ஐந்தாம்-திருமுறை

078 சங்கு லாமுன்கைத்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கோடிகா

திருச்சிற்றம்பலம்

 

 

சங்கு லாமுன்கைத்

  தையலோர் பாகத்தன்

வெங்கு லாமத

  வேழம் வெகுண்டவன்

கொங்கு லாம்பொழிற்

  கோடிகா வாவென

எங்கி லாததோர்

  இன்பம்வந் தெய்துமே.  1 

 

 

வாடி வாழ்வதென்

  னாவது மாதர்பால்

ஓடி வாழ்வினை

  உள்கிநீர் நாடொறுங்

கோடி காவனைக்

  கூறீரேற் கூறினேன்

பாடி காவலிற்

  பட்டுக் கழிதிரே.  2 

 

 

முல்லை நன்முறு

  வல்லுமை பங்கனார்

தில்லை யம்பலத்

  தில்லுறை செல்வனார்

கொல்லை யேற்றினர்

  கோடிகா வாவென்றங்

கொல்லை யேத்துவார்க்

  கூனமொன் றில்லையே.  3 

 

 

நாவ ளம்பெறு

  மாறும னன்னுதல்

ஆம ளஞ்சொலி

  அன்புசெ யின்னலாற்

கோம ளஞ்சடைக்

  கோடிகா வாவென

ஏவ ளின்றெனை

  ஏசுமவ் வேழையே.  4 

 

 

வீறு தான்பெறு

  வார்சில ராகிலும்

நாறு பூங்கொன்றை

  தான்மிக நல்கானேற்

கூறு வேன்கோடி

  காவுளாய் என்றுமால்

ஏறு வேனும்மால்

  ஏசப் படுவனோ.  5 

 

 

நாடி நாரணன்

  நான்முகன் வானவர்

தேடி யேசற

  வுந்தெரி யாததோர்

கோடி காவனைக்

  கூறாத நாளெலாம்

பாடி காவலிற்

  பட்டுக் கழியுமே.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

வரங்க ளால்வரை

  யையெடுத் தான்றனை

அரங்க வூன்றி

  யருள்செய்த அப்பனூர்

குரங்கு சேர்பொழிற்

  கோடிகா வாவென

இரங்கு வேன்மனத்

  தேதங்கள் தீரவே. 10

 

திருச்சிற்றம்பலம்