ஆறாம்-திருமுறை

063 முன்னானைத் தோல்போர்த்த

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆனைக்கா

திருச்சிற்றம்பலம்

 

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை

மூவாத சிந்தையே மனமே வாக்கே

தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்

சார்தற் கரியானைத் தாதை தன்னை

என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை

எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்

தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  1 

 

 

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை

வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்

திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை

இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்

கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்

கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்

திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  2 

 

 

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை

முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்

உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை

ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்

பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்

பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்

செற்றானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  3 

 

 

காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்

காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்

தாரானைப் புலியதளி னாடை யானைத்

தானன்றி வேறொன்று மில்லா ஞானப்

பேரானை மணியார மார்பி னானைப்

பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட

தேரானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  4 

 

 

பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்

புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக

எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை

ஏறமரும் பெருமானை இடமா னேந்து

கையானைக் கங்காள வேடத் தானைக்

கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்

செய்யானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  5 

 

 

கலையானைப் பரசுதர பாணி யானைக்

கனவயிரத் திரளானை மணிமா ணிக்க

மலையானை யென்றலையி னுச்சி யானை

வார்தருபுன் சடையானை மயான மன்னும்

நிலையானை வரியரவு நாணாக் கோத்து 

நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்

சிலையானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  6 

 

 

ஆதியனை எறிமணியின் ஓசை யானை

அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க

சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்

சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட

வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை

விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்

சேதியனைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  7 

 

 

மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை

மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்

புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்

பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்

உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை

ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே

திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  8 

 

 

நசையானை நால்வேதத் தப்பா லானை

நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை

இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை

இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்

மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்

மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்

திசையானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  9 

 

 

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்

பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்

சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்

தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே

ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் 

ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே

தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்