ஐந்தாம்-திருமுறை

018 முற்றி லாமுலை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கடம்பந்துறை

திருச்சிற்றம்பலம்

 

முற்றி லாமுலை

  யாளிவ ளாகிலும்

அற்றந் தீர்க்கும்

  அறிவில ளாகிலுங்

கற்றைச் செஞ்சடை

  யான்கடம் பந்துறைப்

பெற்ற மூர்தியென்

  றாளெங்கள் பேதையே.  1 

 

 

தனகி ருந்ததொர்

  தன்மைய ராகிலும்

முனகு தீரத்

  தொழுதெழு மின்களோ

கனகப் புன்சடை

  யான்கடம் பந்துறை

நினைய வல்லவர்

  நீள்விசும் பாள்வரே.  2 

 

 

ஆரி யந்தமி

  ழோடிசை யானவன்

கூரி யகுணத்

  தார்குறி நின்றவன்

காரி கையுடை

  யான்கடம் பந்துறைச்

சீரி யல்பத்தர்

  சென்றடை மின்களே.  3 

 

 

பண்ணின் இன்மொழி

  கேட்கும் பரமனை

வண்ண நன்மல

  ரான்பல தேவருங்

கண்ண னும்மறி

  யான்கடம் பந்துறை

நண்ண நம்வினை

  யாயின நாசமே.  4 

 

 

மறைகொண் டம்மனத்

  தானை மனத்துளே

நிறைகொண் டந்நெஞ்சி

  னுள்ளுற வைம்மினோ

கறைகண் டன்னுறை

  யுங்கடம் பந்துறை

சிறைகொண் டவினை

  தீரத் தொழுமினே.  5 

 

 

நங்கை பாகம்வைத்

  தந்நறுஞ் சோதியைப்

பங்க மின்றிப்

  பணிந்தெழு மின்களோ

கங்கைச் செஞ்சடை

  யான்கடம் பந்துறை

அங்க மோதி

  அரனுறை கின்றதே.  6 

 

 

அரிய நான்மறை

  ஆறங்க மாயைந்து

புரியன் தேவர்க

  ளேத்தநஞ் சுண்டவன்

கரிய கண்டத்தி

  னான்கடம் பந்துறை

உரிய வாறு

  நினைமட நெஞ்சமே.  7 

 

 

பூமென் கோதை

  உமையொரு பாகனை

ஓமஞ் செய்தும்

  உணர்மின்கள் உள்ளத்தாற்

காமற் காய்ந்த

  பிரான்கடம் பந்துறை

நாம மேத்தநந்

  தீவினை நாசமே.  8 

 

 

பார ணங்கி

  வணங்கிப் பணிசெய

நார ணன்பிர

  மன்னறி யாததோர்

கார ணன்கடம்

  பந்துறை மேவிய

ஆர ணங்கொரு

  பாலுடை மைந்தனே.  9 

 

 

நூலால் நன்றா

  நினைமின்கள் நோய்கெடப்

பாலான் ஐந்துடன்

  ஆடும் பரமனார்

காலால் ஊன்றுகந்

  தான்கடம் பந்துறை

மேலால் நாஞ்செய்த

  வல்வினை வீடுமே. 10

 

 

திருச்சிற்றம்பலம்