ஐந்தாம்-திருமுறை

082 விண்ட மாமலர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வான்மியூர்

திருச்சிற்றம்பலம்

 

 

விண்ட மாமலர்

  கொண்டு விரைந்துநீர்

அண்ட நாயகன்

  றன்னடி சூழ்மின்கள்

பண்டு நீர்செய்த

  பாவம் பறைந்திடும்

வண்டு சேர்பொழில்

  வான்மியூ ரீசனே.  1 

 

 

பொருளுஞ் சுற்றமும்

  பொய்ம்மையும் விட்டுநீர்

மருளும் மாந்தரை

  மாற்றி மயக்கறுத்

தருளு மாவல்ல

  ஆதியா யென்றலும்

மருள றுத்திடும்

  வான்மியூ ரீசனே.  2 

 

 

மந்த மாகிய

  சிந்தை மயக்கறுத்

தந்த மில்குணத்

  தானை யடைந்துநின்

றெந்தை யீசனென்

  றேத்திட வல்லிரேல்

வந்து நின்றிடும்

  வான்மியூ ரீசனே.  3 

 

 

உள்ள முள்கலந்

  தேத்தவல் லார்க்கலாற்

கள்ள முள்ள

  வழிக்கசி வானலன்

வெள்ள முமர

  வும்விர வுஞ்சடை

வள்ள லாகிய

  வான்மியூ ரீசனே.  4 

 

 

படங்கொள் பாம்பரைப்

  பான்மதி சூடியை

வடங்கொள் மென்முலை

  மாதொரு கூறனைத்

தொடர்ந்து நின்று

  தொழுதெழு வார்வினை

மடங்க நின்றிடும்

  வான்மியூ ரீசனே.  5 

 

 

நெஞ்சி லைவர்

  நினைக்க நினைக்குறார்

பஞ்சின் மெல்லடி

  யாளுமை பங்கவென்

றஞ்சி நாண்மலர்

  தூவி யழுதிரேல்

வஞ்சந் தீர்த்திடும்

  வான்மியூ ரீசனே.  6 

 

 

நுணங்கு நூலயன்

  மாலு மறிகிலாக்

குணங்கள் தாம்பர

  விக்குறைந் துக்கவர்

சுணங்கு பூண்முலைத்

  தூமொழி யாரவர்

வணங்க நின்றிடும்

  வான்மியூ ரீசனே.  7 

 

 

ஆதி யும்மர

  னாயயன் மாலுமாய்ப்

பாதி பெண்ணுரு

  வாய பரமனென்

றோதி யுள்குழைந்

  தேத்தவல் லாரவர்

வாதை தீர்த்திடும்

  வான்மியூ ரீசனே.  8 

 

 

ஓட்டை மாடத்தி

  லொன்பது வாசலுங்

காட்டில் வேவதன்

  முன்னங் கழலடி

நாட்டி நாண்மலர்

  தூவி வலஞ்செயில்

வாட்டந் தீர்த்திடும்

  வான்மியூ ரீசனே.  9 

 

 

பார மாக

  மலையெடுத் தான்றனைச்

சீர மாகத்

  திருவிர லூன்றினான்

ஆர்வ மாக

  அழைத்தவ னேத்தலும்

வார மாயினன்

  வான்மியூ ரீசனே. 10

 

திருச்சிற்றம்பலம்