பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

074 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

துலையில் புறவின் நிறை அளித்த 

  சோழர் உரிமைச் சோணாட்டில்

அலையில் தரளம் அகிலொடு சந்து அணி 

  நீர்ப் பொன்னி மணி கொழிக்கும்

குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் 

  மருங்கு குளிர் சோலை

நிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் 

  தண் கானம் ஒன்று உளதால்.  1 

 

 

அப் பூங்கானில் வெண்ணாவல் அதன் 

  கீழ் முன்னாள் அரிதேடும்

மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும் 

  மிக்க தவத்தோர் வெள்ளானை

கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக் 

  கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி

மைப்பூங் குவளைக் களத்தாரை 

  நாளும் வழிபட்டு ஒழுகுமால்.  2 

 

 

ஆன செயலால் திருவானைக்கா 

  என்று அதற்குப் பெயராக

ஞானம் உடைய ஒரு சிலந்தி 

  நம்பர் செம் பொன் திருமுடிமேல்

கானல் விரவும் சருகு உதிரா 

  வண்ணம் கலந்த வாய் நூலால்

மேல் நல்திரு மேற்கட்டி என 

  விரிந்து செறியப் புரிந்து உளதால்.  3 

 

 

நன்றும் இழைத்த சிலம்பி வலைப் 

  பரப்பை நாதன் அடி வணங்கச் 

சென்ற யானை அநுசிதம் என்று 

  அதனைச் சிதைக்கச் சிலம்பிதான்

இன்று களிற்றின் கரம் சுலவிற்று 

  என்று மீள இழைத்ததனை

அன்று கழித்த பிற்றைநாள் 

  அடல் வெள்ளானை அழித்ததால்.  4 

 

 

எம்பிரான் தன் மேனியின் மேல் 

  சருகு விழாமையான் வருந்தி

உம்பர் இழைத்த நூல் வலயம் 

  அழிப்பதே என்று உறுத்து எழுந்து

வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் 

  புக்குக் கடிப்ப வேகத்தால்

கும்ப யானை கை நிலத்தில் 

  மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.  5 

 

 

தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி 

  தானும் உயிர் நீங்க

மறையில் பொருளும் தரும் ஆற்றான் 

  மத யானைக்கும் வரம் கொடுத்து

முறையில் சிலம்பி தனைச் சோழர் 

  குலத்து வந்து முன் உதித்து

நிறையில் புவனம் காத்து அளிக்க 

  அருள் செய்தருள நிலத்தின் கண்.  6 

 

 

தொன்மை தரு சோழர் 

  குலத்து அரசனாம் சுபதேவன்

தன்னுடைய பெருந்தேவி கமலவதி 

  யுடன் சார்ந்து

மன்னு புகழ்த் திருத்தில்லை 

  மன்றாடு மலர்ப் பாதம்

சென்னியுறப் பணிந்து ஏத்தித் 

  திருப்படிக் கீழ் வழிபடு நாள்.  7 

 

 

மக்கள் பேறு இன்மையினால் 

  மாதேவி வரம் வேண்டச்

செக்கர் நெடுஞ் சடைக் கூத்தர் 

  திரு உள்ளம் செய்தலினால்

மிக்க திருப்பணி செய்த 

  சிலம்பிகுல வேந்து மகிழ்

அக் கமலவதி வயிற்றில் அணி 

  மகவாய் வந்து அடைய.  8 

 

 

கழையார் தோளி கமலவதி தன்பால் 

  கருப்ப நாள் நிரம்பி

விழைவார் மகவு பெற அடுத்த 

  வேலை அதனில் காலம் உணர்

பழையார் ஒரு நாழிகை கழித்துப் 

  பிறக்கு மேல் இப் பசுங்குழவி

உழையார் புவனம் ஒரு மூன்றும் 

  அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.  9 

 

 

பிறவா ஒரு நாழிகை கழித்து என் 

  பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்

உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என 

  உற்ற செயல் மற்று அது முற்றி

அறவாணர்கள் சொல்லிய காலம் 

  அணையப் பிணிவிட்டு அருமணியை

இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து 

  என் கோச்செங்கண்ணானோ என்றாள்.  10 

 

 

தேவி புதல்வர் பெற்று இறக்கச் 

  செங்கோல் சோழன் சுபதேவன்

ஆவி அனைய அரும் புதல்வன் 

  தன்னை வளர்த்து அங்கணி மகுடம்

மேவும் உரிமை முடி கவித்துத் 

  தானும் விரும்பு பெருந் தவத்தின்

தாவில் நெறியைச் சென்று அடைந்து 

  தலைவர் சிவலோகம் சார்ந்தான்.  11 

 

 

கோதை வேலர் கோச்செங்கட் சோழர் 

  தாம் இக் குவலயத்தில்

ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து 

  பிறந்து மண் ஆள்வார்

பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் 

  பெருந் தண் சிவாலயங்கள்

காதலோடும் பல எடுக்கும் தொண்டு 

  புரியும் கடன் பூண்டார்.  12 

 

 

ஆனைக் காவில் தாம் முன்னம் 

  அருள் பெற்று அதனை அறிந்து அங்கு

மானைத் தரித்த திருக்கரத்தார் 

  மகிழும் கோயில் செய்கின்றார்

ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே 

  கூட நலம் சிறக்க

பால் நல் களத்துத் தம்பெருமான் அமரும் 

  கோயில் பணி சமைத்தார்.  13 

 

 

மந்திரிகள் தமை ஏவி 

  வள்ளல் கொடை அனபாயன்

முந்தை வரும் குல 

  முதலோராய முதற் செங்கணார்

அந்தமில் சீர்ச் சோணாட்டில் 

  அகனாடு தொறும் அணியார்

சந்திர சேகரன் அமரும் 

  தானங்கள் பல சமைத்தார்.  14 

 

 

அக் கோயில் தொறும் 

  சிவனுக்கு அமுதுபடி முதலான

மிக்க பெரும் செல்வங்கள் 

  விருப்பினால் மிக அமைத்துத்

திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் 

  முறை நிறுத்தித் தேர் வேந்தர்

முக்கண் முதல் நடம் ஆடும் 

  முதல் தில்லை முன்னினார்.  15 

 

 

திருவார்ந்த செம்பொன்னின் 

  அம்பலத்தே நடம் செய்யும்

பெருமானை அடிவணங்கிப் பேரன்பு 

  தலை சிறப்ப

உருகா நின்று உளம் களிப்பத் 

  தொழுது ஏத்தி உறையும் நாள்

வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் 

  பல சமைத்தார்.  16 

 

 

தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் 

  செங்கட் செம்பியர் கோன்

பூவலயம் பொது நீக்கி 

  ஆண்டருளிப் புவனியின் மேல்

ஏவிய நல்தொண்டு புரிந்து 

  இமையவர்கள் அடி போற்ற

மேவினார் திருத்தில்லை வேந்தர் 

  திருவடி நிழல் கீழ்.  17 

 

 

கருநீல மிடற்றார் செய்ய 

  கழலடி நீழல் சேர

வருநீர்மை உடைய செங்கட் சோழர் 

  தம் மலர்த்தாள் வாழ்த்தித்

தருநீர்மை இசை கொள் யாழின் 

  தலைவராய் உலகம் ஏத்தும்

திருநீல கண்டப் பாணர் திறம் 

  இனிச் செப்பல் உற்றேன்.  18 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அன்னக்குழி, வைகை அழைத்தல்
View Details
வைகையாற்று வெள்ளம்
View Details
பொன் முத்திரையர் (ஸ்ரீ ஸ்வர்ண பைரவர்)
View Details