ஐந்தாம்-திருமுறை

060 ஏது மொன்று

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : மாற்பேறு

திருச்சிற்றம்பலம்

 

ஏது மொன்று

  மறிவில ராயினும்

ஓதி அஞ்செழுத்

  தும்முணர் வார்கட்குப்

பேத மின்றி

  அவரவர் உள்ளத்தே

மாதுந் தாமும்

  மகிழ்வர்மாற் பேறரே.  1 

 

 

அச்ச மில்லைநெஞ்

  சேயரன் நாமங்கள்

நிச்ச லுந்நினை

  யாய்வினை போயறக்

கச்ச மாவிட

  முண்டகண் டாவென

வைச்ச மாநிதி

  யாவர் மாற்பேறரே.  2 

 

 

சாத்தி ரம்பல

  பேசுஞ் சழக்கர்காள்

கோத்தி ரமுங்கு

  லமுங்கொண் டென்செய்வீர்

பாத்தி ரஞ்சிவ

  மென்று பணிதிரேல்

மாத்தி ரைக்குள்

  அருளுமாற் பேறரே.  3 

 

 

இருந்து சொல்லுவன்

  கேண்மின்கள் ஏழைகாள்

அருந்த வந்தரும்

  அஞ்செழுத் தோதினாற்

பொருந்து நோய்பிணி

  போகத் துரப்பதோர்

மருந்து மாகுவர்

  மன்னுமாற் பேறரே.  4 

 

 

சாற்றிச் சொல்லுவன்

  கேண்மின் தரணியீர்

ஏற்றின் மேல்வரு

  வான்கழ லேத்தினாற்

கூற்றை நீக்கிக்

  குறைவறுத் தாள்வதோர்

மாற்றி லாச்செம்பொ

  னாவர்மாற் பேறரே.  5 

 

 

ஈட்டு மாநிதி

  சால இழக்கினும்

வீட்டுங் காலன்

  விரைய அழைக்கினுங்

காட்டில் மாநட

  மாடுவாய் காவெனில்

வாட்டந் தீர்க்கவும்

  வல்லர்மாற் பேறரே.  6 

 

 

ஐய னேயர

  னேயென் றரற்றினால்

உய்ய லாமுல

  கத்தவர் பேணுவர்

செய்ய பாத

  மிரண்டும் நினையவே

வைய மாளவும்

  வைப்பர்மாற் பேறரே.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

உந்திச் சென்று

  மலையை யெடுத்தவன்

சந்து தோளொடு

  தாளிற வூன்றினான்

மந்தி பாய்பொழில்

  சூழுமாற் பேறென

அந்த மில்லதோர்

  இன்பம் அணுகுமே. 10

 

திருச்சிற்றம்பலம்