அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
செய்யுள் நிகழ் சொல் தெளிவும்
செவ்விய நூல் பல நோக்கும்
மெய் உணர்வின் பயன் இதுவே
எனத் துணிந்து விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார்
மலர் அடிக்கே ஆளானார்
பொய் அடிமை இல்லாத புலவர்
எனப் புகழ் மிக்கார். 1
பொற்பு அமைந்த அரவாரும்
புரிசடையார் தமை அல்லால்
சொற்பதங்கள் வாய் திறவாத்
தொண்டு நெறித் தலைநின்ற
பெற்றியினில் மெய் அடிமை
உடையாராம் பெரும் புலவர்
மற்றவர் தம் பெருமையார்
அறிந்து உரைக்க வல்லார்கள். 2
ஆங்கு அவர் தம் அடி இணைகள்
தலை மேல் கொண்டு அவனி எலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம்
செய்த தவம் அனையார்
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை
உணர் செயல் புரிந்த
பூங் கழலார் புகழ்ச்
சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம். 3
திருச்சிற்றம்பலம்