எழுந்து அருளிப் போயினார்

வண்டுவார் குழற் கொடியைக் கைப் 

  பிடிக்க மணக் கோலம்

கண்டவர்கள் கண் களிப்பக் 

  கலிக் காமனார் புகுந்தார்.  34 

 

 

வந்தணைந்த ஏயர் குல 

  மன்னவனார் மற்றந்தச்

சிந்தை நினைவு அரிய செயல் 

  செறிந்தவர் பால் கேட்டருளிப்

புந்தியினில் மிக உவந்து 

  புனிதனார் அருள் போற்றிச்

சிந்தை தளர்ந்து அருள் செய்த 

  திருவாக்கின் திறம் கேட்டு.  35 

 

 

மனந்தளரும் இடர் நீங்கி 

  வானவர் நாயகர் அருளால்

புனைந்த மலர்க் குழல் பெற்ற 

  பூங்கொடியை மணம் புணர்ந்து

தனம் பொழிந்து பெருவதுவை 

  உலகெலாம் தலை சிறப்ப

இனம்பெருகத் தம்முடைய எயின் 

  மூதூர் சென்றணைந்தார்.  36 

 

 

ஒரு மகள் கூந்தல் தன்னை 

  வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த

பெருமையார் தன்மை போற்றும் 

  பெருமை என் அளவிற்றாமே

மருவிய கமரிற் புக்க மா 

  வடு விடேல் என் ஓசை

உரிமையால் கேட்க வல்லார் திறம் 

  இனி உரைக்கல் உற்றேன்.  37 

 

திருச்சிற்றம்பலம்