ஏழாம்-திருமுறை

026 செண்டா டும்விடையாய்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : காளத்தி

திருச்சிற்றம்பலம்

 

செண்டா டும்விடையாய்

  சிவனேயென் செழுஞ்சுடரே

வண்டாருங் குழலா

  ளுமைபாகம் மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்குங்

  கணநாதனெங் காளத்தியாய்

அண்டா உன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  1 

 

 

இமையோர் நாயகனே

  இறைவாவென் னிடர்த்துணையே

கமையார் கருணையினாய்

  கருமாமுகில் போல்மிடற்றாய்

உமையோர் கூறுடையாய்

  உருவேதிருக் காளத்தியுள்

அமைவே உன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  2 

 

 

படையார் வெண்மழுவா

  பகலோன்பல் லுகுத்தவனே

விடையார் வேதியனே

  விளங்குங்குழைக் காதுடையாய்

கடையார் மாளிகைசூழ்

  கணநாதனெங் காளத்தியாய்

உடையாய் உன்னையல்லால்

  உகந்தேத்த மாட்டேனே.  3 

 

 

மறிசேர் கையினனே

  மதமாவுரி போர்த்தவனே

குறியே என்னுடைய

  குருவேயுன்குற் றேவல்செய்வேன்

நெறியே நின்றடியார்

  நினைக்குந்திருக் காளத்தியுள்

அறிவே உன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  4 

 

 

செஞ்சே லன்னகண்ணார்

  திறத்தேகிடந் துற்றலறி

நஞ்சேன் நானடியேன்

  நலமொன்றறி யாமையினாற்

துஞ்சேன் நானொருகாற்

  றொழுதேன்றிருக் காளத்தியாய்

அஞ்சா துன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  5 

 

 

பொய்யவன் நாயடியேன்

  புகவேநெறி ஒன்றறியேன்

செய்யவ னாகிவந்திங்

  கிடரானவை தீர்த்தவனே

மெய்யவ னேதிருவே

  விளங்குந்திருக் காளத்தியென்

ஐயநுன் றன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  6 

 

 

கடியேன் காதன்மையாற்

  கழற்போதறி யாதவென்னுள்

குடியாக் கோயில்கொண்ட

  குளிர்வார்சடை யெங்குழகா

முடியால் வானவர்கள்

  முயங்குந்திருக் காளத்தியாய்

அடியேன் உன்னையல்லால்

  அறியேன்மற் றொருவரையே.  7 

 

 

நீறார் மேனியனே

  நிமலாநினை யன்றிமற்றுக்

கூறேன் நாவதனாற்

  கொழுந்தேயென் குணக்கடலே

பாறார் வெண்டலையிற்

  பலிகொண்டுழல் காளத்தியாய்

ஏறே உன்னையல்லால்

  இனிஏத்த மாட்டேனே.  8 

 

 

தளிர்போல் மெல்லடியாள்

  தனைஆகத் தமர்ந்தருளி

எளிவாய் வந்தென்னுள்ளம்

  புகுதவல்ல எம்பெருமான்

களியார் வண்டறையுந்

  திருக்காளத்தி யுள்ளிருந்த

ஒளியே உன்னையல்லால்

  இனியொன்றும் உணரேனே.  9 

 

 

காரா ரும்பொழில்சூழ்

  கணநாதனெங் காளத்தியுள்

ஆரா வின்னமுதை

  அணிநாவலா ரூரன்சொன்ன

சீரூர் செந்தமிழ்கள்

  செப்புவார்வினை யாயினபோய்ப்

பேரா விண்ணுலகம்

  பெறுவார்பிழைப் பொன்றிலரே.  10 

 

திருச்சிற்றம்பலம்