ஐந்தாம்-திருமுறை

022 பூவ ணத்தவன் புண்ணியன்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : குடமூக்கு

திருச்சிற்றம்பலம்

 

பூவ ணத்தவன்

  புண்ணியன் நண்ணியங்

காவ ணத்துடை

  யானடி யார்களைத்

தீவ ணத்திரு

  நீறுமெய் பூசியோர்

கோவ ணத்துடை

  யான்குட மூக்கிலே.  1 

 

 

பூத்தா டிக்கழி

  யாதேநீர் பூமியீர்

தீத்தா டித்திறஞ்

  சிந்தையுள் வைம்மினோ

வேர்த்தா டுங்காளி

  தன்விசை தீர்கென்று

கூத்தா டியுறை

  யுங்குட மூக்கிலே.  2 

 

 

நங்கை யாளுமை

  யாளுறை நாதனார்

அங்கை யாளொ

  டறுபதந் தாழ்சடைக்

கங்கை யாளவள்

  கன்னி யெனப்படுங்

கொங்கை யாளுறை

  யுங்குட மூக்கிலே.  3 

 

 

ஓதா நாவன்

  திறத்தை யுரைத்திரேல்

ஏதா னுமினி

  தாகும் மியமுனைச்

சேதா ஏறுடை

  யானமர்ந் தவிடங்

கோதா விரியுறை

  யுங்குட மூக்கிலே.  4 

 

 

நக்க ரையனை

  நாடொறும் நன்னெஞ்சே

வக்க ரையுறை

  வானை வணங்குநீ

அக்க ரையோ

  டரவரை யார்த்தவன்

கொக்க ரையுடை

  யான்குட மூக்கிலே.  5 

 

 

துறவி நெஞ்சின

  ராகிய தொண்டர்காள்

பிறவி நீங்கப்

  பிதற்றுமின் பித்தராய்

மறவ னாய்ப்பார்த்தன்

  மேற்கணை தொட்டவெங்

குறவ னாருறை

  யுங்குட மூக்கிலே.  6 

 

 

தொண்ட ராகித்

  தொழுது பணிமினோ

பண்டை வல்வினை

  பற்றற வேண்டுவீர்

விண்ட வர்புரம்

  மூன்றொரு மாத்திரைக்

கொண்ட வன்னுறை

  யுங்குட மூக்கிலே.  7 

 

 

காமி யஞ்செய்து

  காலம் கழியாதே,

ஓமி யஞ்செய்தங்

  குள்ளத் துணர்மினோ

சாமி யோடு

  சரச்சுவ தியவள்

கோமி யும்முறை

  யுங்குட மூக்கிலே.  8 

 

 

சிரமஞ் செய்து

  சிவனுக்குப் பத்தராய்ப்

பரம னைப்பல

  நாளும் பயிற்றுமின்

பிரமன் மாலொடு

  மற்றொழிந் தார்க்கெலாங்

குரவ னாருறை

  யுங்குட மூக்கிலே.  9 

 

 

அன்று தானரக்

  கன்கயி லாயத்தைச்

சென்று தானெடுக்

  கவுமை யஞ்சலும்

நன்று தான்நக்கு

  நல்விர லூன்றிப்பின்

கொன்று கீதங்கேட்

  டான்குட மூக்கிலே. 10

 

திருச்சிற்றம்பலம்