ஐந்தாம்-திருமுறை

038 குழைகொள் காதினர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கடவூர் மயானம்

திருச்சிற்றம்பலம்

 

குழைகொள் காதினர்

  கோவண ஆடையர்

உழையர் தாங்கட

  வூரின் மயானத்தார்

பழைய தம்மடி

  யார்செயும் பாவமும்

பிழையுந் தீர்ப்பர்

  பெருமா னடிகளே.  1 

 

 

உன்னி வானவர்

  ஓதிய சிந்தையிற்

கன்னல் தேன்கட

  வூரின் மயானத்தார்

தன்னை நோக்கித்

  தொழுதெழு வார்க்கெலாம்

பின்னை என்னார்

  பெருமா னடிகளே.  2 

 

 

சூல மேந்துவர்

  தோலுடை ஆடையர்

ஆல முண்டமு

  தேமிகத் தேக்குவர்

கால காலர்

  கடவூர் மயானத்தார்

மாலை மார்பர்

  பெருமா னடிகளே.  3 

 

 

இறைவ னாரிமை

  யோர்தொழு பைங்கழல்

மறவ னார்கட

  வூரின் மயானத்தார்

அறவ னாரடி

  யாரடி யார்தங்கள்

பிறவி தீர்ப்பர்

  பெருமா னடிகளே.  4 

 

 

கத்து காளி

  கதந்தணி வித்தவர்

மத்தர் தாங்கட

  வூரின் மயானத்தார்

ஒத்தொவ் வாதன

  செய்துழல் வாரொரு

பித்தர் காணும்

  பெருமா னடிகளே.  5 

 

 

எரிகொள் மேனி

  இளம்பிறை வைத்தவர்

கரியர் தாங்கட

  வூரின் மயானத்தார்

அரியர் அண்டத்து

  ளோரயன் மாலுக்கும்

பெரியர் காணும்

  பெருமா னடிகளே.  6 

 

 

அணங்கு பாகத்தர்

  ஆரண நான்மறை

கணங்கள் சேர்கட

  வூரின் மயானத்தார்

வணங்கு வாரிடர்

  தீர்ப்பர் மயக்குறும்

பிணங்கொள் காடர்

  பெருமா னடிகளே.  7 

 

 

அரவு கையினர்

  ஆதி புராணனார்

மரவு சேர்கட

  வூரின் மயானத்தார்

பரவு வாரிடர்

  தீர்ப்பர் பணிகொள்வர்

பிரமன் மாற்கும்

  பெருமா னடிகளே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 

 

திருச்சிற்றம்பலம்