ஐந்தாம்-திருமுறை

055 வீறு தானுடை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நாரையூர்

திருச்சிற்றம்பலம்

 

வீறு தானுடை

  வெற்பன் மடந்தையோர்

கூற னாகிலுங்

  கூன்பிறை சூடிலும்

நாறு பூம்பொழில்

  நாரையூர் நம்பனுக்(கு)

ஆறு சூடலும்

  அம்ம அழகிதே.  1 

 

 

புள்ளி கொண்ட

  புலியுரி யாடையும்

வெள்ளி கொண்டவெண்

  பூதிமெய் யாடலும்

நள்ளி தெண்டிரை

  நாரையூ ரான்நஞ்சை

அள்ளி யுண்டலும்

  அம்ம அழகிதே.  2 

 

 

வேடு தங்கிய

  வேடமும் வெண்டலை

ஓடு தங்கிய

  வுண்பலி கொள்கையும்

நாடு தங்கிய

  நாரையூ ரான்நடம்

ஆடு பைங்கழல்

  அம்ம அழகிதே.  3 

 

 

கொக்கின் றூவலுங்

  கூவிளங் கண்ணியும்

மிக்க வெண்டலை

  மாலை விரிசடை

நக்க னாகிலும்

  நாரையூர் நம்பனுக்(கு)

அக்கி னாரமும்

  அம்ம அழகிதே.  4 

 

 

வடிகொள் வெண்மழு

  மானமர் கைகளும்

பொடிகொள் செம்பவ

  ளம்புரை மேனியும்

நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்

அடிகள் தம்வடி வம்ம அழகிதே.  5 

 

 

சூலம் மல்கிய

  கையுஞ் சுடரொடு

பாலும் நெய்தயி

  ராடிய பான்மையும்

ஞாலம் மல்கிய

  நாரையூர் நம்பனுக்(கு)

ஆல நீழலும்

  அம்ம அழகிதே.  6 

 

 

பண்ணி னான்மறை

  பாடலொ டாடலும்

எண்ணி லார்புர

  மூன்றெரி செய்ததும்

நண்ணி னார்துயர்

  தீர்த்தலும் நாரையூர்

அண்ண லார்செய்கை

  அம்ம அழகிதே.  7 

 

 

என்பு பூண்டெரு

  தேறி இளம்பிறை

மின்பு ரிந்த

  சடைமேல் விளங்கவே

நன்ப கற்பலி

  தேரினும் நாரையூர்

அன்ப னுக்கது

  அம்ம அழகிதே.  8 

 

 

முரலுங் கின்னரம்

  மொந்தை முழங்கவே

இரவி னின்றெரி

  யாடலு நீடுவான்

நரலும் வாரிநன்

  னாரையூர் நம்பனுக்(கு)

அரவும் பூணுதல்

  அம்ம அழகிதே.  9 

 

 

கடுக்கை யஞ்சடை

  யன்கயி லைம்மலை

எடுத்த வாளரக்

  கன்றலை ஈரைஞ்சும்

நடுக்கம் வந்திற

  நாரையூ ரான்விரல்

அடுத்த தன்மையும்

  அம்ம அழகிதே.  10

 

திருச்சிற்றம்பலம்