மூன்றாம்-திருமுறை

094 விண்ணவர் தொழுதெழு

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : சீர்காழி - 04-வெங்குரு

திருச்சிற்றம்பலம்

 

விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய    

  சுண்ணவெண் பொடியணி வீரே    

சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்    

  எண்ணவல் லாரிட ரிலரே.  1 

 

 

வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய    

  ஆதிய அருமறை யீரே    

ஆதிய அருமறை யீருமை யலர்கொடு    

  ஓதிய ருணர்வுடை யோரே.  2 

 

 

விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய    

  இளம்பிறை யணிசடை யீரே    

இளம்பிறை யணிசடை யீரும திணையடி    

  உளங்கொள உறுபிணி யிலரே.  3 

 

 

விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய    

  வண்டமர் வளர்சடை யீரே    

வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்    

  தொண்டர்கள் துயர்பிணி யிலரே.  4 

 

 

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய    

  அக்கினொ டரவசைத் தீரே    

அக்கினொ டரவசைத் தீரும தடியிணை    

  தக்கவர் உறுவது தவமே.  5 

 

 

வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய    

  அந்தமில் பெருமையி னீரே    

அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு    

  சிந்தைசெய் வோர்வினை சிதைவே.  6 

 

 

விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய    

  அழல்மல்கும் அங்கையி னீரே    

அழல்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு    

  தொழஅல்லல் கெடுவது துணிவே.  7 

 

 

வித்தக மறையவர் வெங்குரு மேவிய    

  மத்தநன் மலர்புனை வீரே    

மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்    

  சித்தம துடையவர் திருவே.  8 

 

 

மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய    

  ஆலநன் மணிமிடற் றீரே    

ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்    

  சீலம துடையவர் திருவே.  9 

 

 

விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய    

  அரைமல்கு புலியத ளீரே    

அரைமல்கு புலியத ளீரும தடியிணை    

  உரைமல்கு புகழவர் உயர்வே.  10 

 

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பிராந்தர்
View Details
வலையன் மகளை மணத்தல்
View Details
அன்னக்குழி, வைகை அழைத்தல்
View Details