ஆறாம்-திருமுறை

029 திருமணியைத் தித்திக்குந் தேனைப்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்

தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்

குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை 

கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்

பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்

பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்

அருமணியை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  1 

 

 

பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப்

பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை

மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை

வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்

தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்

தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி

அன்னானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  2 

 

 

ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை

ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்

கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்

கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்

காற்றானைத் தீயானை நீரு மாகிக்

கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள

ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  3 

 

 

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை

மூவாத மேனிமுக் கண்ணி னானைச்

சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்

சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை

மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை

மறுமையு மிம்மையு மானான் றன்னை

அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  4 

 

 

பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்

பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே

உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்

ஓரிபல விடநட்ட மாடி னானைத்

துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி

நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற

அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  5 

 

 

பழகிய வல்வினைகள் பாற்று வானைப்

பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்

குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்

கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை

விழவனை வீரட்ட மேவி னானை

விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை

அழகனை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  6 

 

 

சூளா மணிசேர் முடியான் றன்னைச்

சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்

கோள்வா யரவ மசைத்தான் றன்னைக்

கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை

நாள்வாயும் பத்தர் மனத்து ளானை

நம்பனை நக்கனை முக்க ணானை

ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  7 

 

 

முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை

மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்

கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து 

கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்

பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்

பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை

அத்தனை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  8 

 

 

பையா டரவங்கை யேந்தி னானைப்

பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை

நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை

நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்

செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்

செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை

ஐயாறு மேயானை ஆரூ ரானை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  9 

 

 

சீரார் முடிபத் துடையான் றன்னைத் 

தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்

பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்

பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்

போரார் புரங்கள் புரள நூறும் 

புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை

ஆரானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  10 

 

திருச்சிற்றம்பலம்