மூன்றாம்-திருமுறை

074 காடுபயில் வீடுமுடை யோடுகலன்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : தேவூர்

திருச்சிற்றம்பலம்

 

காடுபயில் வீடுமுடை யோடுகலன்

  மூடுமுடை யாடைபுலிதோல்

தேடுபலி யூணதுடை வேடமிகு

  வேதியர் திருந்துபதிதான்

நாடகம தாடமஞ்ஞை பாடவரி

  கோடல்கைம்ம றிப்பநலமார்

சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ்

  மாடமிடை தேவூரதுவே.  1 

 

 

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ

  ருக்குவனி கொக்கிறகொடும்

வாளரவு தண்சலம கட்குலவு

  செஞ்சடைவ ரத்திறைவனூர்

வேளரவு கொங்கையிள மங்கையர்கள்

  குங்குமம்வி ரைக்குமணமார்

தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை

  வொன்றிவரு தேவூரதுவே.  2 

 

 

பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை

  பங்கன்எமை யாளும்இறைவன்

எண்தடவு வானவரி றைஞ்சுகழ

  லோன்இனிதி ருந்தஇடமாம்

விண்தடவு வார்பொழிலு குத்தநற

  வாடிமலர் சூடிவிரையார்

*செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு

  வொன்றிவளர் தேவூரதுவே. 

 

(* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. )  3 

 

 

மாசில்மனம் நேசர்தம தாசைவளர்

  சூலதரன் மேலையிமையோர்

ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு

  பாசுபதன் மேவுபதிதான்

வாசமலர் கோதுகுயில் வாசகமும்

  மாதரவர் பூவைமொழியுந்

தேசவொலி வீணையொடு கீதமது

  வீதிநிறை தேவூரதுவே.  4 

 

 

கானமுறு மான்மறியன் ஆனையுரி

  போர்வைகன லாடல்புரிவோன்

ஏனஎயி றாமையிள நாகம்வளர்

  மார்பினிமை யோர்தலைவனூர்

வானணவு சூதமிள வாழைமகிழ்

  மாதவிப லாநிலவிவார்

தேனமுது வுண்டுவரி வண்டுமருள்

  பாடிவரு தேவூரதுவே.  5 

 

 

ஆறினொடு கீறுமதி யேறுசடை

  யேறன்அடை யார்நகர்கள்தான்

சீறுமவை வேறுபட நீறுசெய்த

  நீறன்நமை யாளும்அரனூர்

வீறுமலர் ஊறுமது ஏறிவளர்

  வாயவிளை கின்றகழனிச்

சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள

  வாளைவரு தேவூரதுவே.  6 

 

 

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம்

  அன்றவிய நின்றுநகைசெய்

என்றனது சென்றுநிலை யெந்தைதன

  தந்தையமர் இன்பநகர்தான்

முன்றின்மிசை நின்றபல வின்கனிகள்

  தின்றுகற வைக்குருளைகள்

சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை

  யாடிவளர் தேவூரதுவே.  7 

 

 

ஓதமலி கின்றதென் இலங்கையரை

  யன்மலிபு யங்கள்நெரியப்

பாதமலி கின்றவிர லொன்றினில

  டர்த்தபர மன்றனதிடம்

போதமலி கின்றமட வார்கள்நட

  மாடலொடு பொங்குமுரவஞ்

சேதமலி கின்றகரம் வென்றிதொழி

  லாளர்புரி தேவூரதுவே.  8 

 

 

வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு

  சுண்ணமலி வண்ணமலர்மேல்

நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்

  கண்ணவன் நலங்கொள்பதிதான்

வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய

  அன்னநடை யின்மொழியினார்

திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை

  யாழ்மருவு தேவூரதுவே.  9 

 

 

பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு

  மெச்சமறு போதியருமா

மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு

  நச்சரவன் மொச்சநகர்தான்

மைச்சின்முகில் வைச்சபொழில்... ... ... ... ... ..

... ... ... ... .. ... ... ... ... 

 

 

( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின )  10 

 

 

துங்கமிகு பொங்கரவு தங்குசடை

  நங்களிறை துன்றுகுழலார்

செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு

  பங்கனமர் தேவூரதன்மேல்

பைங்கமல மங்கணிகொள் திண்புகலி

  ஞானசம் பந்தனுரைசெய்

சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை

  வல்லவர்கள் சங்கையிலரே.  11 

 

திருச்சிற்றம்பலம்