நான்காம்-திருமுறை

020 காண்டலேகருத் தாய்நினைந்திருந்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

காண்டலேகருத் தாய்நினைந்திருந் 

  தேன்மனம்புகுந் தாய்கழலடி

பூண்டுகொண் டொழிந்தேன் 

  புறம்போயி னாலறையோ

ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை 

  மேலெழுகொடி வானிளம்மதி

தீண்டிவந் துலவுந் 

  திருவாரூ ரம்மானே.  1 

 

 

கடம்படந்நட மாடினாய்களை 

  கண்ணெனக்கொரு காதல்செய்தடி

ஒடுங்கி வந்தடைந் 

  தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்

முடங்கிறால்முது நீர்மலங்கிள 

  வாளைசெங்கயல் சேல்வரால்களி

றடைந்த தண்கழனி 

  அணியாரூ ரம்மானே.  2 

 

 

அருமணித்தடம் பூண்முலை 

  அரம்பையரொ டருளிப்பாடியர்

உரிமையிற் றொழுவார் 

  உருத்திர பல்கணத்தார்

விரிசடைவிர திகளந்தணர் 

  சைவர்பாசுப தர்கபாலிகள்

தெருவினிற் பொலியுந் 

  திருவாரூ ரம்மானே.  3 

 

 

பூங்கழல்தொழு தும்பரவியும் 

  புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்

ஈங்கிருக்கப் பெற்றேன் 

  என்னகுறை யுடையேன்

ஓங்குதெங்கிலை யார்கமுகிள 

  வாழைமாவொடு மாதுளம்பல

தீங்கனி சிதறுந் 

  திருவாரூ ரம்மானே.  4 

 

 

நீறுசேர்செழு மார்பினாய்நிரம் 

  பாமதியொடு நீள்சடையிடை

ஆறுபாய வைத்தாய் 

  அடியே அடைந்தொழிந்தேன்

ஏறிவண்டொடு தும்பியஞ்சிற 

  கூன்றவிண்ட மலரிதழ்வழி

தேறல்பாய்ந் தொழுகுந் 

  திருவாரூ ரம்மானே.  5 

 

 

அளித்துவந்தடி கைதொழுமவர் 

  மேல்வினைகெடு மென்றிவையகங்

களித்துவந் துடனே 

  கலந்தாடக் காதலராய்க்

குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் 

  தாடுகோதையர் குஞ்சியுள்புகத்

தெளிக்குந் தீர்த்தமறாத் 

  திருவாரூ ரம்மானே.  6 

 

 

திரியுமூவெயில் தீயெழச்சிலை 

  வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்

பிரியுமா றெங்ஙனே 

  பிழைத்தேயும் போகலொட்டேன்

பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த 

  சாலிதிப்பிய மென்றிவையகத்

தரியுந் தண்கழனி 

  யணியாரூ ரம்மானே.  7 

 

 

பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட 

  வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்

றிறக்குமா றுளதே 

  இழித்தேன் பிறப்பினைநான்

அறத்தையேபுரிந் தமனத்தனாய் 

  ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்

திறத்தனாய் ஒழிந்தேன் 

  திருவாரூ ரம்மானே.  8 

 

 

முளைத்தவெண்பிறை மொய்சடையுடை 

  யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள

வளைத்துக் கொண்டிருந்தேன் 

  வலிசெய்து போகலொட்டேன்

அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு 

  தந்தகாலமுங் கண்டுதன்பெடை

திளைக்குந் தண்கழனித் 

  திருவாரூ ரம்மானே.  9 

 

 

நாடினார்கம லம்மலரய 

  னோடிரணியன் ஆகங்கீண்டவன்

நாடிக் காணமாட்டாத் 

  தழலாய நம்பானைப்

பாடுவார்பணி வார்பல்லாண்டிசை 

  கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்

தேடிக் கண்டுகொண்டேன் 

  திருவாரூ ரம்மானே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பத்திரைக்கு வாதில் வெற்றி அளித்தல்
View Details
சோமசுந்திரர்
View Details
இந்திரன் பழிதீர்த்தல்
View Details