மூன்றாம்-திருமுறை

124 சுண்ணவெண் ணீறணி

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : குருகாவூர் வெள்ளடை

திருச்சிற்றம்பலம்

 

சுண்ணவெண் ணீறணி

  மார்பில் தோல்புனைந்

தெண்ணரும் பல்கணம்

  ஏத்தநின் றாடுவார்

விண்ணமர் பைம்பொழில்

  வெள்ளடை மேவிய

பெண்ணமர் மேனியெம்

  பிஞ்ஞக னாரே.  1 

 

 

திரைபுல்கு கங்கை

  திகழ்சடை வைத்து

வரைமக ளோடுடன்

  ஆடுதிர் மல்கு

விரைகமழ் தண்பொழில்

  வெள்ளடை மேவிய

அரை மல்கு வாளர

  வாட்டுகந் தீரே.  2 

 

 

அடையலர் தொல்நகர்

  மூன்றெரித் தன்ன

நடைமட மங்கையொர்

  பாகம் நயந்து

விடையுகந் தேறுதிர்

  வெள்ளடை மேவிய

சடையமர் வெண்பிறைச்

  சங்கர னீரே.  3 

 

 

வளங்கிளர் கங்கை

  மடவர லோடு

களம்பட ஆடுதிர்

  காடரங் காக

விளங்கிய தண்பொழில்

  வெள்ளடை மேவிய

இளம்பிறை சேர்சடை

  யெம்பெரு மானே.  4 

 

 

சுரிகுழல் நல்ல

  துடியிடை யோடு

பொரிபுல்கு காட்டிடை

  யாடுதிர் பொங்க

விரிதரு பைம்பொழில்

  வெள்ளடை மேவிய

எரிமழு வாட்படை

  எந்தை பிரானே.  5 

 

 

காவியங் கண்மட

  வாளொடுங் காட்டிடைத்

தீயக லேந்திநின்

  றாடுதிர் தேன்மலர்

மேவிய தண்பொழில்

  வெள்ளடை மேவிய

ஆவினில் ஐந்துகொண்

  டாட்டுகந் தீரே. 6

 

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

ஸ்ரீ பெத்த நாராயண சித்தர்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details
அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details