ஐந்தாம்-திருமுறை

042 நன்று நாடொறும்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வேட்களம்

திருச்சிற்றம்பலம்

 

நன்று நாடொறும்

  நம்வினை போயறும்

என்று மின்பந்

  தழைக்க இருக்கலாஞ்

சென்று நீர்திரு

  வேட்களத் துள்ளுறை

துன்று பொற்சடை

  யானைத் தொழுமினே.  1 

 

 

கருப்பு வெஞ்சிலைக்

  காமனைக் காய்ந்தவன்

பொருப்பு வெஞ்சிலை

  யாற்புரஞ் செற்றவன்

விருப்பன் மேவிய

  வேட்களங் கைதொழு

திருப்ப னாகில்

  எனக்கிட ரில்லையே.  2 

 

 

வேட்க ளத்துறை

  வேதியன் எம்மிறை

ஆக்க ளேறுவர்

  ஆனைஞ்சு மாடுவர்

பூக்கள் கொண்டவன்

  பொன்னடி போற்றினால்

காப்பர் நம்மைக்

  கறைமிடற் றண்ணலே.  3 

 

 

அல்ல லில்லை

  அருவினை தானில்லை

மல்கு வெண்பிறை

  சூடு மணாளனார்

செல்வ னார்திரு

  வேட்களங் கைதொழ

வல்ல ராகில்

  வழியது காண்மினே.  4 

 

 

துன்ப மில்லைத்

  துயரில்லை யாமினி

நம்ப னாகிய

  நன்மணி கண்டனார்

என்பொ னாருறை

  வேட்கள நன்னகர்

இன்பன் சேவடி

  யேத்தி யிருப்பதே.  5 

 

 

கட்டப் பட்டுக்

  கவலையில் வீழாதே

பொட்ட வல்லுயிர்

  போவதன் முன்னம்நீர்

சிட்ட னார்திரு

  வேட்களங் கைதொழப்

பட்ட வல்வினை

  யாயின பாறுமே.  6 

 

 

வட்ட மென்முலை

  யாளுமை பங்கனார்

எட்டு மொன்றும்

  இரண்டுமூன் றாயினார்

சிட்டர் சேர்திரு

  வேட்களங் கைதொழு

திட்ட மாகி

  யிருமட நெஞ்சமே.  7 

 

 

நட்ட மாடிய

  நம்பனை நாடொறும்

இட்டத் தாலினி

  தாக நினைமினோ

வட்ட வார்முலை

  யாளுமை பங்கனார்

சிட்ட னார்திரு

  வேட்களந் தன்னையே.  8 

 

 

வட்ட மாமதில்

  மூன்றுடை வல்லரண்

சுட்ட கொள்கைய

  ராயினுஞ் சூழ்ந்தவர்

குட்ட வல்வினை

  தீர்த்துக் குளிர்விக்குஞ்

சிட்டர் பொற்றிரு

  வேட்களச் செல்வரே.  9 

 

 

சேட னாருறை

  யுஞ்செழு மாமலை

ஓடி யாங்கெடுத்

  தான்முடி பத்திற

வாட வூன்றி

  மலரடி வாங்கிய

வேட னாருறை

  வேட்களஞ் சேர்மினே. 10

 

திருச்சிற்றம்பலம்