ஏழாம்-திருமுறை

031 முந்தையூர் முதுகுன்றங்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : இடையாறு

திருச்சிற்றம்பலம்

 

முந்தையூர் முதுகுன்றங்

  குரங்கணின் முட்டம்

சிந்தையூர் நன்றுசென்

  றடைவான் திருவாரூர்

பந்தையூர் பழையாறு

  பழனம் பைஞ்ஞீலி

எந்தையூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  1 

 

 

சுற்றுமூர் சுழியல்

  திருச்சோ புரந்தொண்டர்

ஒற்றுமூர் ஒற்றியூர்

  திருவூறல் ஒழியாப்

*பெற்றமேறிப் பெண்பாதி

  யிடம்பெண்ணைத் தெண்ணீர்

எற்றுமூர் எய்தமான்

  இடையா றிடைமருதே. 2 

 

 

கடங்களூர் திருக்காரிக்

  கரைகயி லாயம்

விடங்களூர் திருவெண்ணி

  அண்ணா மலைவெய்ய

படங்களூர் கின்றபாம்

   பரையான் பரஞ்சோதி

இடங்கொளூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  3 

 

 

கச்சையூர் காவங்

  கழுக்குன்றங் காரோணம்

பிச்சையூர் திரிவான்

  கடவூர் வடபேறூர்

கச்சியூர் கச்சிசிக்கல்

  நெய்த்தானம் மிழலை

இச்சையூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  4 

 

 

நிறையனூர் நின்றியூர்

  கொடுங்குன்றம் அமர்ந்த

பிறையனூர் பெருமூர்

  பெரும்பற்றப் புலியூர்

மறையனூர் மறைக்காடு

  வலஞ்சுழி வாய்த்த

இறைவனூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  5 

 

 

திங்களூர் திருவா

  திரையான் பட்டினமூர்

நங்களூர் நறையூர்

  நனிநா லிசைநாலூர்

தங்களூர் தமிழான்

  என்றுபா விக்கவல்ல

எங்களூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  6 

 

 

கருக்கநஞ் சமுதுண்ட

  கல்லாலன் கொல்லேற்றன்

தருக்கருக் கனைச்செற்

  றுகந்தான்றன் முடிமேல்

எருக்கநாண் மலரிண்டை

  யும்மத்த முஞ்சூடி

இருக்குமூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  7 

 

 

தேசனூர் வினைதேய

  நின்றான் திருவாக்கூர்

பாசனூர் பரமேட்டி

  பவித்திர பாவ

நாசனூர் நனிபள்ளி

  நள்ளாற்றை அமர்ந்த

ஈசனூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  8 

 

 

பேறனூர் பிறைச்சென்

  னியினான் பெருவேளூர்

தேறனூர் திருமா

  மகள்கோன் றிருமாலோர்

கூறனூர் குரங்காடு

  துறைதிருக் கோவல்

ஏறனூர் எய்தமான்

  இடையா றிடைமருதே.  9 

 

 

ஊறிவா யினநாடிய

  வன்றொண்டன் ஊரன்

தேறுவார் சிந்தைதேறு

  மிடஞ்செங்கண் வெள்ளே

றேறுவார் எய்தமான்

  இடையா றிடைமருதைக்

கூறுவார் வினையெவ்

  விடமெய் குளிர்வாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்