ஐந்தாம்-திருமுறை

094 அண்டத் தானை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

அண்டத் தானை

  அமரர் தொழப்படும்

பண்டத் தானைப்

  பவித்திர மார்திரு

முண்டத் தானைமுற்

  றாத இளம்பிறைத்

துண்டத் தானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  1 

 

 

முத்தொப் பானை

  முளைத்தெழு கற்பக

வித்தொப் பானை

  விளக்கிடை நேரொளி

ஒத்தொப் பானை

  ஒளிபவ ளத்திரள்

தொத்தொப் பானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  2 

 

 

பண்ணொத் தானைப்

  பவளந் திரண்டதோர்

வண்ணத் தானை

  வகையுணர் வான்றனை

எண்ணத் தானை

  இளம்பிறை போல்வெள்ளைச்

சுண்ணத் தானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  3 

 

 

விடலை யானை

  விரைகமழ் தேன்கொன்றைப்

படலை யானைப்

  பலிதிரி வான்செலும்

நடலை யானை

  நரிபிரி யாததோர்

சுடலை யானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  4 

 

 

பரிதி யானைப்பல்

  வேறு சமயங்கள்

கருதி யானைக்கண்

  டார்மனம் மேவிய

பிரிதி யானைப்

  பிறரறி யாததோர்

சுருதி யானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  5 

 

 

ஆதி யானை

  அமரர் தொழப்படும்

நீதி யானை

  நியம நெறிகளை

ஓதி யானை

  உணர்தற் கரியதோர்

சோதி யானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  6 

 

 

ஞாலத் தானைநல்

  லானைவல் லார்தொழுங்

கோலத் தானைக்

  குணப்பெருங் குன்றினை

மூலத் தானை

  முதல்வனை மூவிலைச்

சூலத் தானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  7 

 

 

ஆதிப் பாலட்ட

  மூர்த்தியை ஆனஞ்சும்

வேதிப் பானைநம்

  மேல்வினை வெந்தறச்

சாதிப் பானைத்

  தவத்திடை மாற்றங்கள்

சோதிப் பானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  8 

 

 

நீற்றி னானை

  நிகரில்வெண் கோவணக்

கீற்றி னானைக்

  கிளரொளிச் செஞ்சடை

ஆற்றி னானை

  அமரர்தம் ஆருயிர்

தோற்றி னானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  9 

 

 

விட்டிட் டானைமெய்ஞ்

  ஞானத்து மெய்ப்பொருள்

கட்டிட் டானைக்

  கனங்குழை பாலன்பு

பட்டிட் டானைப்

  பகைத்தவர் முப்புரஞ்

சுட்டிட் டானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  10 

 

 

முற்றி னானை

  இராவணன் நீண்முடி

ஒற்றி னானை

  ஒருவிர லாலுறப்

பற்றி னானையோர்

  வெண்டலைப் பாம்பரைச்

சுற்றி னானைக்கண்

  டீர்தொழற் பாலதே.  11 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details
குண்டோதரனுக்கு உண்டியிடல்
View Details
ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details