ஏழாம்-திருமுறை

027 விடையா ருங்கொடியாய்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கற்குடி

திருச்சிற்றம்பலம்

 

விடையா ருங்கொடியாய்

  வெறியார்மலர்க் கொன்றையினாய்

படையார் வெண்மழுவா

  பரமாய பரம்பரனே

கடியார் பூம்பொழில்சூழ்

  திருக்கற்குடி மன்னிநின்ற

அடிகேள் எம்பெருமான்

  அடியேனையும் அஞ்சலென்னே.  1 

 

 

மறையோர் வானவருந்

  தொழுதேத்தி வணங்கநின்ற

இறைவா எம்பெருமான்

  எனக்கின்னமு தாயவனே

கறையார் சோலைகள்சூழ்

  திருக்கற்குடி மன்னிநின்ற

அறவா அங்கணனே

  அடியேனையும் அஞ்சலென்னே.  2 

 

 

சிலையால் முப்புரங்கள்

  பொடியாகச் சிதைத்தவனே

மலைமேல் மாமருந்தே

  மடமாதிடங் கொண்டவனே

கலைசேர் கையினனே

  திருக்கற்குடி மன்னிநின்ற

அலைசேர் செஞ்சடையாய்

  அடியேனையும் அஞ்சலென்னே.  3 

 

 

செய்யார் மேனியனே

  திருநீல மிடற்றினனே

மையார் கண்ணிபங்கா

  மதயானை உரித்தவனே

கையார் சூலத்தினாய்

  திருக்கற்குடி மன்னிநின்ற

ஐயா எம்பெருமான்

  அடியேனையும் அஞ்சலென்னே.  4 

 

 

சந்தார் வெண்குழையாய்

  சரிகோவண ஆடையனே

பந்தா ரும்விரலாள்

  ஒருபாகம் அமர்ந்தவனே

கந்தார் சோலைகள்சூழ்

  திருக்கற்குடி மன்னிநின்ற

எந்தாய் எம்பெருமான்

  அடியேனையும் ஏன்றுகொள்ளே.  5 

 

 

அரையார் கீளொடுகோ

  வணமும் அரைக்கசைத்து

விரையார் கொன்றையுடன்

  விளங்கும்பிறை மேலுடையாய்

கரையா ரும்வயல்சூழ்

  திருக்கற்குடி மன்னிநின்ற

அரையா எம்பெருமான்

  அடியேனையும் அஞ்சலென்னே. 6 

 

 

பாரார் விண்ணவரும்

  பரவிப்பணிந் தேத்தநின்ற

சீரார் மேனியனே

  திகழ்நீல மிடற்றினனே

காரார் பூம்பொழில்சூழ்

  திருக்கற்குடி மன்னிநின்ற

ஆரா இன்னமுதே

  அடியேனையும் அஞ்சலென்னே.  7 

 

 

நிலனே நீர்வளிதீ

  நெடுவானக மாகிநின்ற

புலனே புண்டரிகத்

  தயன்மாலவன் போற்றிசெய்யுங்

கனலே கற்பகமே

  திருக்கற்குடி மன்னிநின்ற

அனல்சேர் கையினனே

  அடியேனையும் அஞ்சலென்னே.  8 

 

 

வருங்கா லன்னுயிரை

  மடியத்திரு மெல்விரலாற்

பெரும்பா லன்றனக்காய்ப்

  பிரிவித்த பெருந்தகையே

கரும்பா ரும்வயல்சூழ்

  திருக்கற்குடி மன்னிநின்ற

விரும்பா எம்பெருமான்

  அடியேனையும் வேண்டுதியே.  9 

 

 

அலையார் தண்புனல்சூழ்ந்

  தழகாகி விழவமருங்

கலையார் மாதவர்சேர்

  திருக்கற்குடிக் கற்பகத்தைச்

சிலையார் வாணுதலாள்

  நல்லசிங்கடி யப்பன்உரை

விலையார் மாலைவல்லார்

  வியன்மூவுல காள்பவரே.  10 

 

திருச்சிற்றம்பலம்