நான்காம்-திருமுறை

091 குறுவித்த வாகுற்ற

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

குறுவித்த வாகுற்ற நோய்வினை 

  காட்டிக் குறுவித்தநோய்

உறுவித்த வாவுற்ற நோய்வினை 

  தீர்ப்பான் உகந்தருளி

அறிவித்த வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

செறிவித்த வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  1 

 

 

கூர்வித்த வாகுற்ற நோய்வினை 

  காட்டியுங் கூர்வித்தநோய்

ஊர்வித்த வாவுற்ற நோய்வினை 

  தீர்ப்பான் உகந்தருளி

ஆர்வித்த வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  2 

 

 

தாக்கின வாசல மேவினை 

  காட்டியுந் தண்டித்தநோய்

நீக்கின வாநெடு நீரினின் 

  றேற நினைந்தருளி

ஆக்கின வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

நோக்கின வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  3 

 

 

தருக்கின நான்றக வின்றியு 

  மோடச் சலமதனால்

நெருக்கின வாநெடு நீரினின் 

  றேற நினைந்தருளி

உருக்கின வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

பெருக்கின வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  4 

 

 

இழிவித்த வாறிட்ட நோய்வினை 

  காட்டி இடர்ப்படுத்துக்

கழிவித்த வாகட்ட நோய்வினை 

  தீர்ப்பான் கலந்தருளி

அழிவித்த வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  5 

 

 

இடைவித்த வாறிட்ட நோய்வினை 

  காட்டி இடர்ப்படுத்து

உடைவித்த வாறுற்ற நோய்வினை 

  தீர்ப்பான் உகந்தருளி

அடைவித்த வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  6 

 

 

படக்கின வாபட நின்றுபன் 

  னாளும் படக்கினநோய்

அடக்கின வாறது வன்றியுந் 

  தீவினை பாவமெல்லாம்

அடக்கின வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

தொடக்கின வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  7 

 

 

மறப்பித்த வாவல்லை நோய்வினை 

  காட்டி மறப்பித்தநோய்

துறப்பித்த வாதுக்க நோய்வினை 

  தீர்ப்பான் உகந்தருளி

இறப்பித்த வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  8 

 

 

துயக்கின வாதுக்க நோய்வினை 

  காட்டித் துயக்கினநோய்

இயக்கின வாறிட்ட நோய்வினை 

  தீர்ப்பான் இசைந்தருளி

அயக்கின வாறடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

மயக்கின வாதொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே.  9 

 

 

கறுத்துமிட் டார்கண்டங் கங்கை 

  சடைமேற் கரந்தருளி

இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை 

  தன்னை இருபதுதோள்

அறுத்துமிட் டாரடி யேனைஐ 

  யாறன் அடிமைக்களே

பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் 

  பொன்னடிக் கீழெனையே. 10

 

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

இடைக்காடர்
View Details
கல்லுளிச் சித்தர்
View Details
பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details