ஏழாம்-திருமுறை

075 மறைகள் ஆயின நான்கும்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : ஆனைக்கா

திருச்சிற்றம்பலம்

 

மறைகள் ஆயின நான்கும்

  மற்றுள பொருள்களு மெல்லாந்

துறையுந் தோத்திரத் திறையுந்

  தொன்மையும் நன்மையு மாய

அறையும் பூம்புனல் ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

இறைவன் என்றடி சேர்வார்

  எம்மையும் ஆளுடை யாரே.  1 

 

 

வங்கம் மேவிய வேலை

  நஞ்செழ வஞ்சர்கள் கூடித்

தங்கள் மேல்அட ராமை

  உண்ணென உண்டிருள் கண்டன்

அங்கம் ஓதிய ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

எங்கள் ஈசனென் பார்கள்

  எம்மையும் ஆளுடை யாரே.  2 

 

 

நீல வண்டறை கொன்றை

  நேரிழை மங்கையோர் திங்கள்

சால வாளர வங்கள்

  தங்கிய செஞ்சடை எந்தை

ஆல நீழலுள் ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

ஏலு மாறுவல் லார்கள்

  எம்மையும் ஆளுடை யாரே.  3 

 

 

தந்தை தாயுல குக்கோர்

  தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்

பந்த மாயின பெருமான்

  பரிசுடை யவர்திரு வடிகள்

அந்தண் பூம்புனல் ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

எந்தை என்றடி சேர்வார்

  எம்மையும் ஆளுடை யாரே.  4 

 

 

கணைசெந் தீயர வந்நாண்

  கல்வளை யுஞ்சிலை யாகத்

துணைசெய் மும்மதில் மூன்றுஞ்

  சுட்டவ னேயுல குய்ய

அணையும் பூம்புனல் ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

இணைகொள் சேவடி சேர்வார்

  எம்மையும் ஆளுடை யாரே.  5 

 

 

விண்ணின் மாமதி சூடி

  விலையிலி கலன்அணி விமலன்

பண்ணின் நேர்மொழி மங்கை

  பங்கினன் பசுவுகந் தேறி

அண்ண லாகிய ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

எண்ணு மாறுவல் லார்கள்

  எம்மையும் ஆளுடை யாரே.  6 

 

 

தார மாகிய பொன்னித்

  தண்டுறை ஆடி விழுத்தும்

நீரில் நின்றடி போற்றி

  நின்மலா கொள்ளென ஆங்கே

ஆரங் கொண்டவெம் மானைக்

  காவுடை ஆதியை நாளும்

ஈரம் உள்ளவர் நாளும்

  எம்மையும் ஆளுடை யாரே.  7 

 

 

உரவம் உள்ளதோர் உழையின்

  உரிபுலி அதளுடை யானை

விரைகொள் கொன்றையி னானை

  விரிசடை மேற்பிறை யானை

அரவம் வீக்கிய ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

இரவும் எல்லியும் பகலும்

  ஏத்துவார் எமையுடை யாரே.  8 

 

 

வலங்கொள் வாரவர் தங்கள்

  வல்வினை தீர்க்கும் மருந்து

கலங்கக் காலனைக் காலாற்

  காமனைக் கண்சிவப் பானை

அலங்கல் நீர்பொரும் ஆனைக்

  காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார்

  எம்மையும் ஆளுடை யாரே.  9 

 

 

ஆழி யாற்கருள் ஆனைக்

  காவுடை ஆதிபொன் னடியின்

நீழ லேசர ணாக

  நின்றருள் கூர நினைந்து

வாழ வல்லவன் றொண்டன்

  வண்டமிழ் மாலைவல் லார்போய்

ஏழு மாபிறப் பற்று

  எம்மையும் ஆளுடை யாரே.  10

 

திருச்சிற்றம்பலம்