ஆறாம்-திருமுறை

037 ஆரார் திரிபுரங்கள் நீறா

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் 

அனலாடி ஆரமுதே யென்றேன் நானே

கூரார் மழுவாட் படையொன் றேந்திக் 

குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே

பேரா யிரமுடையா யென்றேன் நானே

பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே

ஆரா வமுதேயென் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  1 

 

 

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் 

தீர்த்தா புராணனே யென்றேன் நானே

மூவா மதிசூடி யென்றேன் நானே

முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே

ஏவார் சிலையானே யென்றேன் நானே

இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி

ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  2 

 

 

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே

அடியார்கட் காரமுதே யென்றேன் நானே

நஞ்சணி கண்டனே யென்றேன் நானே

நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே

நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது 

நிறையு மமுதமே யென்றேன் நானே

அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  3 

 

 

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே

துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே

எல்லை நிறைந்தானே யென்றேன் நானே

ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே

அல்லற் கடல்புக் கழுந்து வேனை 

வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே

எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  4 

 

 

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே

இருசுடர் வானத்தா யென்றேன் நானே

தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே

துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே

கண்டங் கறுத்தானே யென்றேன் நானே

கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே

அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  5 

 

 

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே 

பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே

கற்றார்கள் நாவினா யென்றேன் நானே

கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே

பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே

பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே

அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  6 

 

 

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே

விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே

எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே

ஏகம்பம் மேயானே யென்றேன் நானே

பண்ணார் மறைபாடி யென்றேன் நானே

பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே

அண்ணாஐ யாறனே யென்றேன் நானே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  7 

 

 

அவனென்று நானுன்னை அஞ்சா தேனை 

அல்ல லறுப்பானே யென்றேன் நானே

சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்

செல்வந் தருவானே யென்றேன் நானே

பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று 

பண்டை வினையறுப்பா யென்றேன் நானே

அவனென்றே யாதியே ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  8 

 

 

கச்சியே கம்பனே யென்றேன் நானே

கயிலாயா காரோணா வென்றேன் நானே

நிச்சன் மணாளனே யென்றேன் நானே

நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே

உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே

உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே

அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  9 

 

 

வில்லாடி வேடனே யென்றேன் நானே

வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே

சொல்லாய சூழலா யென்றேன் நானே

சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே

எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே

இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே

அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்