ஐந்தாம்-திருமுறை

033 கொல்லை யேற்றினர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : சோற்றுத்துறை

திருச்சிற்றம்பலம்

 

கொல்லை யேற்றினர்

  கோளர வத்தினர்

தில்லைச் சிற்றம்

  பலத்துறைச் செல்வனார்

தொல்லை யூழியர்

  சோற்றுத் துறையர்க்கே

வல்லை யாய்ப்பணி

  செய்மட நெஞ்சமே.  1 

 

 

முத்தி யாக

  வொருதவஞ் செய்திலை

அத்தி யாலடி

  யார்க்கொன் றளித்திலை

தொத்து நின்றலர்

  சோற்றுத் துறையர்க்கே

பத்தி யாய்ப்பணி

  செய்மட நெஞ்சமே.  2 

 

 

ஒட்டி நின்ற

  உடலுறு நோய்வினை

கட்டி நின்ற

  கழிந்தவை போயறத்

தொட்டு நின்றுமச்

  சோற்றுத் துறையர்க்கே

பட்டி யாய்ப்பணி

  செய்மட நெஞ்சமே.  3 

 

 

ஆதி யானண்ட

  வாணர்க் கருள்நல்கு

நீதி யானென்றும்

  நின்மல னேயென்றுஞ்

சோதி யானென்றுஞ்

  சோற்றுத் துறையர்க்கே

வாதி யாய்ப்பணி

  செய்மட நெஞ்சமே.  4 

 

 

ஆட்டி னாயடி

  யேன்வினை யாயின

ஓட்டி னாயொரு

  காதில் இலங்குவெண்

தோட்டி னாயென்று

  சோற்றுத் துறையர்க்கே

நீட்டி நீபணி

  செய்மட நெஞ்சமே.  5 

 

 

பொங்கி நின்றெழுந்

  தகடல் நஞ்சினைப்

பங்கி யுண்டதோர்

  தெய்வமுண் டோ சொலாய்

தொங்கி நீயென்றுஞ்

  சோற்றுத் துறையர்க்குத்

தங்கி நீபணி

  செய்மட நெஞ்சமே.  6 

 

 

ஆணி போலநீ

  ஆற்ற வலியைகாண்

ஏணி போலிழிந்

  தேறியும் ஏங்கியுந்

தோணி யாகிய

  சோற்றுத் துறையர்க்கே

பூணி யாய்ப்பணி

  செய்மட நெஞ்சமே.  7 

 

 

பெற்றம் ஏறிலென்

  பேய்படை யாகிலென்

புற்றி லாடர

  வேயது பூணிலென்

சுற்றி நீயென்றுஞ்

  சோற்றுத் துறையர்க்கே

பற்றி நீபணி

  செய்மட நெஞ்சமே.  8 

 

 

அல்லி யானர

  வைந்தலை நாகணைப்

பள்ளி யானறி

  யாத பரிசெலாஞ்

சொல்லி நீயென்றுஞ்

  சோற்றுத் துறையர்க்கே

புல்லி நீபணி

  செய்மட நெஞ்சமே.  9 

 

 

மிண்ட ரோடு

  விரவியும் வீறிலாக்

குண்டர் தம்மைக்

  கழிந்துய்யப் போந்துநீ

தொண்டு செய்தென்றுஞ்

  சோற்றுத் துறையர்க்கே

உண்டு நீபணி

  செய்மட நெஞ்சமே.  10 

 

 

வாழ்ந்த வன்வலி

  வாளரக் கன்றனை

ஆழ்ந்து போயல

  றவ்விர லூன்றினான்

சூழ்ந்த பாரிடஞ்

  சோற்றுத் துறையர்க்குத்

தாழ்ந்து நீபணி

  செய்மட நெஞ்சமே. 11

 

திருச்சிற்றம்பலம்