ஏழாம்-திருமுறை

018 மூப்பதும் இல்லை

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : துருத்தி

திருச்சிற்றம்பலம்

 

மூப்பதும் இல்லை பிறப்பதும்

  இல்லை இறப்பதில்லை

சேர்ப்பது காட்டகத் தூரினு

  மாகச்சிந் திக்கினல்லாற்

காப்பது வேள்விக் குடிதண்

  துருத்தியெங் கோன்அரைமேல்

ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  1 

 

 

கட்டக்காட் டில்நட மாடுவர் 

  யாவர்க்குங் காட்சியொண்ணார்

சுட்டவெண் ணீறணிந் தாடுவர்

  பாடுவர் தூயநெய்யால்

வட்டக்குண் டத்தில் எரிவளர்த்

  தோம்பி மறைபயில்வார்

அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  2 

 

 

பேருமோர் ஆயிரம் பேருடை

  யார்பெண்ணோ டாணுமல்லர்

ஊரும தொற்றியூர் மற்றையூர்

  பெற்றவா நாமறியோம்

காருங் கருங்கடல் நஞ்சமு

  துண்டுகண் டங்கறுத்தார்க்

காரம்பாம் பாவ தறிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  3 

 

 

ஏனக்கொம் பும்மிள ஆமையும்

  பூண்டங்கோர் ஏறுமேறிக்

கானக்காட் டிற்றொண்டர் கண்டன

  சொல்லியுங் காமுறவே

மானைத்தோல் ஒன்றை உடுத்துப்

  புலித்தோல் பியற்குமிட்டு

யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  4 

 

 

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்

  ஊரிடு பிச்சையல்லாற்

பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்

  ஏறியோர் பூதந்தம்பாற்

பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ

  றும்பல பாம்புபற்றி

ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  5 

 

 

குறவனார் தம்மகள் தம்மக

  னார்மண வாட்டிகொல்லை

மறவனா ராயங்கோர் பன்றிப்பின்

  போவது மாயங்கண்டீர்

இறைவனார் ஆதியார் சோதிய

  ராயங்கோர் சோர்வுபடா

அறவனார் ஆவத றிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  6 

 

 

பித்தரை ஒத்தொரு பெற்றியர்

  நற்றவை என்னைப்பெற்ற

முற்றவை தம்மனை தந்தைக்குந்

  தவ்வைக்குந் தம்பிரானார்

செத்தவர் தந்தலை யிற்பலி

  கொள்வதே செல்வமாகில்

அத்தவம் ஆவத றிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  7 

 

 

உம்பரான் ஊழியான் ஆழியான்

  ஓங்கி மலருறைவான்

தம்பரம் அல்லவர் சிந்திப்ப

  வர்தடு மாற்றறுப்பார்

எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்

  துள்ளும் இருப்பதாகில்

அம்பரம் ஆவத றிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  8 

 

 

இந்திர னுக்கும் இராவண

  னுக்கும் அருள்புரிந்தார்

மந்திரம் ஓதுவர் மாமறை

  பாடுவர் மான்மறியர்

சிந்துரக் கண்ணனும் நான்முக

  னும்முட னாய்த்தனியே

அந்தரஞ் செல்வத றிந்தோமேல்

  நாமிவர்க் காட்படோ மே.  9 

 

 

கூடலர் மன்னன் குலநாவ

  லூர்க்கோன் நலத்தமிழைப்

பாடவல் லபர மன்னடி

  யார்க்கடி மைவழுவா

நாடவல் லதொண்டன் ஆரூரன்

  ஆட்படு மாறுசொல்லிப்

பாடவல் லார்பர லோகத்

  திருப்பது பண்டமன்றே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details
புலத்தியர்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details