பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

049 அதிபத்த நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மன்னி நீடிய செங்கதிரவன் 

  வழி மரபின்

தொன்மையாம் முதல் சோழர் 

  தம் திருக்குலத்து உரிமைப்

பொன்னி நாடு எனும் கற்பகப் 

  பூங்கொடி மலர் போல்

நன்மை சான்றது நாகப் 

  பட்டினத் திரு நகரம்.  1 

 

 

தாம நித்திலக் கோவைகள் 

  சரிந்திடச் சரிந்த

தேமலர்க் குழல் மாதர் பந்து 

  ஆடும் தெற்றிகள் சூழ்

காமர் பொற்சுடர் மாளிகைக் 

  கரும் கடல் முகந்த

மாமுகில் குலம் மலை 

  என ஏறுவ மருங்கு.  2 

 

 

பெருமையில் செறி பேரொலி 

  பிறங்கலின் நிறைந்து

திருமகட்கு வாழ் சேர் 

  இடம் ஆதலில் யாவும்

தருதலின் கடல் தன்னினும் பெரிது 

  எனத் திரை போல்

கரி பரித் தொகை மணி 

  துகில் சொரிவதாம் கலத்தால்.  3 

 

 

நீடு தொல் புகழ் 

  நிலம் பதினெட்டினும் நிறைந்த

பீடு தங்கிய பல 

  பொருள் மாந்தர்கள் பெருகிக்

கோடி நீள் தனக் 

  குடியுடன் குவலயம் காணும்

ஆடி மண்டலம் போல்வது 

  அவ்வணி கிளர் மூதூர்.  4 

 

 

அந்நெடும் திரு நகர் மருங்கு 

  அலை கடல் விளிம்பில்

பன்னெடும் திரை நுரை 

  தவழ் பாங்கரின் ஞாங்கர்

மன்னும் தொன்மையின் வலை 

  வளத்து உணவினில் மலிந்த

தன்மை வாழ்குடி மிடைந்தது 

  தட நுளைப் பாடி.  5 

 

 

புயல் அளப்பன என வலை 

  புறம்பு அணை குரம்பை

அயல் அளப்பன மீன் விலைப் 

  பசும் பொனின் அடுக்கல்

வியல் அளக்கரில் விடுந்திமில் 

  வாழ்நர்கள் கொணர்ந்த

கயல் அளப்பன பரத்தியர் 

  கரு நெடும் கண்கள்.  6 

 

 

உணங்கல் மீன் கவர்வுறு 

  நசைக் குருகுடன் அணைந்த

கணம் கொள் ஓதிமம் கரும் 

  சினைப் புன்னையங் கானல்

அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் 

  அசை நடைக் கழிந்து

மணம் கொள் கொம்பரின் மருங்கு 

  நின்று இழியல மருளும்.  7 

 

 

வலை நெடும் தொடர் வடம் 

  புடை வலிப்பவர் ஒலியும்

விலை பகர்ந்து மீன் குவை 

  கொடுப்பவர் விளி ஒலியும்

தலை சிறந்த வெள் வளை 

  சொரிபவர் தழங்கு ஒலியும்

அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு 

  எதிர் ஒலி அனைய.  8 

 

 

அனையதாகிய அந்நுளைப் 

  பாடியில் அமர்ந்து

மனை வளம் பொலி நுளையர் 

  தம் குலத்தினில் வந்தார்

புனை இளம் பிறை 

  முடியவர் அடித்தொண்டு புரியும்

வினை விளங்கிய அதி பத்தர் 

  என நிகழ் மேலோர்.  9 

 

 

ஆங்கு அன்பர் தாம் நுளையர் 

  தம் தலைவராய் அவர்கள்

ஏங்கு தெண் திரைக் 

  கடலிடைப் பலபட இயக்கிப்

பாங்கு சூழ்வலை வளைத்து மீன் 

  படுத்து முன் குவிக்கும்

ஓங்கு பல் குவை 

  உலப்பில உடையராய் உயர்வார்.  10 

 

 

