பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

048 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கோடாத நெறி விளக்கும் 

  குலமரபின் அரசு அளித்து

மாடாக மணி கண்டர் 

  திருநீறே மனம் கொள்வார்

தேடாத பெருவளத்தில் சிறந்த 

  திருமுனைப் பாடி

நாடாளும் காவலனார் நரசிங்க 

  முனையரையர்.  1 

 

 

இம்முனையர் பெருந்தகையார் இருந்து 

  அரசு புரந்து போய்த்

தெம் முனைகள் பல கடந்து 

  தீங்கு நெறிப் பாங்கு அகல

மும்முனை நீள் இலைச் சூல 

  முதற்படையார் தொண்டுபுரி

அம் முனைவர் அடி அடைவே அரும் 

  பெரும் பேறு என அடைவார்.  2 

 

 

சின விடையார் கோயில் தொறுந் 

  திருச் செல்வம் பெருக்குநெறி

அனவிடை ஆருயிர் துறக்க வரும் 

  எனினும் அவை காத்து

மனவிடையாமைத் தொடையல் 

  அணிமார்பர் வழித்தொண்டு

கனவிடை ஆகிலும் வழுவாக் 

  கடன் ஆற்றிச் செல்கின்றார்.  3 

 

 

ஆறு அணிந்த சடை முடியார்க்கு 

  ஆதிரை நாள் தொறும் என்றும்

வேறு நிறை வழிபாடு 

  விளங்கிய பூசனை மேவி

நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு 

  எல்லாம் நிகழ் பசும் பொன்

நூறு குறையாமல் அளித்து 

  இன் அமுது நுகர்விப்பார்.  4 

 

 

ஆன செயல் முறை புரிவார் 

  ஒரு திருவாதிரை நாளில்

மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய 

  பொன் இடும் பொழுதில்

மான நிலை அழிதன்மை 

  வரும் காமக்குறி மலர்ந்த

ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் 

  நீறு அணிந்து அணைந்தார்.  5 

 

 

மற்று அவர் தம் வடிவு 

  இருந்த படி கண்டு மருங்குள்ளார்

உற்ற இகழ்ச்சியராக ஒதுங்குவார் 

  தமைக் கண்டு

கொற்றவனார் எதிர் சென்று 

  கைகுவித்துக் கொடு போந்தப்

பெற்றியினார் தமை மிகவும் 

  கொண்டாடிப் பேணுவார்.  6 

 

 

சீலம் இலரே எனினும் 

  திருநீறு சேர்ந்தாரை

ஞாலம் இகழ்ந்து அருநரகம் 

  நண்ணாமல் எண்ணுவார்

பாலணைந்தார் தமக்கு அளித்தபடி 

  இரட்டிப் பொன் கொடுத்து

மேலவரைத் தொழுது இனிய மொழி 

  விளம்பி விடை கொடுத்தார்.  7 

 

 

இவ்வகையே திருத் தொண்டின் 

  அருமை நெறி எந்நாளும்

செவ்விய அன்பினில் ஆற்றித் 

  திருந்திய சிந்தையர் ஆகிப்

பை வளர் வாள் அரவு 

  அணிந்தார் பாதமலர் நிழல் சேர்ந்து

மெய் வகைய வழி அன்பின் 

  மீளாத நிலை பெற்றார்.  8 

 

 

விட நாகம் அணிந்த பிரான் 

  மெய்த்தொண்டு விளைந்த நிலை

உடனாகும் நரசிங்க முனையர் 

  பிரான் கழல் ஏத்தித்

தடநாகம் மதம் சொரியத் தனம் 

  சொரியும் கலம் சேரும்

கடனாகை அதிபத்தர் கடனாகைக் 

  கவின் உரைப்பாம்.  9 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

வேப்பிலைக்கட்டிச் சித்தர்
View Details
உரோம முனி சித்தர்
View Details
சோழனுக்குக் கதவு திறந்து விடுதல்
View Details