ஐந்தாம்-திருமுறை

071 குசையும் அங்கையிற்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : விசயமங்கை

திருச்சிற்றம்பலம்

 

 

குசையும் அங்கையிற்

  கோசமுங் கொண்டவவ்

வசையின் மங்கல

  வாசகர் வாழ்த்தவே

இசைய மங்கையுந்

  தானுமொன் றாயினான்

விசைய மங்கையுள்

  வேதியன் காண்மினே.  1 

 

 

ஆதி நாதன்

  அடல்விடை மேலமர்

பூத நாதன்

  புலியத ளாடையன்

வேத நாதன்

  விசயமங் கையுளான்

பாத மோதவல்

  லார்க்கில்லை பாவமே.  2 

 

 

கொள்ளி டக்கரைக்

  கோவந்த புத்தூரில்

வெள்வி டைக்கருள்

  செய்விச யமங்கை

உள்ளி டத்துறை

  கின்ற உருத்திரன்

கிள்ளி டத்தலை

  யற்ற தயனுக்கே.  3 

 

 

திசையு மெங்குங்

  குலுங்கத் திரிபுரம்

அசைய வங்கெய்திட்

  டாரழ லூட்டினான்

விசைய மங்கை

  விருத்தன் புறத்தடி

விசையின் மங்கி

  விழுந்தனன் காலனே.  4 

 

 

பொள்ள லாக்கை

  அகத்திலைம் பூதங்கள்

கள்ள மாக்கிக்

  கலக்கிய காரிருள்

விள்ள லாக்கி

  விசயமங் கைப்பிரான்

உள்ள நோக்கியெ

  னுள்ளுள் உறையுமே.  5 

 

 

கொல்லை யேற்றுக்

  கொடியொடு பொன்மலை

வில்லை யேற்றுடை

  யான்விச யமங்கைச்

செல்வ போற்றியென்

  பாருக்குத் தென்றிசை

எல்லை யேற்றலும்

  இன்சொலு மாகுமே.  6 

 

 

கண்பல் உக்கக்

  கபாலம்அங் கைக்கொண்டு

உண்ப லிக்குழல்

  உத்தம னுள்ளொளி

வெண்பி றைக்கண்ணி

  யான்விச யமங்கை

நண்ப னைத்தொழப்

  பெற்றது நன்மையே.  7 

 

 

பாண்டு வின்மகன்

  பார்த்தன் பணிசெய்து

வேண்டு நல்வரங்

  கொள்விச யமங்கை

ஆண்ட வன்னடி

  யேநினைந் தாசையாற்

காண்ட லேகருத்

  தாகி யிருப்பனே.  8 

 

 

வந்து கேண்மின்

  மயல்தீர் மனிதர்காள்

வெந்த நீற்றன்

  விசயமங் கைப்பிரான்

சிந்தை யால்நினை

  வார்களைச் சிக்கெனப்

பந்து வாக்கி

  உயக்கொளுங் காண்மினே.  9 

 

 

இலங்கை வேந்தன்

  இருபது தோளிற

விலங்கள் சேர்விர

  லான்விச யமங்கை

வலஞ்செய் வார்களும்

  வாழ்த்திசைப் பார்களும்

நலஞ்செய் வாரவர்

  நன்னெறி நாடியே. 10

 

திருச்சிற்றம்பலம்