முட்டில் மீன் கொலைத் தொழில் 

  வளத்தவர் வலை முகந்து

பட்ட மீன்களில் ஒரு தலை 

  மீன் படுந் தோறும்

நட்டம் ஆடிய நம்பருக்கு 

  என நளிர் முந்நீர்

விட்டு வந்தனர் விடாத 

  அன்புடன் என்றும் விருப்பால்.  11 

 

 

வாகு சேர் வலை நாள் 

  ஒன்றில் மீன் ஒன்று வரினும்

ஏக நாயகர் தங்கழற் 

  கென விடும் இயல்பால்

ஆகும் நாள்களில் அநேக நாள் 

  அடுத்து ஒரு மீனே

மேக நீர் படி வேலையில் 

  பட விட்டு வந்தார்.  12 

 

 

மீன் விலைப் பெருகு உணவினில் 

  மிகு பெரும் செல்வம்

தான் மறுத்தலின் உணவு இன்றி 

  அரும் கிளை சாம்பும்

பான்மை பற்றியும் வருந்திலர் 

  பட்ட மீன் ஒன்று

மான் மறிக் கரத்தவர் கழற்கு 

  என விட்டு மகிழ்ந்தார்.  13 

 

 

சால நாள்கள் இப்படி வரத் 

  தாம் உணவு அயர்த்து

கோல மேனியும் தளரவும் 

  தம் தொழில் குறையாச்

சீலமே தலை நின்றவர் 

  தம் திறம் தெரிந்தே

ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு 

  எனும் அமுது உண்பார்.  14 

 

 

ஆன நாள் ஒன்றில் அவ்வொரு 

  மீனும் அங்கு ஒழித்துத்

தூ நிறப் பசும் கனக 

  நல் சுடர் நவமணியால்

மீன் உறுப்பு உற அமைத்து 

  உலகு அடங்கலும் விலையாம்

பான்மை அற்புதப் படியது 

  ஒன்று இடுவலைப் படுத்தார்.  15 

 

 

வாங்கு நீள் வலை அலைகடல் 

  கரையில் வந்து ஏற

ஓங்கு செஞ்சுடர் உதித்து 

  என உலகெலாம் வியப்பத்

தாங்கு பேரொளி தழைத்திடக் 

  காண்டலும் எடுத்துப்

பாங்கு நின்றவர் மீன் 

  ஒன்று படுத்தனம் என்றார்.  16 

 

 

என்று மற்று உளோர் இயம்பவும் 

  ஏறு சீர்த் தொண்டர்

பொன் திரள் சுடர் 

  நவமணி பொலிந்தமீன் உறுப்பாம் 

ஒன்று மற்றிது என்னை 

  ஆள் உடையவர்க்கு ஆகும்

சென்று பொன் கழல் சேர்க 

  எனத் திரை யொடும் திரித்தார்.  17 

 

 

அகில லோகமும் பொருள் 

  முதற்றாம் எனும் அளவில்

புகலும் அப்பெரும் பற்றினைப் 

  புரை அற எறிந்த

இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் 

  இறைவர் தாம் விடைமேல்

முகில் விசும்பிடை அணைந்தனர் 

  பொழிந்தனர் முகைப்பூ.  18 

 

 

பஞ்ச நாதமும் எழுந்தன 

  அதிபத்தர் பணிந்தே

அஞ்சலிக் கரம் சிரம் மிசை 

  அணைத்து நின்று அவரை

நஞ்சு வாண்மணி மிடற்றவர் 

  சிவலோகம் நண்ணித்

தஞ்சிறப்புடை அடியர் பாங்கு 

  உறத்தலை அளித்தார்.  19 

 

 

தம் மறம் புரி மரபினில் 

  தகும் பெருந் தொண்டு

மெய்ம்மையே புரி அதிபத்தர் 

  விளங்கு தாள் வணங்கி

மும்மையாகிய புவனங்கள் 

  முறைமையில் போற்றும்

செம்மை நீதியார் கலிக்கம்பர் 

  திருத்தொண்டு பகர்வாம்.  20 

 

திருச்சிற்றம்பலம்